THE INTERVIEW – விமர்சனம்

நம் நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி முறை, அதனுடைய முழு வழிமுறைகள் அதாவது யார்யாருக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியாது, உதாரணமாக குடியரசு தலைவராய் இருப்பவரின் கடமையும் அதிகாரமும் நமக்கு முழுமையாய் தெரிந்திராத ஒன்று. அது போல அதிபர்கள் மூலம் ஆட்சி நடக்கும் நாட்டின் அதிகார பழக்கவழக்கங்கள் மற்றும் ஆட்சி நடத்தும் வழிமுறைகளை பற்றி நமக்கு சுத்தமாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கிட்டத்தட்ட மன்னராட்சி போலத்தான் அதிபர்களின் அதிகாரமும் இருக்கும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அதிகப்பட்சம் வம்சாவழியினரைத்தான். இங்கு ஜனநாயக ஆட்சி முறையிலேயே வாரிசுகளுக்குத்தான் முன்னுரிமை எனும் பொழுது அங்கும் அப்படித்தான் இருக்கும். சரி நாம் படத்திற்கு வருவோம். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா எந்த வித அச்சமும் இன்றி இருக்கின்றதா என்றால் இல்லை, ஏனேனில் அனைத்து நாடுகளின் சொந்த விவகாரங்களிலும் தலையிட்டு சுற்றியுள்ள அனைத்து திசைகளிலும் எதிரிகள் சூழ் வாழும் நாடு. அதன் முக்கிய எதிரியாய் இருக்கும் நாடு வட கொரியா. அந்த நாட்டின் அதிபராய் இருப்பவர் கிம் யங் ஜொங், உலகின் மிக இளைய அதிபர், 33 வயதுதான். யோசித்து பாருங்கள், படித்து முடித்தவுடன் தந்தையின் தொழிலை பார்த்து கொள்ள சொன்னாலே நண்பர்களை எல்லாம் பிரிந்து ஒரு புது உலகினுள் பிரவேசித்தது போல் இருக்கும். மிகவும் இள வயதில் நாட்டின் அதிபராக்கப்பட்டால்???

நம்பிக்கைக்குரியவர் என ஒருவரையும் அருகில் வைத்து கொள்ள முடியாது. அவரைப் பற்றி பலவிதமான மூட நம்பிக்கைகள் அரசாங்கத்தால் பரப்பப்படுகின்றன. அதிபர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடவுளின் வம்சாவளியினராய் நம்பப்படுவதால் அதிபருக்கு வேர்க்காது, அவர் சாப்பிடும் உணவுகளின் மூலம் கிடைக்கும் சக்திகளை தவிர்த்து மீதமாகும் எச்சங்கள் உடலினுள்ளேயே எரிக்கப்பட்டு விடுவதால் அவர் உடல் கழிவுகளை வெளியேற்ற தேவையில்லை. ஆதலால் அவருக்கு உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் படைக்கப்படவில்லை. அவர் மரணத்திற்கு அப்பாற்பட்டவர். இப்படியெல்லாம் கட்டுக்கதைகள் திரிக்கப்பட்டு மக்கள், அதிபர் சொன்னால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மூளைச்சலவை செய்யப் பட்டு இருக்கிறார்கள்.

எல்லாம் சரி, இப்படி உச்சப்பட்ச அதிகாரம் மற்றும் ஆளுமை கொண்ட அதிபர் ஒரு முட்டாள்தனமான வெறிப்பிடித்த மிருகமாக இருந்தால்? உதாரணத்திற்கு ஹிட்லரை நினைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற வெறி இந்த இளம் அதிபருக்கு இருக்கிறது. அதற்காக அணு ஏவுகனைகளை தயாரிக்க முடிவு செய்கிறது இவர் தலைமையிலான அரசு, அதற்கான நிதியை சேர்ப்பதற்காக நாட்டின் மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு ஞாயமாய் ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் மறுக்கப்படுகின்றன. ஆதலால் நாட்டு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்களுக்கு மூன்று வேளையும் சாப்பிடுமளவுக்கு உணவு பொருட்கள் கூட மறுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் அமெரிக்கா தான் என மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு முனையில் அமெரிக்காவில் ஸ்கைலார்க் டூநைட் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் வெற்றிக்கரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் சிறப்பாக கருதப்படுவது மிகவும் பிரபலமான ஒருவரை வரச்செய்து, அவரை தூண்டி விட்டு எதேனும் உளறச்செய்து பரபரப்பை உருவாக்குவது. அந்த நிகழ்ச்சியில் முக்கியமானோர் இருவர், ஒருவர் அதை தொகுத்து வழங்கும் டேவ் ஸ்கைலார்க், மற்றொருவர் அதன் இயக்குனர் ஏரோன். இந்நிலையில் வட கொரிய நாட்டு அதிபர் ஒரு பேட்டியில் தான் ஸ்கைலார்க் டூநைட் நிகழ்ச்சியின் ரசிகன் என்றும், அதை தவறாமல் பார்ப்பதாகவும் சொல்கிறார். இதை கேள்விப்பட்டதும் அவரை பேட்டி எடுக்க இந்த நிகழ்ச்சியின் குழு விண்ணப்பிக்கிறது.

அனுமதி உண்டா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஏரோனை ஒரு குறிப்பிட்ட லாங்டியுட் லேட்டிடியுட் புள்ளிகள் சந்திக்கும் இடத்திற்கு வர சொல்கிறார்கள், அந்த இடம் சீனாவில் இருக்கிறது. காடு, மலை எல்லாம் ஏறி அந்த இடத்தை அடைந்து அனுமதி வாங்கி வருகிறார் ஏரோன். அடுத்த நாள் அவர்களது வீட்டிற்கு CIA வருகிறது.அந்த இளம் அதிபரின் கொடுமைகளை எல்லாம் கூறி, இந்த இருவரும் பேட்டி எடுக்க சென்று விட்டு வருவதற்குள் அப்படியே அதிபரை கொல்ல வேண்டும் என்று பணிக்கிறது. ஒரு வழியாக இருவரும் ஒப்புக்கொண்டு கிளம்புகிறார்கள். அங்கு சென்று பார்த்தால் உலகம் முழுவது பரவி இருக்கும் வதந்திகளை பொய்யாக்கும் விதத்தில் நாடே சுபிட்சமாய் இருக்கிறது, மக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள், குழந்தைகள் கொழுகொழுவென்று திரிகிறார்கள். இதை எல்லாம் பார்த்த ஸ்கைலார்க் குழம்பி கொண்டிருக்கும் வேளையில் அதிபர் கிம், ஸ்கைலார்க்குடன் மிகவும் நெருங்கி பழகுகிறார். ஏனெனில் நண்பன் என்றும் யாரும் இல்லாதவருக்கு ஸ்கைலார்க்கின் குறும்புத்தனங்கள் மிகவும் பிடித்து போகிறது. இந்த சூழ்நிலையில் கொலை செய்யும் எண்ணத்தை ஸ்கைலார்க் கைவிட ஏரோனோ தாய்நாட்டின் கட்டளையை நிறைவேற்றியே தீருவேன் என அடம் பிடிக்க விறுவிறுப்பு கூடுகிறது. இதுவரை நான் கூறியது படத்தின் 50 சதவீதம் தான்.

வேறு ஒரு நாட்டிற்கு, அதுவும் அனுமதி இல்லாமல் வேறு நாட்டு பிரஜைகள் நுழைய கூட முடியாத நாட்டிற்கு சென்று அந்த நாட்டின் அதிபரை கொல்லவது என்பது எவ்வளவு பெரிய விசயம்? அதுவும் அதிபரை எந்நேரமும் பாதுகாவலர்கள் சூழ்ந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் நீங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பிலேயே இருக்கிறீர்கள் எனும் பொழுது கொலைத்திட்டம் தீட்டி செயல்படுத்துவது என்பது இரண்டு மலைகளுக்கு இடையே கயிற்றின் மேல் நடப்பதை போன்றது. மிகவும் விறுவிறுப்பாகவும் அதே நேரம் கலாட்டாவாகவும் செல்லும் படம் இது. வித்தியாசமான கதைக்களம் என்பதால் எனக்கு பிடித்திருந்தது.

இந்த படத்தை வெளியிடுவதற்கு அமெரிக்காவை பல விதங்களின் வடகொரியா தடை கோரியது. கொலம்பியா பிக்சர்சின் பல படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் வட கொரியாவினால் வெளியிடப்பட்டது. அந்த நிறுவனத்தின் இணையம் முடக்கப்பட்டது. அதன் பல ரகசியங்கள் வெளியிடப்படும் என்ற மிரட்டலுக்கு பின்னர் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பல மாதங்கள் கழித்து குறிப்பிட்ட அரங்குகளில் மட்டும் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு வந்த நெருக்கடியே இதன் விளம்பரமாக மாறியது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட டீவிடி மூலம் நல்ல லாபம் கிடைத்ததாக கூறுகிறார்கள்.