இறந்துருனு சொல்லு ஆனா மறந்துருனு சொல்லாத!!!- காலேஜ் டைரி-4

அன்பர்களுக்கு வணக்கம். இதுக்கு முந்தைய பதிவுகளை படிக்காதவர்களுக்கு சத்தியமா நான் என்ன சொல்றன்னு புரியாது. அதனால முதல்ல அதை படிச்சுருங்க.
இப்ப நான் சொல்ல போறது எங்க கல்லூரியோட முதல் தேவதாஸ் பத்தி, நிறைய பேர் காதலிச்சாங்க, அதுல பாதிப் பேரை தூண்டிவிட்டு போய் காதலை சொல்ல வச்ச பெருமை எங்க பசங்களுக்குதான் சேரும். அது மாதிரி எங்களால பாதிக்கப் பட்டதுல ரொம்ப முக்கியமான ஒருத்தனை பத்தித்தான் இன்னைக்கு பார்க்கப் போறோம்.
பையனை பத்தி சொல்லனும்னா தங்கமான பையன், நம்பி பொன்னு கூட குடுக்கலாம், எந்த கெட்டப் பழக்கமும் இல்லை, காலேஜ் படிக்கும் போதே கந்து வட்டி விட்டுட்டு இருந்தான். சரி அவன் காதல் கதைக்கு வருவோம்.
எல்லாருக்கும் காதல் எப்படி எப்படியோ வரும், இவனுக்கு வந்த விதமே விசித்தரமானது, அதை விட அந்த காதலை நாங்க தெரிஞ்சுகிட்ட விதமே செம காமெடியான அனுபவம். படிச்சா அவனும் சிரிப்பாங்கற நம்பிக்கைல எழுதறேன்.
நாங்க 2 வது வருசம் சுற்றுலா போனப்போ பக்கத்துல உட்கார்ந்து தூங்கிட்டு இருந்தான்.
“டேய் தள்ளி உட்கார்ரா”னு சொன்னேன்.
தூக்கத்துலயே “நான் கிஃப்ட் குடுத்தா அவ வாங்கிக்குவாளாடா?”னு கேட்டான். உடனே பசங்க எல்லாரும் ரவுண்ட் கட்டி “யாருக்கு குடுக்கப் போற செல்லம்?”னு இதமா கேட்கவும் பொன்னு பேரை சொல்லிட்டான்.
அந்த பொன்னு வேற பிராஞ்ச், முதல் செமஸ்டர்ல ஒன்னா படிச்சுருக்காங்க. “எப்படா லவ் பன்ன ஆரம்பிச்ச?”னு கேட்டோம்.
“முதல் தடவை கம்ப்யுட்டர் லேப் போனப்ப சிஸ்டம் ஆன் பன்னத் தெரியாம உட்கார்ந்துட்டு இருந்தேன், அவதான்டா ஆன் பன்னிக் குடுத்தா, அதுலருந்து மனசுக்குள்ள அவளை காதலிக்கறன்டா”னு தூக்கத்துலயே எல்லாத்தையும் சொல்லிட்டான்.
அப்படியே அவனை எழுப்பாம விட்டுட்டு அடுத்த நாள் ஒவ்வொருத்தனா கிண்டல் பன்னி உண்மைய முழுசா சொல்ல வச்சோம், அதோட விட்டுருந்தா கூட நல்லா இருந்துருப்பான். சும்மா இல்லாம எல்லாருமா சேர்ந்து அவனை ஏத்தி விட்டு காதலை சொன்னாதான், இல்லைனா யாராவது தள்ளிட்டு போயுருவாங்கனு மிரட்டுனோம்.
அப்ப கூட அவனுக்கு சொல்ல தைரியம் வரலை, அவன் மெயில் ல இருந்து ஹார்ட்டின் போட்ட மாதிரி க்ரிட்டிங் கார்ட் அனுப்புனோம், இப்ப மாதிரி அப்பலாம் இன்டெர்னெட் வசதி இல்லை. வாரம் ஒருதடவை மெயில் இன்பாக்ஸ் பார்த்தா பெரிய விசயம்.
2 நாள் கழிச்சு அந்த பொன்னு இன்பாக்ஸ் அ ஓப்பன் பன்னி அவன் அனுப்புன மெயில் அ பார்த்தது கேள்விப்பட்டு அவன் சொன்ன வார்த்தைய எத்தனை வருசம் ஆனாலும் நான் மறக்கமாட்டேன். என்ன சொன்னான்னு கேட்கறிங்களா? இதைத்தாங்க சொன்னான்.
‘சந்தோஷத்துல எனக்கு மயக்கம் வருதுடா”
அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நிலைக்கலை. அந்த க்ரிட்டிங் கார்ட் பத்தி அந்த பொன்னு தெளிவா அவன்கிட்ட பேசிருக்கு,
“இந்த வயசுல இதெல்லாம் தப்பு, நம்ம வீட்ல தெரிஞ்சா கஷ்டபடுவாங்க, எனக்கு அந்த மாதிரி தோணலை”
இதெல்லாம் கேட்டு திருந்திருக்கலாம், ஏத்தி விடத்தான் நாங்க இருக்கமே, அந்த பொன்னு 2 நாள் டைம் கூட குடுத்துச்சு, உன் மனசை மாத்திக்கன்னு. நம்ம சிங்ககுட்டி மாத்திக்கவே இல்லையே.  2 நாள் கழிச்சு
“என்ன நார்மல் ஆகிட்டியா?”னு அந்த பொன்னு கேட்டப்ப அவன் பக்கத்துல நின்னு ரகசியமா அவனுக்கு நான் சொல்லி குடுத்த வசனம் எனக்கு நல்லா நினைவிருக்கு.
“இறந்துருனு சொல்லு ஆனா மறந்துருனு சொல்லாதனு சொல்லுடா”
அதுக்கு அப்புறம் அந்த பொன்னு அவன்கிட்ட பேசவேயில்லை, அப்போலருந்து அவன் ஒரு வருசத்துக்கு தேவதாஸ் மாதிரி திரிஞ்சான், அவனுக்கு தாடி வளரலை அதனால பல பேருக்கு அவன் லவ் ஸ்டோரி தெரியலை.
இன்னும் நிறைய கதைகள் நினைவில் நிறைந்திருக்கின்றன். அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். நீங்கள் மறக்காமல் கருத்துக்களை பின்னுட்டமிடுங்கள்.