EYES WIDE SHUT (1999) – விமர்சனம்

காதல் அல்லது காமம், என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இந்த காதல் அல்லது காமம் ஒருவரிடம் மட்டும்தான் வருமா? ஒருவரிடம் வந்த பின்னர் வேறொருவரிடம் வராதா? மிகவும் அந்நியொன்யமாய் இருக்கும் தம்பதிகளில் கணவனோ அல்லது மனைவியோ தங்கள் துணையை தவிர வேறு யாரிடமும் மையல் கொண்டதே இல்லை என உறுதியாக சொல்ல முடியுமா? உணர்வு சம்பந்தப்பட்ட, சிக்கலான விஷயம் இது. இத்தகைய தாம்பத்தியத்தை மையமாக கொண்டு வந்த படம் தான் Eyes Wide Shut.

eyeswideshut

ஒரு அழகான, மருத்துவ தொழில் புரியும் இளைஞன் தனது மனைவியுடன்(மனைவியும் அழகுதான்) ஒரு விருந்துக்கு செல்கின்றார். விருந்து என்றாலே கொண்டாட்டம் தானே? அனைத்து வகை கேளிக்கைகளும் இருக்க, கணவனும் மனைவியும் ஆளுக்கொரு புறம் நகர்ந்த பின்னர் ஓவ்வொருவருக்கும் அழைப்பு வருகிறது. ஆம், கணவனை இரண்டு பெண்கள் அழைக்கின்றனர். மனைவியை ஒருவர் முயற்சிக்கிறார். இருவரும் வெவ்வேறு இணைகளுடன் நெருங்கி பேசிக் கொண்டிருப்பதை இருவரும் தொலைவில் இருந்தே கவனிக்கிறார்கள். இருவரும் கட்டுப்பாடுடன் இருப்பதால் தங்கள் துணைகளுக்கு துரோகமிழைக்காமல் திரும்புகின்றனர்.

மற்றொரு நாள் கணவனும் மனைவியும் தனி அறையில், மெலிதான போதையில், விருந்துக்கு சென்ற இடத்தில் நடந்த விஷயங்களை பற்றி விவாதிக்க துவங்குகின்றனர். விவாதம் முற்றும் கட்டத்தில் கணவன் “நான் உனக்கு துரோகம் செய்யவில்லை. நீயும் எனக்கு துரோகம் செய்ய மாட்டாய் என நம்புகிறேன்” என சொல்கிறான். அதற்கு மனைவி “நான் துரோகம் செய்ய மாட்டேன் என உனக்கு தெரியுமா?” என கேட்டுவிட்டு ஒரு இரகசியத்தை சொல்கிறாள். அதை கேட்டதும் கணவனுக்கு அதிர்ச்சியில் போதை தெளிந்து விடுகிறது…

அந்த அதிர்ச்சியினை மேலும் வளர்க்க விடாமல், கணவனுக்கு ஒரு வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அங்கு சென்று தனது நோயாளியின் மகளை பார்ப்பவனுக்கு, அவள் இன்னொரு அதிர்ச்சி தருகிறாள். ஏற்கனவே மனைவி கூறிய விசயம் மனதை அரித்து கொண்டிருக்க எங்கு செல்வது என தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் நாயகன், ஒரு பாரில் தன்னுடன் மருத்துவ கல்லூரியில் படித்துவிட்டு பாதியிலேயே வெளியேறிய நணபனை சந்திக்கிறான். அந்த நண்பன் தான் ஒரு விநோதமான காரியத்திற்கு செல்ல போவதாய் சொல்கிறான். நாயகனும் தன் மனநிலையை மாற்ற உதவும் என நினைத்து தானும் வருவதாய் வலியுறுத்தி ஒப்புதல் பெறுகிறான். அநத இடத்தில் தனது அடையாளம் வெளிப்படாமல் இருக்க முகமூடி கட்டாயம் தேவை என்பதால் தனக்கென ஒரு முகமூடி வாங்கி கொண்டு செல்கிறான்.

அந்த விநோதமான இடத்தில் நாயகனை முதலில் யாரும் கவனிக்கவில்லை. ஆனால் ஒரு பெண் ஆரம்பத்தில் இருந்து நாயகனையே கவனிக்கிறாள். அவனை தனிமையில் சந்தித்து, விரைவாக அங்கிருந்து கிளம்ப சொல்கிறாள். நாயகன் கிளம்புவதற்குள் அங்கு இருப்பவர்களிடம் மாட்டி கொள்கிறான். ஒரு வழியாக அந்த இடத்தில் இருந்து தப்பித்து, விடியும் வேளையில் வீட்டிற்கு வருகிறான். அங்கு உறங்கி கொண்டிருக்கும் மனைவி சத்தமாக சிரித்து கொண்டிருக்கிறாள், எழுப்பி கேட்ட பின், அவள் தனக்கு வந்த கனவு பற்றி கூறிவிட்டு அழுகிறாள். அந்த கனவும், நாயகன் வாழ்வில் கடந்த இரவில் நடந்த சம்பவங்களும் சில கோணங்களில் ஒத்து போகின்றன. நாயகனின் குழப்பம் அதிகரிக்கிறது. தனது குடும்ப வாழ்வு சிதைந்து விடுமோ என்ற அச்சம் அவனை வாட்டுகிறது. இவற்றில் இருந்து நாயகன் எப்படி வெளிவருகிறான் என்பது படத்தின் மீதிக்கதை.

தன் கணவனோ மனைவியோ தங்களுக்கு துரோகமிழைக்க முயல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொருவரும் நிம்மதியாக இருக்கிறார்கள். அதனை கெடுக்கும் விதத்தில் தன் வாழ்க்கை துணையே “நான் உனக்கு நேர்மையாக இல்லை” என சொல்வதை கேட்கும் தருணம் எத்தகைய கொடுமையானது என யோசித்து பாருங்கள். யாராலும் இத்தகைய சூழலை தாங்க இயலாது என்றாலும் நிதர்சனத்தை எதிர்கொள்ளவும் தயாராகத்தான் இருந்தாக வேண்டும்.

படத்தில் முகத்தில் அறையும் சங்கதிகள் வெளிப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் பிண்ணனியில் மெதுவாய் ஒரு குரல் கர்நாடக இசையில் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து பாட துவங்கும். ஆங்கில படத்தில் தமிழ் பாடலை கேட்பது இதோடு இரண்டாவது முறை. முதலில் “The Accidental Husband” படத்தில் வரும் தெனாலி படப்பாடல். இரண்டாவதாக இந்த படத்தில் வரும் பாடல்.

தாம்பத்திய வாழ்க்கையின் நிதர்சனத்தை எதார்த்தமாக வெளிப்படுத்தும் படம்…