ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம் – ஸ்ரீதர் சுப்ரமணியம்

சமூக வலைத்தளங்கள் எதற்காகத் துவங்கப்பட்டன என்பதை விட அது தற்போது எவ்வளவு பெரிய சக்தியாக உலகைக் கட்டுப்படுத்துகிறது என்பது சமீபத்திய முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது. ஊர் திருவிழாக்களின் போது ஒவ்வொரு சாதிக் குழுக்களின் தலைவர்களைக் கூப்பிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த கலவரமும் செய்யமாட்டேன் என எழுதி வாங்குவதைப் போல் ஒவ்வொரு நாட்டுத் தேர்தலின் போதும் மார்க் ஸூக்கர்பெர்க் இதில் எந்த தலையீடும் செய்யமாட்டேன் என உறுதியளிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சமூக வலைத்தளங்களின் உதவியுடன் தான் மோடி 2014ல் பிரதமரானார். அதன் பின் சமூக வலைத்தளங்களின் போக்கே மாறியது.

2014 வரை மோடி பக்தனாக இருந்த எனக்கு ஒரு கட்டத்தில் மோடியை ஆதரிப்பவர்களின் பேச்சில் எப்போதும் “நாம்-அவர்கள்” என்ற தொனி மிக வெளிப்படையாகப் பயன்படுத்தப் பட்டது. அதில் அந்த அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாகத்தான் இருந்தார்கள். பின்னர் கம்யூனிஸ்ட்டுகள், அடுத்து திராவிட ஆதரவாளர்கள், அவர்களுக்குக் காங்கிரஸ் ஒரு பொருட்டாகவே இருந்தது இல்லை.

வெறுமனே பள்ளியில் தேர்வுக்கு மட்டும் படித்துவிட்டு, வாசிப்பிற்கு சுஜாதா, பாலகுமாரனைத் தாண்டாத வயதில் சங்கர் படம் போன்ற ஒரு திடீர் மாற்றம் வந்து அப்துல்கலாம் ஆசைப்பட்ட வல்லரசு இந்தியா பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் பாஜகவிற்கு வாக்களித்தவர்களில் பாதிப் பேருக்கு “ஏதோ தப்பா இருக்கே” என்ற உணர்வு வருவதற்குள் தமிழ்ச் சமூக வலைத்தளங்களில் வெறுப்பரசியல் புரையோடிப் போயிருந்தது. ஒரு சம்பவம் என்றால் மோடிக்கு ஆதரவாக பற்பல பதிவுகள் கண்ணில் படும், ஒன்று கூட உண்மையானதாக இருக்காது, அதே சமயம் அத்தனையிலும் மதம் கலந்தே இருக்கும். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2016க்கு பிறகே, துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகே தமிழ்ச் சமூக வலைத்தளங்களின் போக்கு மாறியது. ஆளும் மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் நின்ற காலம் அது. பலரது நிஜ முகங்களை அடையாளப்படுத்திய நேரம் அது.

அப்போது முதல் அரசியல் பதிவுகளில் ஒரு மாற்றம் தென்படத் துவங்கின. என்னவென்றால் தரவுகளை முன்வைப்பது. மத அரசியல் பேசும் யாரிடமும் எந்த ஆதாரமும் இருக்காது. சூரிய ஒளியைக் கண்ட இரத்த காட்டேறிகளைப் போல மத அரசியல் பேசுபவர்களை ஓடச் செய்யும் ஒரு வஸ்துவா தரவு(டேட்டா) இருந்தது. அதைத் தனது பதிவுகளில் வெகு சிறப்பாகக் கையாளும் ஒரு நபராக ஸ்ரீதர் சுப்ரமணியம் முக நூலில் பிரபலமானார். அவருடைய மூன்றாவது புத்தகம்தான் இந்த “ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்”.

1976, 42வது சட்டத்திருத்தத்தின் படி இந்திய அரசியலமைப்பின் முகப்புரை திருத்தப்பட்டது. அதுதான் முதலும் கடைசியுமான முகப்புரை திருத்தம். அதில் மூன்று வார்த்தைகள் இந்தியாவை வரையறுப்பதற்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டன. “சமதர்ம, சமய சார்பற்ற, ஒருமைப்பாடு” கொண்ட நாடு இந்தியா. இதில் சமய சார்பற்ற, அதாவது செக்யூலரிசம் என்பது குறித்தான நூல்தான் இது.

படித்த பலருக்கும் கூட அறியாமையால் பொது புத்தியாக சில தவறான தகவல்கள் கற்பிக்கப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு இந்தியாவின் தேசிய மொழி இந்தி. அதே போலத்தான் இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருப்பது முழுக்க முழுக்க சிறுபான்மை மதங்களான கிறித்துவ & இஸ்லாமியத்தின் வளர்ச்சிக்காகத்தான். அதன் மூலம் நாம் இழந்தவைகள்தான் அதிகம். மீண்டும் பழையபடி நம் தேசத்தை இந்துமயமாக்க வேண்டும். அகண்ட இந்து பாரதத்தை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட கருத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்கள் அனைவரது மனதிலும் நஞ்சூட்டப்பட்டுக் கொண்டே இருக்கிற இந்த நேரத்தில் மதச்சார்பின்மை பற்றிய இந்த புத்தகம் மிக மிக மிக அவசியமான ஒன்றாகிறது.

புத்தகத்தில் மொத்தம் ஐந்து பாகங்கள்

  1. செக்யூலரிசம்
  2. இந்துத்துவ புகார்கள்
  3. மதங்கள் – சில சிந்தனைகள்
  4. இந்துத்துவ பெருமைகள்
  5. செக்யூலரிசத்தின் சாதகங்கள்

முதலில் மதச்சார்பின்மை என்றால் என்ன? மத அடிப்படைவாதம் என்றால் என்ன என்று பள்ளி மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்குகிறார்.

அடுத்துத்தான் மிக முக்கியமாக “இந்துத்துவ புகார்கள்” பகுதி. ஏன் இதை முக்கியம் எனச் சொல்கிறேன் என்றால் ரோபோக்களில் சில விதிகள் புரோகிராம் செய்யப்பட்டுத் தயாரிக்கப்படுவதைப் போல, இந்துத்துவ ஆதரவாளர்களுக்கும் சில கேள்விகள் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் எந்த இந்துத்துவ வாதியைச் சந்தித்துப் பேசினாலும் ஒரே பல்லவியைத்தான் பாடுவார்கள். ஒரே விதமான கேள்விகள், ஒரே விதமான பதில்கள்தான் அவர்களிடமிருந்து கிடைக்கும். உதாரணத்திற்குச் சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். பிரிட்டிசாரின் சதி என்று பதில் கிடைக்கும். அது தவறான பதில் என்று நிரூபித்து விட்டால் அவரிடமிருந்து வேறு எந்த பதிலும் உங்களுக்குக் கிடைக்காது. அப்படி முழுக்க முழுக்க இந்துத்துவ வாதிகளால் சிறுபான்மையினரை நோக்கியும், மதச்சார்பின்மையை நோக்கியும் எழுப்பப்படும் புகார்களுக்கு எளிமையாகவும், விளக்கப்படங்களுடனும் பக்கா தரவுகளுடனும் பதிலளிக்கிறார். அதில் மிக முக்கியமானது காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்த கட்டுரை.

அடுத்து மதங்கள் – சில சிந்தனைகள் பகுதியை வாசிப்பதற்கு முன் சிறு அடிப்படை அறிவியல் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். என்னவென்றால் பெரிதாக ஒன்றுமில்லை. மனிதன் குரங்கிலிருந்து வந்தது, ஆப்பிரிக்காவிலிருந்து பூமியெங்கும் பரவியதும் பற்றித் தெரிந்திருந்தால் போதுமானது. அது புரிந்திருந்தாலே மதங்கள் என்பவை வாழ்வியல் ஒழுக்க விதிகளுக்காக, கடவுள் என்பவரை உருவாக்கி எழுதப்பட்ட சட்டங்கள் என்பது புரியும். சுருக்கமாகச் சொன்னால் ஏன் எப்படி உலகில் இத்தனை மதங்கள் என்று முன் கூட்டியே யோசித்திருந்தால் போதுமானது.

இந்த பகுதியில் இந்துத்துவத்தின் தேசபக்தி என்ற கட்டுரை மிக முக்கியமானது. தேசபக்தி என்பது தேசியக்கொடியையும் தேசிய கீதத்தையும் நேசிப்பது மட்டுமல்ல. தேசத்தில் வாழும் மக்களை நேசிப்பது என்ற புரிதல் வேண்டும். முழுக்க தேசத்திற்கு எதிரான சிந்தனைகள் கொண்ட ஒரு கூட்டம், பல தசாப்தங்களாக தேசியக் கொடியைப் புறக்கணித்த ஒரு கூட்டம் இன்று நாட்டிற்குத் தேசபக்தியைப் பற்றி வகுப்பெடுக்கிறது.

இந்துத்துவ பெருமைகள் என்ற பகுதி மிக முக்கியமானது. இதற்கு முன்பு வரை இந்துத்துவம் கேட்கும் கேள்விகளுக்குத் தரவுகளோடு பதிலளித்து விட்டு, இப்பகுதியில்தான் இந்துத்துவத்தினை நோக்கி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இறுதியாக செக்யூலரிசத்தில் சாதகங்கள். அறிவியல், பொருளாதாரம், மருத்துவம், சமூக முன்னேற்றத்தில் செக்யூலரிசத்தின் தேவையானது எவ்வளவு இன்றியமையாதது என்பது வரைபடங்களோடே விளக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரைக்கும் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது, அதற்கு உதவியாகக் குறிப்பிட்டுள்ள புத்தக பட்டியலைப் பார்க்கும் போதே தெரிகிறது. ஏதேனும் ஒரு புத்தகமாவது அதில் இருப்பதை வாசித்திருப்பேனே எனத் தேடிப் பார்த்ததில் “சேப்பியன்ஸ்” மட்டும் தான் காப்பாற்றியது.

எண்ணிப் பார்த்தேன். மொத்தம் 50 இடத்திற்கு மேல் எங்கிருந்து தகவலை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் 35க்கு மேல் புத்தகங்கள், அதன் பின் ஆய்வுக்கட்டுரைகள், தலைவர்களின் உரைகள், அரசாங்க தரவுகள் எனக் கொடுத்துள்ளார். சேப்பியனை தவிர்த்து மீதமுள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதற்காகக் குறித்து வைத்துள்ளேன்.

இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டுமா என்று கேட்டால் கட்டாயம் வாசியுங்கள். அதை விட முக்கியம், தெரிந்தவர்கள் யாரேனும் மத அடிப்படைவாதம் பேசினாலோ அல்லது அதை நோக்கி நகர்வது தெரிந்தாலோ அவருக்கு இந்த புத்தகத்தைப் பரிசளியுங்கள். குறிப்பாக இளந்தலைமுறைகளுக்கு இந்த நூல் கட்டாயம் போய்ச் சேரவேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் இந்த நூலை உங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது இந்தியா என்னும் மதச்சார்பற்ற தேசத்திற்கு நீங்கள் ஆற்றும் சேவை என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

என்னிடம் இந்த புத்தகத்தின் இன்னொரு பிரதி இருக்கிறது. தெரிந்த தம்பி ஒருவர் தனது வாட்சப் டிபியாக அண்ணாமலை படத்தை வைத்திருந்தார். அவருக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்ல இருக்கிறேன்.

எழுத்தாளரது “ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்” வாசித்து விட்டேன். “பாதி நிரம்பிய கோப்பை” கைவசம் இருக்கிறது. இனிதான் வாசிக்க வேண்டும்.