ஒருநாள் கூத்து – +2 ரிசல்ட்

இன்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இன்று மாலையும் நாளை காலையும் வரும் தினசரிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பட்டியல் அவர்களது மதிப்பெண்களுடன் வெளியாகும், கூடவே அவர்கள் படித்த பள்ளியின் விளம்பரமும், அடுத்த நாள அவர்கள் எங்கு போனார்கள், என்ன படிக்கிரார்கள் என்று யாரும் கண்டு கொள்ள போவதில்லை.

ஏன் போன வருடமோ, அதற்கு முந்திய வருடமோ, நாம் 12ம் வகுப்பு படித்த போதோ மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியுமா? வேண்டாம், உங்களுடன் படித்தவர்களில் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் யோசித்து பாருங்கள், அது ஒன்றும் கடினமான வேலை இல்லை, இப்போது இருக்கும் இணைய உலகத்தில் எளிதாக அவர்கள் எந்த கல்லூரியில் படித்திருக்கிறார்கள், என்ன வேலை பார்க்கிறார்கள் என்று எளிதாக முகநூல் வழியாக கண்டு பிடிக்கலாம். அதை பார்த்தாலே மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்று புரிந்து கொள்வீர்கள்.

மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் முதலமைச்சர் ஆகப்போவதும் இல்லை, இந்த முறை ஏதேனும் ஒரு பாடத்தில் தவறி விடுவதால் உடலில் உள்ள எந்த உறுப்பையும் இழக்க போவதில்லை. முன்பு போல் இல்லை, இப்போதெல்லாம் 10 & 12 வது வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்த மாதமே மறு வாய்ப்பு தருகிறார்கள், அதை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

பெற்றோர்களே, நீங்கள் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது உங்களை சுற்றி நின்று 20 பேர் உற்று பார்த்தால் உங்களால் தடுமாறாமல் அந்த வேலையை செய்ய முடியுமா? அது போலத்தான் மாணவர்களின் படிப்பும், விடுங்கள் அவர்கள வாழ்க்கை அவர்கள் கையில், முடிந்த வரை அவர்களது கல்விக்கு உதவியிருப்பீர்கள், அவர்கள்து திறமை மற்றும் உழைப்புக்கேற்ற மதிப்பெண் வரும். மற்றவர்களுடன் தயவு செய்து உங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களை ஒப்பிட வேண்டாம்.

மாணவர்களே, யாரேனும் உங்களை மதிப்பெண் எவ்வளவு என கேட்டு தொல்லை செய்தால் தயங்காமல் கேளுங்கள்

“தெரிஞ்சுகிட்டு என்ன பொன்னா கொடுக்க போற?”

என்னடா இப்படி சொல்கிறான் என யாரும் தவறாக நினைக்க வேண்டாம், அனைத்து நாளிதழ்களின் பக்கங்களையும் முதல் மதிப்பெண் வாங்கியவர்களும், அவர்களது பள்ளி விளம்பரங்களும் மட்டும் நிரப்ப போவதில்லை, தேர்ச்சி பெறாததால், எதிர்பார்த்த மதிப்பெண் கிட்டததால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகளும், காணமல் போகும் சகோதர சகோதரிகளும் தான். அவர்களது பெற்றோர்களை நினைத்து பாருங்கள்.

அதிக மதிப்பெண் பெறப்போகும் மாணவர்களே, வாழ்த்துக்கள், அதனுடன் ஒரு உதவி, உங்களது கொண்டாட்டம் மதிப்பெண் குறைந்த எந்த மாணவனையும் காயப்படுத்தாதவாறு பார்த்து கொள்ளங்கள்.

இப்படி வாழ்ந்து பார்க்கலாமே…

இப்படி வாழ்ந்து பார்க்கலாமே…

*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

*’நன்றி’,’தயவுசெய்து’-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.

*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

*ரகசியங்களைக் காப்பாற்று.

*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்: பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி

*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.

*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.

*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

*’எனக்குத் தெரியாது’, மன்னிக்கவும்’, என்பதை சொல்லத் தயங்காதே..!!

அம்பெத்கர் – சமூக போராளி

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றைய நல்தினத்தில் பிறந்த ஒரு சமூக போராளி பற்றி அறிந்து கொள்வோம்.

index

சட்ட மேதை டாக்டர்.அம்பெத்கர். பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் இவருக்கென அரசாங்கம் சிலபஸ் ஒதுக்கியதால் இவருக்கான அறிமுகம் பெரிதாய் தேவைப்படாது என நம்புகிறேன். சுதந்திரத்திற்காக போராடியவர்களில் ஒருவர் என்பதும், சுதந்திர இந்தியாவிற்கு முதன்முதலாக சட்டங்களை வரையறுத்தவர் என்பதை மட்டுமே அறிந்திருந்தேன்.

அரசு தேர்விற்காக படிக்கையில் தான் மூன்று வட்ட மேஜை மாநாட்டிலும் பங்கேற்றவர் என தெரிந்த போதுதான் அவரது முக்கியத்துவம் தெரிந்தது. சுதந்திரத்திற்காக போராடியவர் என்பதை விட, தாழ்த்தப் பட்ட மக்களுக்காக போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர். வாரணிசமத்தை ஆதரித்ததற்காக காந்திஜியை நேரடியாக எதிர்த்தவர். இந்து மதத்தில் தொடர்ந்து இருந்தால் தீண்டாமையை ஒழிக்க இயலாது என்பதற்காக புத்த மதத்தை தழுவியவர்.

தீண்டாமைக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் போராடும் அனைத்து இயக்கங்களின் அலுவலகத்திலும் இவரது புகைப்படம் இருக்கும். அவரது பல கருத்துக்கள் நான் மிகவும் ரசிப்பேன். எனக்கு பிடித்த அவரது பொன்மொழிகளில் சில…

“பதவியில் இருந்து கொண்டு கடமையை செய்யாதவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை”

“ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”

“ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”

“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”

“சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”

“வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்”

கல்வியால் மட்டுமே சமுதாயத்தை உயர்த்த இயலும் என்பதை முழுமையாய் நம்பிய மனிதர். என்றாவது ஒரு நாள் அவரது நம்பிக்கை நிறைவேரும்.

மாதொருபாகன் – ஆலவாயன் – அர்த்தநாரி – பெருமாள் முருகன்

நடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய்தியாக இருந்தார். நடந்த பிரச்சனைகளை பற்றியோ, எது சரி, தவறு என்பது பற்றியோ பேச போவதில்லை. இப்பதிவின் நோக்கம் “மாதொருபாகன்- ஆலவாயன் – அர்த்தநாரி” புத்தகங்களை பற்றியது. பலர் இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருந்த போதும் பெருமாள் முருகனை நோக்கி பல சங்கங்கள் கல்லெறிய துவங்கிய போதுதான் மாதொருபாகனை வாங்க நெர்ந்தது. வாங்கும் பொழுது அதன் தொடர்ச்சியாக இரண்டு புத்தகங்களின் வெளியீடும் நடந்தது, எனவே அந்த புத்தகங்களையும் வாங்கினேன்.

மாதொருபாகன்

திருமணமாகி 8 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை இல்லாமல் வாடும் காளி-பொன்னா தம்பதியினரை பற்றியதுதான் இந்நாவல், அவர்களின் வாட்டத்தையும் விவசாய வாழ்க்கையையும், சுற்றத்தின் தூற்றலையும், சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தையும் தெளிவாய் விவரிக்கும் இந்த நாவல் எந்த இடத்திலும் சலிப்பை தராத எழுத்துநடை. போகிறபோக்கில் வந்து போகும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை ஈர்க்கும். குழந்தை இல்லாததை தம்பதியினரே பெரிதாய் எண்ணாத போதும் சுற்றியுள்ள சுமூகம் எங்ஙனம் அதை சுட்டிக்காட்டும் என விவரித்திருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எதார்த்தம். காளி-பொன்னா தம்பதியினரின் குடும்பத்தினர் கோவில் திருவிழாவின் 13ம் நாள் இரவு பொன்னாவை அனுப்பலாம் என முடிவு செய்து காளியிடம் வினவ காளி அதற்கு ஒப்பவில்லை. 13ம் திருவிழா நாள் அன்று குழந்தை இல்லாத பெண்களும், குழந்தை இருந்தும் ஆண் குழந்தைக்காக ஏங்கும் பெண்களும் மலையை சுற்றி வரும் ஆண்களில் தங்களுக்கு பிடித்தவர்களுடன் கூடி குழந்தை வரம் வாங்குவார்கள்.

அந்த வரம் தரும் ஆண்கள் மலை மேல் இருக்கும் ஈசனின் வடிவமாகவே கருதப்படுவார்கள். பிறக்கும் குழந்தையினை சாமி பிள்ளை என்றே அழைப்பார்கள். ஊரில் ஏதேனும் முடிவெடுக்க குடவோலை குலுக்கையில் சீட்டெடுக்க முதல் உரிமை இத்தகைய சாமிபிள்ளையினையே போய் சேரும். எங்கள் ஊர் பகுதியிலும் இத்தகைய நம்பிக்கை உண்டு. மேட்டூர் அருகே உள்ள பாலமலை மேலுள்ள மாதேஸ்வரனை வணங்கி, கோவிலருகே உள்ள புல்லில் ஒரு கையால் முடிச்சிட வேண்டும். இப்படி செய்தால் திருமணம் தள்ளி போகாமல் உடனே நடைபெறும். திருமணம் முடிந்த பின் துணையுடன் வந்து அங்கிருக்கும் புல்லிலுள்ள முடிச்சினை அவிழ்த்திட வேண்டும். நான் முடி போட்டு திருமணமும் செய்து விட்டென். போய் அவிழ்க்க வேண்டும்.

சரி கதைக்கு வருவோம். தன்னைத் தவிற யாருடனும் தன் மனைவி இணைய கூடாது. கடவுள் வந்து தருவதாய் இருந்தால் என் உடலில் இறங்கி தரட்டும் என் காளி பிடிவாதம் பிடிக்க, பொன்னாளும் கணவன் சொல்லை தட்டாமல் இருக்க, வேறு வழியில்லாத வீட்டினர் காளி சம்மதித்து விட்டான் என பொய் சொல்லி காளிக்கு தெரியாமல் பொன்னாவினை திருவிழாவிற்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் காளிக்கு உண்மை தெரிந்த உடன் அவனுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுவதாக இந்நுல் முடிவடைகிறது.

ஆலவாயன்

காளி தற்கொலை செய்து கொள்வதாக துவங்கும் இந்நூல் அதன் பின்னரான் பொன்னா வாழ்க்கையை விவரிக்கிறது. கணவன் இறந்த பின்னர் வாழ வெறுப்புடன் இருக்கும் பொன்னாவின் மனதை மாற்றுகிறது அவள் வயிற்றில் வளர ஆரம்பிக்கும் சிசு. விதவை பெண் கர்ப்பமானால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இந்த புத்தகம் தெள்ள தெளிவாக விளக்குகிறது. முதல் பாகத்தினை படிக்காமலும் இதனை படிக்கும் வகையில் தன்னிறைவு பெற்று விளங்குகிறது இந்த நூல்
(மூன்று நூல்களுமே). மாதொருபாகனுக்கு எந்த வகையிலும் குறையாத எழுத்து நடை. அதில் தம்பதியினரிடையே நிகழும் ஊடலும் கூடலும் இதிலும் வருகிறது. கண்டிப்பாக ஒரு கிராமத்து விவசாயியின் வீட்டிற்கு நம்மை அழைத்து செல்லும் விவரிப்பு.

அர்த்தநாரி

காளி தற்கொலைக்கு முயற்சிக்கும் பொழுது அவன் தாய் வந்து தடுத்து விடுவதாக ஆரம்பிக்கும் இந்த புத்தகத்தில் தனது விருப்பமில்லாமல் சென்று வந்த பொன்னாளை வெறுத்து ஒதுக்கி விடுகிறான் காளி, ஆனால் ஊரறிய வெளயே சொல்லி தள்ளி வைக்க முடியாதபடி செய்துவிடுகிறது பொன்னாளின் வயிற்றில் வளரும் சாமிபிள்ளை. வெளியே சொன்னால் தான் வறடன் என கேலி பேசும் ஊராரை எதிர்கொள்ள திணவில்லாமல் வேண்டா வெறுப்பாய் வாழும் காளியின் மனது கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து பொன்னாளுடன் இணைவது தான் இந்நூலின் முடிவு.

நீங்கள் வக்கிரம் என நினைத்தால் வக்கிரமாகவும் எதார்த்தமாக நினைத்தால் எதார்த்தமாகவும் தெரியும் பல விஷயங்களை எழுத்தாளர் தைரியமாய் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் என்றால் காளியின் சித்தப்பா நல்லுப்பிள்ளை தான். ஊரே குடுமி வைத்திருக்கும் பொழுது கிராப் வெட்டிக் கொள்வதில் துவங்கி, சொத்துக்களை பிடுங்கி கொள்ள பார்க்கும் தம்பிகளை பஞ்சாயத்தில் சமாளிப்பதிலும், அதே சொத்துக்காக கடைசி தம்பி தனது மனைவியை கூட்டிக் கொடுக்க முயலுகையில் எடுக்கும் முடிவிலும், குழம்பி போய் இருக்கும் காளியை தெளிவாக்கும் நல்லுப்பிள்ளை சித்தப்பா பாத்திரத்துக்காகவே மூன்று நூல்களையும் இன்னொரு முறை படிக்கலாம்.

தமிழ் வாசிப்பை நேசிக்கும், தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை அறிய முற்படும் ஒவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இம்மூன்றும்.

ஒரு கைதியின் டைரி

எனக்கு தெரிந்து யாரிடமும் இந்த பழக்கம் இல்லை, யாரை பார்த்து ஆவல் கொண்டேன் என்றும் தெரியவில்லை, எட்டாம் வகுப்பில் இருந்தே எனக்கு டைரி எழுதும் ஆவல் இருந்தது. ஒன்பதாவது படிக்கையில் என் தந்தைக்கு LICல் கொடுத்த டைரியை வைத்து நான்கு நாட்கள் எழுதி இருப்பேன், படிக்காமல் காதல் கவிதை எழுதுகிறான் என புகார் போனது. நான் அதற்கென தனியாக ஒரு குயர் நோட்டு வாங்கி வைத்து எழுதி கொண்டிருப்பது வீட்டிற்கு தெரியாது, ஆனால் பாவம் கவிதை நோட்டை காப்பாற்றுவதற்கு வேறு வழி தெரியாமல் டைரியை அப்பாவிடம் பழி கொடுத்தேன், அவர் அதை எரித்து விட்டு படிப்பை கவனிக்க சொன்னார், நான் நல்ல பிள்ளையாக கவிதைகளில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தேன்…

பின்னர் 2005ம் வருடம் கல்லூரி விடுதியில் நிறைய நேரமும் தனிமையும் கிடைக்க முழுமையாய் டைரி எழுத துவங்கினேன். அதுவும் ஆங்கிலத்தில். ஏனேனில் நான் +2 வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றவன். பொறியியல் படிப்பினை ஆங்கிலத்தில் எதிர்கொள்ள சிரம்ப்பட்டேன். டைரியை ஆங்கிலத்தில் எழுத முயற்சித்தால் நண்பர்கள் உதவியுடன் அம்மொழியினில் தேறலாம் என முயன்றேன், நல்ல பலனும் கிடைத்து. அடுத்த வருடம் முதல் தமிழில் எழுதினேன்.

டைரி எழுதுவதா? யாரேனும் படித்து விட்டால் என்ன ஆவது? என்ற அச்சம் வருவது இயல்புதான், எனக்கும் வந்தது, அந்த அச்சம் விலகியதற்கு ஒரு சுவாரசியமான சம்பவம்தான் காரணம்…

என் அறைத்தோழன் ஒருவன் தனது பிறந்தநாளன்று எங்கள் அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி கொடுத்து விட்டு, அவனது தோழிக்கு 60₹க்கு பெரிய சாக்லேட் வாங்கி கொடுக்க என்னையும் உடன் அழைத்து சென்றிருந்தான். இச்சம்பவத்தை நான் எனது டைரியில் எழுதி வைக்க, சில நாட்கள் கழித்து எங்களது மற்றொரு நண்பன் பொழுது போகாமல் எனது டைரியை எடுத்து படித்து சாக்லேட் விஷயத்தை அறிந்து கொண்டான். மெதுவாய் அவனிடம் இதைப்பற்றி பேச்சை எடுத்து பெரிய தகராறில் முடிந்தது. சமாதானப்படுத்திய நண்பர்கள் கடைசியாக சொன்ன தீர்ப்பு “யாரும் கதிரவன் டைரியை படிக்க கூடாது” என்பது தான்.

2005 டைரி மட்டும் தான் நானாக வாங்கினேன். அதன் பின்னர் வருட கடைசியில் நண்பன் ஒருவனுடன் கடை கடையாய் அலைந்து தேர்ந்தெடுப்போம், போம் என சொல்லக்கூடாது, அவன்தான் தேர்ந்தெடுப்பான். ஒவ்வொரு வருட இறுதியிலும் ஏதேனும் வேலையாக வேறு மாவட்டங்களுக்கு செல்கையில் அங்கிருந்து டைரி வாங்குவதை வாடிக்கையானது.

கல்லூரி முடிந்த பின்னர் அவன் வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல துவங்கினான். ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு மாநிலம். சிவில் படித்தவர்களின் தலைவிதி அப்படி. நான் தமிழ்நாட்டை பார்ததுக்கொள்ள ஆள் வேண்டுமென்று இங்கேயே இருந்துவிட்டேன். அவனும் விடாமல் வருடாவருடம் தவறாமல் டைரி வாங்கி அனுப்புவான்.

கோவை வந்த பின்னர் டைரி எழுத சரியான சூழல் அமையவில்லை. அதிக நேரம் இணையத்தில் செலவிடுவது முக்கிய காரணம். இந்த வருட துவக்கம் முதல் வாழ்வில் பல புது பிரச்சனைகள்(யாரும் எனக்கு திருமணமானதை யோசிக்க வேண்டாம்). இன்று காலை வேறு எதையோ தேடப்போக நண்பன் அனுப்பிய 2015க்கான டைரி கிடைத்தது.

ஒன்னே முக்கால் வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அமர்ந்து டைரி எழுதினேன். கொஞ்சம் தளர்வாய் உணர்ந்தேன்.எனது பல எண்ணங்களுக்கு வடிகாலாய் விளங்கும் எனது 10 வருட டைரி எனும் நண்பனுடன் இனி தினமும் உரையாடலாம் என்றிருக்கிறேன்.

அட, அதென்ன கைதியின் டைரி என யோசிக்கிறீர்களா? எனது டைரியில் பல வாக்குமூலங்கள் இருக்கின்றன. மாட்டினால் என்னுடன் எனது பல நண்பர்கள் அவர்களது பெற்றோர் & மனைவி வாயிலாக மரணதண்டனை பெறுவார்கள். அதை குறிக்கவே “கைதியின் டைரி” எனும் தலைப்பு.

என் மனைவியிடம் சிக்க வைக்கலாம் என யோசிக்கும் நண்பர்களின் கவனத்திற்கு..

“ஏற்கனவே தண்டனை நிறைவேற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறது”

மாமனாரிடம் ஒரு கேள்வி

4 நாள் முன்னாடி மாமனார் போன் பண்ணி யுகாதிக்கு உங்களை அழைச்சுட்டு போகனும், 2 நாள் லீவ் போட்டு வரமுடியுமா? ன்னு கேட்டார்

நானும் பார்த்துட்டு சொல்றேன்னுட்டு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டா எல்லோரும் என்னை பார்த்து கேட்கறாங்க “மீரு தெலுகா?”னு

ஒரு மஞ்சள் சாரி பச்சை தமிழனுக்கு வந்த சோதனையை பார்த்திங்களா? 

சுத்தி வளைக்காம நேரடியா மாமனார்கிட்டயே “எதுக்கு மாமா நமக்கு யுகாதிலாம்? வேண்டாம் விடுங்க”னு சொல்லிட்டேன்.

எதுக்குப்பா விசாரிப்போம்னு மனைவிகிட்ட “உனக்கு தெலுங்கு தெரியுமா? உங்க வீட்ல யாருக்காவது தெலுங்கு தெரியுமா?”னு கேட்டுட்டேன்

“அதெப்படி எங்க வீட்டை இழுக்கலாம்?”னு ஆரம்பிக்கவும்

ஆஹா மெயின்சுவிட்ச்ல கைய வச்சுட்டமேனு சுதாரித்து

“இல்லம்மா, சும்மா விசாரிச்சேன்”ன்னு சமாளிச்சேன்.

அடுத்து தான் ஆரம்பிச்சது பிரச்சனை, முதல் நாள் அக்கா போன் பண்ணாங்க “ஏண்டா, உங்க மாமனார் தங்கமான மனுசன்டா, அவரை ஏண்டா எதிர்த்து பேசற?”னாங்க

அடுத்த நாள் அண்ணன் போன் பண்ணி “எங்க மாமனார் வீட்லதான் இதெல்லாம் செய்யலை, உன்னை கூப்பிட்டா பேசாம லீவ் போட்டு போக வேண்டியது தானே?” ங்கறார்.

என் மனைவியோட தோழி போன் பண்ணி புடவை கடைல எங்க சித்தி அவங்க குரூப்கிட்ட பேசிட்டுருந்தத கேட்டாளாம் “கதிரு சின்னதுல இருந்தே இப்படித்தான், ஏன் எதுக்குனு ஏடாகூடமா ஏதாவது கேட்டுகிட்டே இருப்பான்”னு யுகாதி பிரச்சனையை சொல்லிட்டு இருந்தாங்களாம்..

அந்த தோழி “உங்க வீட்டுக்கார் நாம் தமிழர் கட்சில இருக்காரா?”னு வேற கேட்டாளாம்.

எல்லாருக்கும் மேல் கடைசியா 10 நாளா சின்ன மனஸ்தாபத்துல பேசாம இருந்த எங்கப்பா போன் பண்ணி “டேய் மதியம் லீவ் போட்டு வந்துரு, எப்ப வருவனு உன் மாமனாருக்கு தகவல் கொடுத்துரு”ன்னார்

இதுக்கு மேல் கேள்வி கேட்டா குடும்பத்தை விட்டு தள்ளி வச்சுருவாங்கனு லீவ் வாங்க பிரின்சிபல்கிட்ட போனா அவர் மேலும் கீழும் பார்த்தார்.

வருச கடைசில அதிலும் வாரக்கடைசில லீவ் போடறவங்க அடுத்த காலேஜ்க்கு இண்டர்வியுக்கு போறாங்கனுதான் அர்த்தம், சந்தேகத்தோடவே கையெழுத்து போட்டார்…

கிளம்பி ஊருக்கு போய்கிட்டே இருக்கேன்…

பேக்கை மாட்டிகிட்டு வடிவேல் புலம்பிகிட்டே போவாரே “சொல்லுங்கடா, எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன்”னு அதே மாதிரி குழப்பத்தோட போய்கிட்டே இருக்கேன்

“எதுக்குப்பா தமிழனுக்கு யுகாதி?” 

இந்தியன் என்றால் காமுகனாம்

ஒரு குடும்பத்திற்குள் எவ்வளவுதான் குழப்பங்கள், பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் இருந்தாலும் அது அந்த வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் வரை தான் கவுரவம், வீட்டினுள் நடக்கும் சண்டையின் சத்தம் கூட அண்டை வீட்டிற்கு கேட்க கூடாது என்று நினைப்பவர்கள் தான் இந்தியர்கள்(அதிக பட்சம் அப்படித்தான் என்று வைத்துக்கொள்வோம்). நாட்டிற்கும் வீட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. நம் நாட்டிற்குள் நடக்கும் அவலங்கள் அண்டை அயல் நாட்டினருக்கு தெரியாத வண்ணம் இருக்க வேண்டும் என்று இன்றைய இணைய யுகத்தில் நினைப்பது சாத்தியமற்றதுதான். இருந்தாலும் இப்படி ஒரு அடையாளம் நமக்கு மிகவும் அவமானகரமான ஒன்று.

நம் நாட்டிலுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களுடைய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளில் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு அவர்கள் அங்கு பணிபுரியும் பேராசிரியரிடம் முதலில் விண்ணப்பித்து, அவர்களின் கீழ்தான் சென்று கற்கவோ ஆராயவோ இயலும். சமீபத்தில் ஜெர்மனியின் லெய்ப்ஜிக் பல்கலைக்கழக பேராசிரியை பெக்சிங்கரிடம் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற இந்திய மாணவர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரிப்பதற்கு அவர் கூறிய காராணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகம் நடப்பதால், இந்திய மாணவருக்கு பயிற்சி அளிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.(newslink)

அந்த கடிதத்தை மாணவர், தில்லியில் உள்ள ஜெர்மன் தூதருக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது என்பதெல்லாம் வேறு விஷயங்கள். இந்த சம்பவத்தில் நாம் தெரிந்து கொண்ட நீதி அயல்நாடுகளில் நமது அடையாளம் “இந்தியன் என்றால் காமுகன், எந்த வயது பெண்களையும் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய தயங்க மாட்டார்கள்” என்றுதானே அர்த்தம்.

மேல் இடங்களில் பேசி அந்த மாணவன் அந்த பல்கலைகழகத்திற்கே சென்றாலும் அவனிடம் அங்கு பணி புரியும் பெண்கள் அவனிடம் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என் யோசியுங்கள். அரபு நாடுகளை சேர்ந்த முஸ்லீம்களை தீவீரவாதிகளாக அடையாளப்படுத்திய உலக ஊடகங்கள் நமக்களித்திருக்கும் அடையாளத்தை நம்மால் முழுமையாக ஏற்க இயலாது, இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் அதிகம் நடக்கும் பாலியல் பலாத்காரங்களால் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் ஆண்களுக்கு அவப்பெயர்.

அதிகம் நடக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கு யார் காரணம் என நமக்குள் அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு தண்டனைகளையும் பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகளையும் அதிகப் ப்டுத்த வேண்டியது அரசின் கடமை. முடிந்த வரையில் தனிமையில் பயணிக்கும் பெண்களை கண்டால் உங்களால் முடிந்த தூரம் வரை பாதுகாப்பாக செல்ல எத்தனியுங்கள், அதை விடுத்து பெண்கள் இரவில் வெளிவருதல் தவறு என்று மூடத்தனம் பேச வேண்டாம்.

இச்சம்பவங்களை மிகைப்படுத்தி பிபிசி வெளியிட்டுருப்பதாய் கூறினாலும் அப்போதாவது நம் கனவான்களுக்கு உரைக்கிறதா என்று பார்ப்போம்…

என் நாட்டில் நடக்கும் பலாத்கார ச்ம்பவங்களுக்காக ஒரு ஆணாய் வெட்கி தலை குனிகிறேன்.

புலியூர் முருகேசர்கள்

எழுத்தாளர்கள் தாக்கப்பட்டதாக செய்தி கேளவிப்பட்டால் அனைவரும் முதலில் கேட்பது “அப்படி என்ன எழுதுனார்?” என்றுதான், செய்தியை கேட்டவுடனே “அய்யய்யோ ஏங்க அது எப்படிங்க ஒரு எழுத்தாளரை போய் தாக்கலாம்?” என்று கேட்பவர்கள் மிக குறைவு.

ஏன் என்றால் எழுத்தாளர்கள் என்றால் ஒன்றும் பெரிய தேவதூதர்கள் பிம்பமெல்லாம் இந்தியாவில் கிடையாது, குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் மரியாதை நடிகர்களுக்குத்தான், அடுத்தது அரசியல்வாதிகளுக்கு, அடுத்தது தான் (பிரபல) எழுத்தாளர்களுக்கு… இவர்களுக்கெல்லாம் அடுத்த படிதான் சமூகத்திற்காக பணியாற்றுபவர்கள்.

இந்த நிலைமையில் எழுத்தாளர்கள் யாராயிருப்பினும் நேரடியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எதிர்ப்பது முழு வேகத்தில் வாகனத்தோடு போய் சுவற்றில் முட்டுவதற்கு சமம், உடனே இது இந்தியா, எல்லோருக்கும் எழுத்துரிமை உண்டு என்று பொங்க வேண்டாம்…

எழுதுங்கள், சமூகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கும் எதிராய் எழுதுங்கள், வாசிக்கும் அனைவரும் ஆதரவளிக்கிறோம். ஆனால் ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கு அவரது சமூகத்தினுடைய அடையாளத்தை சொல்லியே ஆக வேண்டும் என்று அவசியமில்லையே??? 

இல்லை நான் யார் குற்றம் இழைத்தாலும் எதிர்வினையாற்றுவேன் என்றால் தினசரி நாளிதழ்களில் எழுதுங்கள், அதிலேயும் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி மட்டும்தான் எழுதுவேன் என்றால் எந்த வாசிப்பாளனும் ஆதரவு தெரிவிப்பதென்ன, உங்கள் எழுத்துக்களை வாசிக்க கூட மாட்டான் .

ஒரு வாசிப்பாளனாக எனது நிலைப்பாட்டை கூறிவிட்டேன், அடுத்து புலியூர் முருகேசன் எழுதிய சர்ச்சைக்குரிய கதையை படித்தேன், அவரிடம் கேட்க விரும்பிய கேள்விகள்

“பெருமாள் முருகன் பிரச்சனையே இன்னும் ஓயாத இந்த காலகட்டத்தில் என்ன அவசரம் இந்த கதைக்கு?”

“இந்த கதையின் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன? வன்புணர்சசிகள் குறித்தான எதிர்வினைதான் உங்கள் கருப்பொருள் என்றால் அதற்கு அந்த சமூகத்தை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா?”

இது புனைவா? இல்லை நீங்கள் கண்ட கதையா? புனைவென்றால் நீங்கள் எழுதிருக்க வேண்டிய பத்திரிக்கையின் நிறம் மஞ்சள், கண்ட நிகழ்வென்றால் உங்கள் கரு இது போல் யாரும் செய்ய கூடாது என்பதை கூறியிருக்க வேண்டும், மாறாக இந்த் சமூகத்தினர் இப்படித்தான் இருக்கிறார்கள் என அனைவருக்கும் வெளிச்சம் போட்ட காட்டத்தான் முனைந்திருக்கிறிர்கள்.

உதாரணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்வினை விவரிக்கும் இடத்தில் கூட அந்த சமூகத்தினர் பணத்தாசை பிடித்தவர்கள் என் ஏன் மொத்தமாக குறிப்பிட்டுள்ளீர்கள்?

மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் உங்களிடம் வனமுறையை பிரயோகித்தது குற்றம்தான், ஆனால் வன்முறையை தூண்டும் விதமாக நீங்கள் எழுதியது பெருங்குற்றம்.

சிலோன் மாப்ளே

“அந்த ருசி என் நாக்கில் இப்பவும் அப்படியே இருக்கு” இந்த வார்த்தைகளை சொல்ல வைக்கும் படியான உணவுகளை சாப்பிட்டுருக்கிங்களா? ஒவ்வொருவருக்கும் வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் அவர்களது மூளையில் பதியுமளவுக்கான ருசியான உணவை சுவைத்திருப்பார்கள், அது எதுவென்று இப்போது யோசித்தாலும் எச்சில் ஊறும்…

கல்லூரியில் படிக்கையில் உடன் படித்த நண்பனின் பூர்வீகம் இலங்கை. அவர்களது தாத்தா காலத்திலேயே தமிழகம் வந்து விட்டார்கள், இரண்டு தலைமுறை கடந்ததால் அவன் பேசும் தமிழில் பெரிய வித்தியாசம் தெரியாது, ஆனால் சமையல் அதே தித்திக்கும் சிலோன் சமையல்…

ஒரு நாள் எதெச்சையாக அவ்ன் கொண்டு வந்திருந்த மதிய உணவை ருசித்து, பிடித்து போய் தினமும் அவன் கேட்கும் உணவை ஹோட்டலில் வாங்கி கொடுத்து விட்டு அவனது உணவை நான் ருசிக்க துவங்கினேன்…

சமைப்பவர்களிடம் எத்தனை நாள் இப்படி ஏமாற்ற முடியும்? அரசல்புரசலாக அவன் வீட்டிற்கு என் சங்கதி தெரிந்தது, பிறகு அவனுக்கும் சேர்த்து(எனக்குதான் முதல் மரியாதை) கொடுத்து விட துவங்கினர், உடன் அவர்கள் வீட்டிற்கு மாதம் இரண்டு முறை விருந்து உண்ணவும் செல்ல துவங்கினேன்.

சமைக்க தெரிந்தவர்கள், சமைப்பவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது அவர்களது சமையலை ரசித்து, ருசித்து சாப்பிடும் ஒருவரை…

என் நண்பன் வீட்டிற்கு அந்த ஒருவனாக நான் இருந்தேன், ஒவ்வொரு முறை உண்ணும் போதும் புத்தகம் படிப்பது போல, பிடித்த இயக்குனரின் படம் பார்ப்பது போல ரசித்து, ருசித்து உண்பேன், கூச்சபடாமல் சிலாகித்து புகழ்வேன்.

வாழ்நாள் முழுவதும் அந்த தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்படும் தித்திக்கும் உணவை சுவைக்க விரும்பினேன் . அதற்காக அடிக்கடி அவன் பெற்றோரிடம் சிலோன் சமையல் தெரிந்த பெண் கிடைத்தால் சொல்லுங்கள், எதையும் வேண்டாமல் திருமணம் செய்து கொள்கிறேன் என்பேன்.

இது நடந்தது எட்டு வருடங்களுக்கு முன்பு, அதன் பின் வாழ்க்கை எங்களை ஒவ்வொரு மூலைக்கு தூக்கி எறிந்தது. சமீபத்தில் எனது திருமணத்திற்கு அழைக்க அவர்கள் வீட்டிற்கு சென்றேன்.

எப்போதும் என்னை அழைப்பதை போலவே அழைத்து கேட்டார்கள்
“என்னா, சிலோன் மாப்ளே, எங்கூர் பொண்ணு கேட்ட?, வேண்டாமா?”

சிரித்து சமாளித்து விட்டு வந்தேன், சமீபத்தில் நண்பர் Vijay Bhaskarvijay இலங்கை உணவை பற்றி எழுதிய பதிவு ஒன்றை படித்த பின் இந்நினைவுகள் வந்தது. எழுத இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.

அந்த நண்பன் யாரென்று சொல்லவில்லையே? நம்ம Deepak kumar தான்

இதுக்கு நீ சரிப்பட்டு வருவடா

“டேய் தம்பி உள்ற வா”

“உட்கார் உட்கார்”

“சரி சொல்லு, எங்க படிச்ச?”

“சேலம் சோனா காலேஜ்ல, சரி, இந்த பேப்பர்ல உன் வீட்டு அட்ரஸ் எழுது?”

“உனக்கு ஹிந்தி தெரியுமா?”

“கம்ப்யுட்டர்ல வேலை பார்க்க தெரியுமா?”

“சரி, எதுல வந்த? அந்த வண்டி சாவிய கொடு, போன் வச்சுருக்கியா கொடு, நான் சொல்றத எழுதிக்க, இந்த இடத்துக்கு விசாரிச்சு போ, போய்ட்டு நான் அனுப்பனேன்னு சொல்லு”

பட்டம் படித்து முடித்ததும் வேலைக்கு எங்கே செல்வதென்று தெரியாமல் தடுமாறுகையில் அண்ணன் மூலமாக இரும்பு தொழிற்சாலையினுள் கட்டுமான பணி செய்யும் நிறுவனத்தின் மேனேஜரை சந்திக்க சென்றேன், அவர் என்னை கேட்ட கேள்விகள்தான் மேலே படித்தவை…

தொழிற்சாலையின் இருபுறமும் நுழைவாயில் உண்டு, இரண்டு நுழைவாயிலுக்கும் இடையே 10 கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஒரு வாயிலினுள் உள்ளே வரும் தாது பொருளில் இருந்து, இரும்பை பிரித்து உருக்கி, தேவையான வடிவில் அளவில் வார்த்து மறு வாயிலின் வழியாக எடுத்து செல்வார்கள்.

எனக்கு மேற்படி நேர்முக தேர்வு நடந்த இடம் முதல் நுழைவாயில் அருகே, நான் அந்த தொழிற்சாலையில் நுழைந்ததும் அதுவே முதல் முறை, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான அடையாளங்களை குறிப்பெடுக்க சொல்லி அங்கு செல்லுமாறு பணித்து விட்டார்கள்.

முதல் முறையாக, பிரம்மாண்டமான தொழிற்சாலையில் நுழைந்த யாருக்கும் உடனே வேலை ஓடாது, புதிதாய் வேடிக்கை பார்க்க சுற்றி பல விஷயங்கள் அங்கே நம்மை ஈர்க்கும், பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம், கிராமத்தில் JCPயால் குழி தோண்டுவதை வேடிக்கை பார்ப்பதை போல…

எங்கு பார்த்தாலும் தலையில் ஹெல்மெட் அணிந்த வட இந்திய முகங்கள், படிக்கற காலத்திலேயே புதிதாய் யாரிடமும் பேச தயக்கம் விடாது, ஆனால் வேறு வழியில்லை, பேசி கேட்டால்தான் நான் செல்ல வேண்டிய இடத்திற்கான வழி தெரியும்..

எனக்கு அப்போது ஹிந்தி சுத்தமாக தெரியாது, ஆங்கிலத்தில் பேச தைரியமில்லை, தமிழிலேயே வழி கேட்டேன், அவர்களுக்கு புரிந்திருக்கும் போல, பிழைக்க வந்த இடத்திற்கான மொழியை கற்க ரொம்ப காலம் பிடிக்காது அல்லவா? ஆனாலும் எனக்கு தமிழில் பதிலளிக்க அவர்களுக்கு தெரியவில்லை, தெரிந்த மொழிகள் அனைத்தும் கலந்து வழி சொன்னார்கள், இது போல 8 இடத்தில் வெவ்வேறு மொழி பேசுபவர்களின் வழி கேட்டு சென்றேன்.

கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் கடந்து இலக்கை நெருங்கினால், என்னை அனுப்பியவர் என்னை வரவேற்றார்…

“தம்பி, வா வா, இன்னைக்கு என்ன வெள்ளிக்கிழமையா? திங்கள் இல்லை புதன் கிழமை வேலைக்கு வந்துடு, கிளம்பு”

எனக்கு எதுவும் புரியவில்லை, அதற்கு பல நிறுவனங்கள் ஏறி இறங்கியுள்ளேன், கட்டிட துறை சார்ந்த பல எழுத்து/நேர்முக தேர்வுகளைத்தான் எதிர்கொண்டிருக்கிறேன். இவ்வகை இண்டர்வியு எனக்கு பிடிபடவில்லை, வெறுமனே என் அண்ணனுக்காக வேலை தருவதாக இருந்தால் இப்படி அலையவிட தேவையில்லையே???

வீட்டிற்கு வந்து அண்ணனிடம் கேட்டதில் “அவர் உனக்கு வச்ச டெஸ்ட்ல நீ பாஸ் பண்ணிட்டடா” என்றார்.

“புரியலையே”

“அவர் கேட்ட எல்லா கேள்விக்கும் நீ தெரியாதுன்னு உண்மையை சொன்ன, அப்ப உன்னை நம்பலாம்னு முடிவு பண்ணிருப்பார், தெரியாத இடத்துக்கு போறப்ப தயக்கமில்லாம வழி கேட்டு தெரிஞ்சுகிட்டு சீக்கிரமா போனதுல, வேலை தெரியலைன்னாலும் கூச்சப்படாம கேட்டு கத்துகிட்டு செய்றவன்னு முடிவு பண்ணிருப்பாரு”

“தெளிவா சொல்லு”

“டேய், உனக்கு வேலை தெரியாது, ஆனா கத்துகிட்டு பண்ற கெப்பாசிட்டி இருக்குன்னு நம்பி வேலை கொடுக்கறாரு, போதுமா?”

“ஓகோ, இப்படி செக் பண்ணித்தான் எல்லாரையும் வேலைக்கு எடுப்பாரா?”

“வேலை தெரியாத யாரையும் எடுக்க மாட்டாங்க, தெரிஞ்ச பையங்கறதால இந்த டெஸ்ட் மட்டும் வச்சு எடுத்துகிட்டார்”

கொடுமை என்ன தெரியுமா மக்களே? எனக்கு அங்க வேலைக்கு போக பிடிக்காதாலதான் எல்லா கேள்விக்கும் தெரியாதுன்னு பதில் சொன்னேன், எப்படியாவது வீட்டுக்கு சீக்கிரம் போகனும்னுதான் முடிஞ்ச வரைக்கும் வேகமா வழி கேட்டு போனேன், நான் முதன்முதலாக 2008ல் வேலைக்கு போக ஆரம்பத்ததுக்கு இந்த சம்பவம்தான் ஒரு முக்கியமான காரணம்…

வாழ்வின் பல தருணங்களில் நாம் குதித்து குட்டிக்கரணம் அடித்து “அதுக்கு நான் சரிப்படமாட்டங்க” என்றாலும் விதி விடாமல் “இதுக்கு நீ சரிப்பட்டு வருவடா” என்று இழுத்து சென்று விடுகிறது. அத்தகைய தருணங்களில் அந்த பாதையிலேயே போய் விடுவது தான் சாலச்சிறந்தது “வேறு வழி இல்லாததால்?”