THE TIME TRAVELERS WIFE (2009) – விமர்சனம்

எத்தனையோ புத்தகங்கள் படமாக எடுத்து பார்த்திருக்கிறோம், அனைவரும் அறிந்த படங்களென்றால் ஹாரிபாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், தமிழில் நண்பன், விக்ரம், கரையெல்லாம் செண்பகப்பூ என நாம் அறியாத படங்கள் பல இருக்கின்றன.
பொதுவாக பதிவர்கள் அறிமுகப்படுத்தும் படங்களை அவர்கள் விமர்சனத்தை படித்துவிட்டுத்தான் அப்படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பேன், பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் நான் அவ்விதம் பார்த்ததுதான், சில நேரங்களில் எந்த அறிமுகமும் இல்லாமல் விக்கிபீடியாவில் எந்த வகையான படம் என்பதை மட்டும் பார்த்துவிட்டு தரவிறக்கம் செய்யும் பழக்கமும் உண்டு, அங்ஙனம் என்னையறியாமல் நான் பார்த்ததில் மிகவும் ரசித்தது இப்படம் “THE TIME TRAVELERS WIFE”
படத்தின் தலைப்பே நமக்கு படம் எத்தகைய கதைக்களத்தை கொண்டது என அறிவிக்கிறது, 6 வயதில் தாயுடன் காரில் செல்லும் ஒரு சிறுவன் பெரும் விபத்து நடக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைய துவங்குகிறான், 2 வாரங்களுக்கு முன்பாக அவன் வீட்டில் நடப்பதை அவனால் பார்க்க முடிகிறது. மீண்டும் விபத்து நடக்கும் இடத்திற்கு வந்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறான்.
அப்போது அவனை ஒரு இளைஞன் சந்தித்து எதிர்காலத்தில் இருந்து வருவதாகவும் அந்த சிறுவன் ஒரு டைம் ட்ராவலர் என்றும் கூறுகிறான், காலம் மாறுகிறது, எப்படி நடக்கிறது என தெரியாமல் காலவரையின்றி காலத்தை விட்டு இன்னொரு காலத்திற்கு அவன் பயணம் செய்து கொண்டே இருக்கிறான்.
அவ்வாறு செய்யும் போது அவன் உடல் மட்டுமே பயணிக்கும், அவன் அணிந்திருந்த உடை போகாது, எனவே புதிதாய் தோன்றும் இடத்தில் நிர்வாணமாகத்தான் இருப்பான், உடையை தேடி அலைய வேண்டிய கட்டாயம் இருக்கும். ஹீரோ ஒரு நூலகத்தில் வேலை பார்ப்பவன்.
ஒரு நாள் அங்கு வரும் ஒரு அழகிய பெண் அவனை சந்தித்து அவனை பற்றிய எல்லா விவரங்களையும் கூறி டின்னருக்கு அழைக்கிறாள், அங்கு ஏற்கனவே இருவரும் சந்தித்ததை கூறுகிறாள், அவளது சிறுவயதில் இருந்தே ஹீரோ எதிர்காலத்தில் இருந்து வந்து தன்னை சந்திப்பது பற்றி கூறுகிறாள்.
ஒரு அழகான நாளில் இருவருக்கும் திருமணம் ஏற்பாடாகிறது, திருமண நேரத்திற்கு சற்று முன்பாக ஹீரோ காலப்பயணம் மேற்கொண்டு விட, என்ன செய்வதென்று தெரியாமல் நண்பன் விழித்து கொண்டிருக்க எதிர்காலத்தில் இருந்து சற்று வயதான ஹீரோ வந்து திருமணம் செய்து கொள்வது சுவாரசியமாக இருந்தது.
அதே போல் முதல் இரவில் தன்னையறியாமல் காலப்பயணம் செய்து நாயகியின் சிறுவயதில் அவளை சந்தித்து, தான் யாரையோ கல்யாணம் செய்து கொண்டதாக சொல்லி அவளை வெறுப்பேற்றும் காட்சி  கவிதை.
எப்படிபட்ட காதலுக்குள்ளும் கொஞ்ச நாளில் சண்டை வரும்,  அதுவும் இது போல் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போகும் கணவனை கட்டிய பெண்ணின் நிலையை யோசித்து பாருங்கள். சண்டை வருகிறது, அம்மணி வேலைக்கு போக துவங்குகிறாள்.
எதிர்காலத்திற்கு சென்று வருக் நாயகன் ஒரு லாட்டரி டிக்கெட்டின் பரிசு நம்பரை கொண்டு வருவதன் மூலம் 5 மில்லியன் பரிசுத் தோகை கிடைக்கிறது. இருந்தும் ஒரு பெரும் குறை, எத்தனை முறை கருத்தரித்தாலும் கலைந்து போகிறது, சண்டை வருகிறது.
இப்படி ஒரு நாள் சண்டை போட்டு போகும் போது ஒரு சிறுமி இவர்களை சிரித்துக் கொண்டே பார்க்கிறாள், தன் மனைவிக்கு உடல் நலம் பாதிக்க பட கூடாது என்பதற்காக குடும்ப கட்டுபாடு செய்து கொள்கிறான், அந்த நாள்தான் கடந்த காலத்திற்கு சென்று முதன்முதலில் நாயகியை முத்தமிடுகிறான்.
இவ்வளவு நடந்தும் நாயகி கருத்தரிக்கிறாள், காரணம் இறந்த காலத்தில் இருந்து வரும் நாயகன். குழந்தை பிரச்சனையில்லாமல் பிறக்குமா என பயப்படும் நாயகன் எதிர்காலத்தில் தன் மகளை சந்தித்து அவள் பெயரையும் முடிவு செய்து கொள்கிறான், இன்னொரு ஆச்சர்யம் அவன் மகளும் ஒரு டைம் ட்ராவலர்.
சிவாஜி படத்தில் சொல்வது போல் “சாகிற நாள் தெரிஞ்சுட்டா வாழுற நாள் நரகமாய்டும்” என்பது போல் தன் மரணம் குறித்து தெரிந்து கொள்ளும் நாயகனின் நிலை, அவன் குடும்பத்தின் நிலை, எல்லாவற்றையும் மீறி அவர்களின் மனக் கஷ்டத்திற்கு அவ்வப்போது மருந்திடும் காலப்பயணம் என படம் உண்மையில் காதல் கவிதை.
புத்தகமாக வந்து வெற்றி பெற்ற கதையினை எவ்வளவு அழகாக படமெடுத்திருக்கிறார்கள்? உண்மையில் புத்தகமாக படிக்கும் போது எப்படி இருந்திருக்கும் என தோன்றுகிறது. உண்மையில் படத்தின் பாதிப்பு எனக்கு இரண்டு நாளாக இருக்கிறது.
உலக காதல் சினிமாக்களை ரசிப்பவர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம், முடிந்த வரை தனிமையிம் அல்லது காதலியுடன் பாருங்கள், உள்ளம் நெகிழ்வதை உங்களால் உணர முடியும்.
படத்தின் ட்ரெய்லர்