THE ADMIRAL – ROARING CURRENTS (2014) விமர்சனம்

the-admiral-roaring-currents

அக்டோபர் 26 , 1597

கொரிய நாட்டு சரித்திரத்தின் முக்கியமான நாள். 300 போர்க்கப்பல்களுடன் போரெடுத்து வந்த ஜப்பான் கடற்படையை வெறும் 13 கப்பல்களை வைத்து விரட்டியடித்த தளபதி யீ-சுன்-சின் பற்றிய படம் தான் இது.

ஆறு ஆண்டுகளாக நடைபெறும் யுத்தம். கொரிய நாட்டின் நாற்புறமும் ஜப்பான் படைகள் முற்றுகை. எல்லா இடத்திலும் தோற்று தோற்று கொரிய மக்கள் மரண பீதியில் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை நடந்த தாக்குதலிலும் பல கொரிய கப்பல்கள் சேதமடைந்ததை அடுத்து இறுதியாக வெறும் 13 கப்பல்கள் மட்டுமே மீதம் இருக்கிறது.கொரிய நாட்டு மன்னர் வெறுமனே 13 கப்பல்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கடற்படையை கலைத்து விட்டு, தரைப்படையின் கீழ் அனைவரையும் இணைய சொல்லி தகவல் அனுப்புகிறார். ஆனால் கப்பற்படை தளபதி யீ அதற்கு “நான் சுவாசித்து கொண்டிருக்கும் வரை எதிரிகள் கப்பலை விட்டு இறங்கி, நம் நாட்டு மண்ணில் கால் வைக்க விட மாட்டேன்” என பதில் கடிதம் எழுதி அனுப்புகிறார். அவர் சொன்னது போல் ஜப்பான் படைகளை துரத்தி அடிக்கிறார்.

ஒவ்வொரு யுத்தத்திலும் ஏதேனும் ஒரு அதிசியக்கத்தக்க சம்பவம் நடைபெறும். யாராலும் இயலாத, செய்ய தயங்கும் சாகசத்தை ஒருவன் செய்து கதாநாயகனாக மாறுவான். உதாரணமாக விஜயாலய சோழன். கால்கல் இரண்டும் செயல்படாத சூழலில் உயிரை பணயும் வைத்து, பல்லவர்களுக்கு பெற்று தந்த வெற்றி தான் சோழ தேசத்திற்கு சுதந்திரம் பெற்று தந்தது.

படம் துவங்குகையில் கப்பற்படை தளபதியுடன் 12 கப்பல்களின் கேப்டன்களுடன் நடைபெறும் விவாத காட்சியிலேயே போரின் விளைவு சொல்லப் படுகிறது. கண்டிப்பாக வெறும் 12 கப்பல்கள் மற்றும் ஒரு தலைமை கப்பலை வைத்து கொண்டு வரப்போகும் பெரும்படையை வெல்ல இயலாது என ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். ஆனால் தளபதி யீ போரிடுவதில் உறுதியாக இருக்கிறார். அவரது மகன் கூட, தனது தந்தை எந்த நம்பிக்கையில் போரை எதிர்கொள்கிறார் என்பதில் தெளிவற்று இருக்கிறான்.

தளபதி யீ யின் ஒரே நம்பிக்கை, கடைசி அஸ்திரமாக அவர் நம்பிக் கொண்டிருப்பது தயாராகி கொண்டிருக்கும் ஆமைக்கப்பல். ஆனால் எதிர்தாக்குதலில் நம்பிக்கையற்ற கப்பலின் கேப்டன் ஒருவன் தளபதியை கொல்ல ஆள் அனுப்பிவிட்டு, ஆமைக்கப்பலை எரித்தி விட்டு தப்பி விடுகிறான். கொலை முயற்சியில் தப்பிக்கும் தளபதியினால் ஆமைக்கப்பலின் இழப்பை ஜீரணிக்க இயலவில்லை. இருப்பினும் போர் முடிவில் இருந்து அவர் பின்வாங்க மறுக்கிறார்.

அதே நேரத்தில் எதிரி நாடான ஜப்பான் படையுடன் ஒரு கடற்கொள்ளையர்கள் படையும் இணைகிறது. அதன் தலைவன் குருஷிமா. மிகவும் கொடுரமானவன். எந்த அளவுக்கு என்றால் அவன் பொறுப்பேற்றதும் கைது செய்யப்பட்டு இருந்த எதிரி நாட்டு வீரர்கள் அனைவருடைய தலையையும் வெட்டி தளபதி யீ க்கு அனுப்பி வைக்கிறான். குருஷிமாவிற்கும் தளபதி யீ க்கும் ஒரு பழைய கணக்கு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சண்டையில் குருஷிமாவின் சகோதரனை யீ கொன்றிருக்கிறார். அதற்கு பழிவாங்குவதற்கென்றே குருஷிமா, யீ இருக்கும் துறைமுகம் வழியாக மொத்த படையையும் கொண்டு செல்லும் திட்டத்தை கூறி அனுமதி பெறுகிறான்.

ஒரு படகு முழுவதும் வந்து சேர்ந்த தலைகளை பார்த்த பின் அனைத்து வீரர்களுக்கும் மரண பயம் உச்சத்தை அடைகிறது. ஒரு போர்வீரன் தப்பித்து செல்ல முயன்று மாட்டிக்கொண்டதும் அனைவரது முன்னிலையில் அவனது தலையை கொய்கிறார் தளபதி யீ. மரணத்திற்கு பயந்து தப்பி ஓடும் வீரர்களுக்கு மரண தண்டனை என அறிவிக்கிறார். கப்பல் கேப்டன்கள் மீண்டும் ஒருமுறை தரைப்படையுடன் இணைவது குறித்து கேட்டதும் அவர்கள் குடியிருக்கும் வீடுகள் அனைத்தையும் எரிக்க சொல்லி விடுகிறார். இறப்பதென்றால் கடலில் தான் இறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

யுத்தம் துவங்கிய நாள் அன்று மற்ற கப்பல்களை 3 கிலோ மீட்டர் முன்னதாகவே காத்திருக்க சொல்லிவிட்டு தனியாக சென்று எதிரி கப்பல்களுடன் மோதுகிறார். இதன் பின்னர் நடப்பதை திரையில் பார்த்தால் தான் சுவாரசியமாய் இருக்கும். ஆனால் இந்த போரின் முடிவு யாரும் நம்ப முடியாத ஒன்று.

தனி கப்பலாக சென்று பல கப்பல்களை வெல்வதற்கு தளபதி யீ பயன்படுத்திய யுத்தி கடல்நீரோட்டத்தினை நம்பியே இருந்தது. கடல் நீரோட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட திசையினை நோக்கி கடல் அலைகள் இருக்கும். அத்திசையினை நோக்கியே தன் மேல் இருக்கும் பொருட்களை இழுத்து செல்லும். கடல் நீரோட்டம் பற்றி முன்பு கேள்விப்பட்டு இருந்தாலும், இப்படத்திற்கு பின் தான் விரிவாக படித்தேன். கூடவே நீரோட்டங்களை பயன்படுத்தி சோழ கடற்படை பெற்ற வெற்றிகள் குறித்தும்…

முக்கால்வாசி படம் யுத்தத்தை மட்டுமே காட்டினாலும் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்கள்.

படத்தில் வரும் கருத்து

“மரணபயத்தை விட உச்ச தைரியம் வேறேதுமில்லை”

கட்டாயம் தவறவிடக்கூடாத படம்…

இந்த யுத்தம் குறித்த தகவல்களை படிக்க இங்கே க்ளிக்கவும்…