SUSPECT X விமர்சனம்

ஒரு கணித மேதை, பள்ளியில் ஆசிரியராய் இருப்பவர், மற்றவர்களுடன் அதிகம் பழகாதவர். அவ்ரது பக்கத்து வீட்டில் ஒரு தாயும், டீன் ஏஜ் வயது மகளும் வசிக்கிறார்கள். கணித ஆசிரியர் தனது தினசரி வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணமாய் அவர் நினைப்பது பக்கத்து வீட்டில் வசிப்பவரின் உணவகத்தில் மதிய உணவை வாங்குவதைத்தான். இந்த சூழலில் விவாகரத்தாகி போன முன்னாள் கணவன் பணம் கேட்டு வந்து தொந்தரவு செய்யும் ஓர் நாள் இரவில் நடக்கும் களேபரத்தில் தாயும் மகளும் சேர்ந்து அவனை கொன்று விடுகிறார்கள். சத்தம் கேட்டு வரும் கணித ஆசிரியர் கொலையான உடலை மறைப்பதுடன், அடுத்தடுத்து வரக்கூடிய போலிஸ் விசாரனைகளை எப்படி எதிர்கொள்வது என படிப்படியாக சொல்லித் தருகிறார்.

ஒரு இயற்பியல் மேதை, பல்கலைகழகத்தில் பணி புரிபவர், உலகின் எந்த விஷயத்தையும் அறிவியல் விதிகளின் மூலம் நிருபிக்க முடியும் என நம்புபவர், 90% வழக்குகளுக்கு போலிஸ் இவரையே அணுகுகிறது. இவரது அறிமுகமே படத்தில் அமர்க்களமாய் இருக்கும், இவரிடம் மேற்படி நடந்த கொலை வழக்கு உதவி வேண்டி வர, முதலில் ஆர்வமின்றி விலகியவர், இந்த வழக்கில் சம்பந்த பட்டிருக்கும் கணித மேதையை பற்றி தெரிந்து ஆர்வம் கொள்கிறார். ஏனென்றால் இருவரும் ஒரு பல்கலைகழகத்தில் படித்தவர்கள், நண்பர்கள். கொலையாளியை யாரும் நெருங்க முடியாத படி கணித மேதையால் பின்னப்பட்டிருக்கும் வலையில் இருக்கும் ஒவ்வொரு முடிச்சும் இயற்பியல் மேதையால் அவிழ்க்கப் படுகிறது. ஆனால் அவர் நண்பனை மாட்டி விட மனமில்லாமல் போலிசிடம் உண்மையை மறைக்கும் தருணத்தில் யாரும் எதிர்பார்க்காத விசயத்தை கணித மேதை செய்கிறார். அதன் பின்னர் தான் கொலையை அவர் எவ்வளவு நுட்பமாக மறைத்துள்ளார் என்பதே வெளிப்படுகிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் யாரெனும், அது எந்த நாடக இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களுக்கு, அதுவும் ஒரு கொலைக்கு, பக்கத்து வீட்டுக்காரருக்கு உதவ முழு மனதுடன் முன்வருவார்களா? இப்படத்தில் வரும் கணித மேதை, எந்த ஆதாயத்தை எதிர்பார்த்து அல்லது எந்த நன்றிக்காக இவ்வளவு பெரிய சிக்கலில் தானாக வந்து சிக்கிக் கொள்கிறார் என்பதற்கு மட்டும் தான் இயற்பியல் மேதையால் விடை கண்டுபிடிக்க இயலாமல் போகிறது. நேரடியாய் அவரிடமே வந்து கேட்டு தெரிந்து கொள்கிறார்.

படத்தை பற்றி கூற பல விஷயங்கள் இருந்தாலும், இப்போதே தெரிந்து கொண்டால் படம் பார்க்கும் பொழுது சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் அதிகம் கூறவில்லை.

susx

திருஷ்யம் அல்லது பாபநாசத்தின் கதை தான், புதிதாய் என்ன இருக்க போகிறது என இந்த படத்தை தவற விட்டால் கண்டிப்பாய் இழப்பு உங்களுக்கு தான். திருஷ்யம் படத்தின் படி கதை நாயகன் தனது குடும்பத்திற்கு எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் சினிமா மூலம் கற்ற விஷயங்களை கொண்டு ஒரு கொலைக் குற்றத்தில் இருந்து குடும்பத்தை தப்ப வைக்கிறான். suspect x படம் பார்க்கும் வரை திருஷ்யம் எனக்கு பெரிய கதைக்களமாகத்தான் தெரிந்தது. ஆனால் ஒரு கோட்டின் அருகே பெரிய கோட்டை வரைந்தால் முதல் கோடு சின்னதாவதை போல இப்போது திருஷ்யம் பெரிதாய் படவில்லை. திருஷ்யம் படத்தை விட இந்த படத்தின் கதை மூன்று மடங்கு அருமையானது.

நடந்த கொலையை கணித முறைப்படி மறைப்பது – ஒரு மடங்கு
இயற்பியல் மேதைக்கும் அறிவியல் மேதைக்கும் நடக்கும் அறிவு யுத்தம் – ஒரு மடங்கு
மெலிதால் மனதிற்குள் வேரூடும் காதல்/தியாக வலி – ஒரு மடங்கு

ஆக மொத்தம் மூன்று மடங்கு திருஷ்யத்தை விட இந்த படம் எனக்கு பிடித்திருந்தது. கண்டிப்பாய் த்ரில்லர் விரும்பிகள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது.