கொம்பனும் குட்டிப்புலியும்

படத்தை பற்றி சொல்வதற்கு முன்பு ஒரு விஷயம் சொல்கிறேன். எனது கல்லூரியில் சீனியர் ஒருவர் இருப்பார், அவருக்கு இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு, படிப்பிலும் ஒவ்வொரு பருவத்திலும் அர்ரியர் எண்ணிக்கையை ஏற்றி கொண்டே செல்வார். ஆனால் முரணாக ஒரு பழக்கம் அவரிடம் உண்டு. ஜீனியர்ஸ் ஐ பார்த்தால் “டேய் ஒழுங்கா படிங்கடா, தம்மடிக்காதிங்கடா, தண்ணி அடிக்கறது கெட்ட பழக்கம்டா, இல்லைன்னா என்னை மாதிரி கஷ்ட பட வேண்டியது தான்” என் அறிவுரையாய் அரிந்து தள்ளுவார். இதில் என்ன இருக்கிறது, எல்லா சீனியர்களும் செய்வதுதானே என்பீர்கள். இவர் இதை தன்னுடைய இரண்டாம் வருடத்திலேயே துவங்கி விட்டார். செய்வது தவறு என தெரிந்தால் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கும் பொழுது திருத்திக் கொள்ளாமல் அடுத்தவருக்கு அறிவுரை கூறுவது…?

அது போலத்தான் கொம்பனும், படம் துவங்கிய உடனே பெண்கள் விடியற்காலையில் எழுந்து பொறுப்பாக வேலைக்கு செல்வதும், ஆண்கள் பொறுமையாக ப்ஞ்சாயத்துக்கு கிளம்புவதை பார்த்து தனது மகனிடம் “ஒழுங்கா படிக்கலைன்னா இவனுங்க மாதிரி உருப்படாம போயிடுவ” என் சொல்வதையும் பார்த்துவிட்டு “ஓகோ, இப்படம் ஊரில் வெட்டியாய் திரிபவர்களுக்கு பாடமாய் இருக்கும் போல” என நினைத்து பார்க்க ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

kuttipuli

சொந்த வேலையை விட ஊர்பிரச்சனைக்காக அதிகம் நேரம் ஒதுக்கும் நாயகன், தந்தைக்கு ஒரு கட்டிங் அளவாய் ஊற்றிக் கொடுத்து நிறைய மீன் வருத்து கொடுக்கும் நாயகி, தன்னை எதிர்ப்பவர்களை ஒழித்து கட்டும் வில்லன் கும்பல், இவர்களிடம் பெண் கொடுத்து நடுவில் வந்து சிக்கிக்கொள்ளும் ராஜ்கிரன் கதாபாத்திரம் என வைத்துக்கொண்டு என்ன பெரிய வித்தியாசமான படம் கொடுத்து விட முடியும்?

komban

குட்டிப்புலி படத்தில் (மேல)தெருவுக்கு ஒரு பிரச்சனை என்றால் குட்டிப்புலியை கூப்பிடு என்பார்கள், இதில் அரசநாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் கொம்பனை கூப்பிடு என்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் குட்டிப்புலி அளவுக்கு மொக்கை போடவில்லை. அம்மா பாசத்தை அழகாய் மாற்றி மாமனார்-மருமகன் கதையாய் எழுதி முத்தையா வெற்றி பெற்றுள்ளார். அடுத்து அவர் இதே ஊருக்காய் உழைக்கும் நாயகனுக்கும் அவர் சகலைக்கும் இருக்கும் உணர்வு போராட்டத்தை வைத்து படம் எடுக்க கூடிய வாய்ப்பு அதிகம். குட்டிப்புலியை விட கொம்பன் வெற்றி என்னும் பொழுது அவர் இந்த மசாலாவை விட்டு வெளி வருவாரா?

படத்தில் 72 இடத்தில் வெட்டு விழுந்த பின்னரும் இதெல்லாம் சாதிய குறீயீடுகள் என பட்டியல் போட்டு பல பதிவுகள் இணையத்தில் சுற்றி கொண்டிருக்கின்றன. சாதிய குறீயீடுகள் கண்ணில் படாமல் போனாலும், தமிழில் வரும் வழக்கமான மசாலா படத்தை கொடுத்துவிட்டு அக்மார்க் குடும்ப படத்தினை கொடுத்தது போல விளம்பரம் செய்யாதீர்கள்.

கொம்பன் திரைப்படம் பார்த்தேன், நண்பேண்டா படு மொக்கை என்றதால் வேறு வழியில்லாமல் குடும்பத்தோடு திரை அரங்கிற்கு சென்று பார்க்கக்கூடிய படம் என்று கூறியதால் சென்றேன். படம் அந்த நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கலாம். விரசமான காட்சிகளோ கொடுரமான வன்முறை காட்சிகளோ இல்லை. அக்மார்க் மசாலா படம். குட்டிப்புலி 1 செண்டிமீட்டர் என்றால் இது 1.5 செண்டிமீட்டர். அவ்வளவுதான் வித்தியாசம்.

“பொன்னு கொடுத்த ஒவ்வொரு மாமனாரும் இன்னொரு தகப்பனுக்கு சமம்”

இந்த வசனத்து எனக்கு முன்னாடி சீட்ல இருந்து வந்த கமெண்ட்

“நாங்க அப்பனையே மதிக்கறது இல்லை, படத்தை போடுங்கடா”