எனக்குனு யார் இருக்கா?

சென்ற வருடத்தின் இறுதியில் பல நண்பர்களுடன் விவாதித்த பொழுது எல்லோரும் கூறியது தொடர்ந்து எழுதி கொண்டிருந்தால் மட்டுமே தமக்கென ஒரு எழுத்துப்பாணி அமையும் என்பது தான். எழுதுவதற்கு தளமா இல்லை???

இருக்கவே இருக்கிறது முகநூலும் ட்விட்டரும் என்ற பொழுது அவையெல்லாம் தினசரி செய்தித்தாள்கள் போல, அன்றைய சூடான செய்திகளை விவாதிக்க மட்டுமே சிறந்தவை, நீ என்றோ ஒரு நாள் எழுதும் நல்ல பதிவை தேடி எடுக்க அவற்றில் மிகவும் சிரமப்பட வெண்டி இருக்கும், அதுவுமில்லாமல் அது வாசகர்களுக்கு சரியான தளம், எழுத்தாளர்களுக்கென தனியாய் ஒரு தளம், அவர்களுக்கென ஒரு வலைப்பக்கம் இருத்தல் நலம் என்றார்கள்…

அந்த நேரத்தில் கிடைத்த நிறைய ஓய்வு நேரத்தில் நிசப்தம் தளத்தை முழுவதுமாக வாசிக்க முடிந்தது,வா மணிகண்டன் அவரது ஆரம்ப கால எழுத்திற்கும் தற்போதைய எழுத்து நடைக்கும் இருக்கும் முதிர்ச்சி அவரது தினசரி எழுத்து பயிற்சியினால் விளைந்தது என புரிந்து கொண்டேன், சரி நாமும் எழுத்து பயிற்சி செய்ய என இந்த வலைத்தளத்தை துவங்கினேன்.

2015 புத்தாண்டு துவக்கத்தில் கூட தினசரி ஒரு பதிவாவது எழுத வேண்டும் என சூளுரைத்து கொண்டேன், அப்படி எழுதி இருந்தால் இந்த நேரத்திற்கு இந்த வருடத்தில் குறைந்தது 180 பதிவுகளாவது எழுதி இருப்பேன், ஏதோ ஒன்று அது சினிமாவோ, நூல் விமர்சனமோ, அரசியலோ, தினசரி நிகழ்வுகளோ எதையாவது ஒன்றை தொடர்ந்து எழுதி இருந்திருக்க வேண்டும்.

ஆனால் திடிரென நடந்த திருமணம், சரி அதற்காக ஒரு 50ஐ குறைத்தாலும் 130,
கல்லூரியில் அதிக வேலைப்பளு, சரி அதற்காக ஒரு 50ஐ குறைத்தாலும் 80 பதிவுகளையாவது எழுதி இருக்க வேண்டும்.

மொத்தம் 22 பதிவுகளதான் கடந்த ஆறு மாதங்களில் எழுதி இருக்கிறேன் என்றால் நான் எவ்வளவு பெரிய சோம்பேறி என பார்த்துக் கொள்ளுங்கள், அதிலும் அதிகம் வெறும் திரை விமர்சனங்கள் தான். யோசித்து பார்த்தால் சென்ற வருடத்தை விட இந்த வருடம் நான் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையும் மிக குறைவு தான். வாங்காமல் இல்லை, வாங்கி படிக்காமல் இருக்கிறேன்.

படிப்பதும் இல்லை, எழுதுவதும் இல்லை எனில் நான் பண்பட வேறு என்ன வழி?

முன்பெல்லாம் அடிக்கடி கமலஹாசனை குறை கூற ஒரு வார்த்தையை பயன்படுத்துவார்கள் “சுயசொறிதல்” அதாவது அவரது புகழை அவரே புகழ்ந்து பேசுவார், இப்போது சமீபத்தில் நடிகர் சிவக்குமாரை இந்த கருத்தை வைத்துத்தான் கிழித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அப்படியே எதிர்ப்பதமாய் இருக்கிறது என் மனநிலை, அதாவது என்னை நானே திட்டி கொண்டிருக்கிறேன்…

ஒரு பிரபலமான, 1000க்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட ஒரு இணைய எழுத்தாளர் எழுதவில்லை என்றாலாவது “என்ன ஆச்சு சார்? ஏன் கொஞ்ச நாளா எந்த போஸ்ட்டும் போடலை?”ன்னு கேட்பார்கள். நானெல்லாம் யார் என்பதே யாருக்கும் தெரியாது. என் குடும்பத்தினருக்கு கூட நான் எழுதுவேன் என்பது தெரியாது. இந்த நிலையில் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்நேரமும் டீவி சீரியல்களிலும் முகநூலிலுமே புதைந்து கிடக்கும் என்னை யார்தான் திருத்துவது?

வேறு யார் திருத்துவார்கள்?

எனக்குனு யார் இருக்கா?

நானே திருந்திக்கறேன்…

இனிமேல் ஒழுங்காய் எழுத முயற்சிக்கறேன்…