தோட்டவேலையும் எடைகுறைப்பும்

எப்பவுமே வருடத்தின் இரண்டாம் பாதியான ஜூலையில் இருந்து எனது மொத்த நடவடிக்கைகளையுமே மாற்றிக் கொள்வது வழக்கம், காரணம் அக்டோபர் 5ல் நடக்கும் மாரத்தான், இதுவரை ஒருமுறைதான் கலந்திருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு வருடமும் ஜூலையில் இருந்து பயிற்சி எடுக்க ஆரம்பித்து விடுவேன்.

எனவே இரண்டு நாட்களாக விடியற்காலையில் எழுந்து நடக்க துவங்கியுள்ளேன். நான் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் புதிதாய் உடற்பயிற்சி செய்பவர்கள் நடப்பதெற்கென ஒரு தளம் அமைத்திருக்கிறார்கள். அந்த பக்கம் சென்று பார்ப்போம் என போய் கொண்டிருக்கிறேன், வழக்கமாய் போகும் இடத்தை விட அதிக வண்ணங்கள் தென்படுகின்றன, அதனால் களைப்பு தெரியாமல் போய் கொண்டிருக்கிறது.

அங்கே இருவர் வருவார்கள், பார்க்க டீசர்ட்டும் லோயருமாய் கனவான்களாய்த்தான் தெரிவார்கள், கைக்கு நீண்ட க்ளவுஸ் அணிந்து கொண்டு, கொண்டு வந்திருக்கும் பையிலிருந்து கட்டிங் பிளேடு போன்ற ஒன்றை எடுப்பார்கள், சாலைக்கு நடுவில் வைக்கப்பட்டிருக்கும் செடிகளை அளவாய் அழகாய் தெரியும்படி வெட்டுவார்கள், அடுத்த நாள் வருவார்கள் இன்னொரு பக்கம் தேவையில்லாமல் முளைத்திருக்கும் செடிகளை, புற்களை செதுக்கி எடுப்பார்கள்.

எனக்கு முதலில் புரியவில்லை, யார் இவர்கள், இவர்களுக்கு இதுதான் வேலையா? முனிசிபாலிட்டியில் வேலை செய்பவர்கள் போல் தெரியவில்லையே என குழம்பி கொண்டிருந்தேன். இதில் வந்ததும் ஓட துவங்குகிறவர்களை போல் உடலை தளர்த்தி கொள்ளும் பயிற்சிகளை செய்து விட்டு தான் வேலையை ஆரம்பிப்பார்கள். எதற்கு குழம்பிக் கொண்டு என இணையத்தில் தேடி பார்த்தேன்.அதற்கு பெயர் கார்டனிங் எக்சர்சைஸ் என குறிப்பிட பட்டுள்ளது.

கார்டனிங் எக்சர்சைசெக்கென தனியாய் ஒரு தினமே(ஜூன் 6) இருக்கிறதாம், பல பல்கலைகழகங்களில் இதை பாடமாய் சொல்லி தருகிறார்களாம். வெறுமனே ஓடுவதையும் குதிப்பதையும் விளையாடுவதையும் உடற்பயிற்சியாய் செய்வதால் என்ன பலன்? இதுவே தோட்ட வேலை செய்வதால் இடம் அழகாவதோடு தாவரங்கள் வளர்வதால் ஆக்சிஜன் கிடைப்பதிலிருந்து காய்கறிகள கிடைப்பது வரை பல நன்மைகள் இருக்கின்றன.

தினமும் 30-45 நிமிடங்கள் தோட்ட வேலை செய்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

குழி தோண்டும் வேலை – ஆண்: 197 கலோரி, பெண்: 150 கலோரி
செடி நடும் வேலை – ஆண்: 177 கலோரி, பெண்: 135 கலோரி
களை எடுக்கும் வேலை – ஆண்: 157 கலோரி, பெண்: 156 கலோரி

உங்கள் உடலில் இருந்து எரிக்கப்படுகிறது, இது 4 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவதாலும் அல்லது 3 கிலோமீட்டர் நடப்பதாலும் கிடைக்கும் நன்மைக்கு சமமானது.

உடல் எடை குறைப்பது மட்டும் இதில் கிடைக்கும் நன்மை என நினைத்து விட வேண்டாம்.

உடலை நன்கு தளர்வடைய செய்யும்
உடலின் ஒவ்வொரு மூட்டுகளையும் பலப்படுத்தும்
உடலின் இரத்த அழுத்தம் மட்டுப்படும்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
எலும்புகளின் எடைகுறைதலை சமப்படுத்தும்.

இதையெல்லாம் கூறுவது Iowa State University, அமெரிக்கா. யோசித்து பாருங்கள். வெறுமனே எடை குறைத்தலை மட்டும் செய்யும் நடை,ஓட்டத்தை விட இது எவ்வளவோ பயனுள்ளது தானே? இதில் முக்கியமான சிறப்பம்சம் இதை அனைவரும் செய்வதால் கொஞ்சம் கூட அறிமுகமில்லாத விசயமாக விவசாயத்தை சொல்ல முடியாது, யோசித்து பாருங்கள், தினமும் வீட்டருகே இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தி களை எடுத்து, குழி பறித்து, செடி நட்டு அதற்கு நீர் ஊற்ற துவங்கினால் அது காய்கறி தோட்டம் அமைப்பதில்தான் போய் முடியும், அது போதாதா? அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்திற்கு ஒரு வேகத்தடையாக இந்த முயற்சி இருக்கும் அல்லவா?

என்னால் முடிந்த வரை அனைவரிடமும் இதை பற்றி பரப்ப முயலலாம் என்றிருக்கிறேன், எந்த ஒரு விசயத்தையும் நாம் செய்யாமல் அடுத்தவரை செய்ய சொன்னால் யார் செய்வார்கள்? அதனால் மாரத்தான் முடித்த பின் நானும் தோட்டவேலை செய்ய போகிறேன்.