முள்ளம்பன்றிகளின் விடுதி – அய்யனார் விஸ்வநாத்

முன்னுரையில் சாரு சொல்லியிருப்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்தது. சிறுகதைகளுக்கான காலமும் களமும் தற்போது இல்லை. என்ன எழுதி விட முடியும் சிறுகதையில்? விரும்புவதை சமூக ஊடகங்களில் இன்னும் சுருக்கமாக எழுத பழகியாகிவிட்டது. ஆழமான உணர்வுகளுக்கு நாவல் வடிவம் போதுமானதாக இருக்கிறது. இந்த எண்ணங்களினாலேயே சிறுகதை வாசிப்பை விட்டு நகர்ந்து வந்து விட்டேன். நண்பர்கள் வாசிக்கச் சொல்லிக் கொடுக்கும் அவர்களது சிறுகதைகளைக் கூட வாசிப்பதில்லை. இரண்டு நாட்களாகத்தான் மானசீகன் தினம் ஒரு சிறுகதை வாசிப்பை முன்னெடுத்திருப்பதால் வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். இந்த புத்தகம் மீண்டும் என்னைச் சிறுகதைகளை நோக்கி நகர்த்துகிறது.

1.முள்ளம்பன்றிகளின் கதை.

புத்தகத்திற்குத் தலைப்பாக வைக்கப்படும் சிறுகதைதான் அந்த புத்தகத்தின் சிறந்த சிறுகதையாக இருக்கும் என்பது அறிந்த விசயம் தான். அதை நிரூபிப்பது போலவே இந்த கதை புத்தகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. அறிவியல் புனைவு என்று சொல்லப்பட்டு இருக்கிறதே, என்னவாக இருக்கும் என வாசிக்க ஆரம்பித்தால் அதிகம் மனித உறவுகள், மன உணர்வுகள் என்றுதான் சென்றன. ஆனால் இடையிடையே கதை பேசி இருக்கும் அரசியல் மிக முக்கியமானது. எதிர்காலத்தில் அரசு என்னும் அதிகார மையம் நம்மை எப்படி எல்லாம் கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் என இலைமறைகாயாகச் சொல்லி இருக்கிறார். அதிலும் சுதந்திரத்திற்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பதைச் சொல்லும் இடம் அற்புதம். அறிவியல் புனைவு சிறுகதைகளில் இக்கதை பெரும் பாய்ச்சல்.

2. சமீபத்திய மூன்று சண்டைகள்

கணவன் மனைவி இடையிலான சண்டைகளை நான் லீனியரில் சொல்லி இருக்கும் இக்கதை, கிட்டத்தட்ட தற்போதைய தலைமுறை தம்பதிகளின் மணவாழ்க்கையைப் படம் பிடித்துத் தந்துள்ளது என்றே சொல்லலாம். கதையின் கடைசிக் கட்டத்தை வெகுவாக ரசித்தேன்.

3. ஈரப் பன்னீர்ப்பூ

அழுதுவிட்டேன். ஏன்னா இது என்னுடைய வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டு வந்தது. இக்கதை சொல்லும் உணர்வு எத்தனை பேருக்கு புரியுமென்று தெரியலை.

4. மல்லிகா அத்தை

கதையின் முடிவு பெரிய திருப்பமாக எனக்குப் படலை, ஆனால் ஒரு சிறுவனுடைய மனப்போக்கை ரொம்ப இயல்பா வெளிப்படுத்தி இருந்தார். அதை நிறைய ரசித்தேன்.

5. தில்லி 06

இந்த கதையுடைய இறுதியில் பயங்கரமா சிரித்தேன். ஆரம்பத்தில் பெருசா என்னை ஈர்க்கவில்லை. ஆனால் கிளைமாக்ஸ் சிரிக்க வச்சுருச்சு.

6,7,9. கினோகுனியா, சமவெளி மான், காட்சிப் பிழை

இந்த நான்கு கதைகளும் மேஜிக்கல் ரியலிசம் வகையில் எழுதப்பட்டுள்ளது. எனக்கு இது போன்றவற்றைப் புரிந்து கொள்வதில் போதாமை உள்ளது. இது கடத்த வரும் உணர்வு எது என்பதில் குழப்பம் ஏற்படும். அதை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும். அதனாலேயே எனக்கு இவ்வகை கதைகள் மீது பெரிய ஆர்வமில்லை. சமவெளி மானின் கதையை விரித்து ஓரிதழ்ப்பூ நாவலாக எழுதியிருக்கிறதாகக் குறிப்பிட்டுள்ளார். கண்டிப்பாக அதனை வாசிப்பேன்.

8,13,14. நீலகண்டப்பறவை, ராவண சீதா, பவழமல்லிப் பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்

இந்த மூன்று கதைகளும் கிட்டத்தட்ட ஒரே கதையின் மூன்று பகுதிகளாகத்தான் எனக்குப் பட்டது. ஏனென்றால் மூன்றிலும் ஒரே கதைசொல்லிதான். தன் வாழ்வில் வந்த மூன்று பெண்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். ராவண சீதாவை வெகுவாக ரசித்தேன். அதிலும் “கருத்த பெண்களும் கனத்த முலைகளும்” இடம் அட்டகாசம்.

10. எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை

இது போன்ற பெண் ஒருத்தியை என் வாழ்வில் கடந்து வந்திருக்கிறேன். படிக்கையில் அட நாம் கூட அவளைப் பற்றி எழுதி இருக்கலாமே எனத் தோன்றியது. கதையின் முடிவு அருமை. அதிலும் எண்களைக் குறிப்பிடுவது அட்டகாசம்.

11. மூங்கில் மலரும் பெயரற்ற நிலங்களின் கதை

அட்டகாசம். எப்படி இப்படி யோசிக்க முடிந்தது என்றே தெரியவில்லை. நாம் கொஞ்சம் கூட யூகிக்க முடியாத கதைக் களத்தை எடுத்தது கூட பரவாயில்லை. அந்த கதை முடிவு, யப்பா சாமி, எப்படிய்யா இந்த கதையை எழுதுன? செம செம செம.

12. சரக்கொன்றையின் கடைசி தினம்.

முள்ளம்பன்றிகளின் விடுதி கதையைப் போலத்தான். அறிவியல் புனைவையும் மனித உணர்வுகளையும் இணைத்து எழுதப்பட்ட கதை. அறிவியல் புனைவுகளில் அரசியலை இணைப்பதைத்தான் பெரும் வெற்றி என்பேன். இதுவும் அறிவியல் புனைவில் ஒரு புதிய திறப்பு.

ஸீரோ டிகிரியின் எழுத்து பிரச்சாரம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. அட்டைப்படமும் சரி, புத்தகமும் சரி மிக அருமையாக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

கதாபாத்திரங்களின் பெயர் தேர்வுகள் அனைத்தும் தமிழ்ப் பெயர்களாக மிக அழகாக இருந்தன. அவற்றை இரசிக்காமல் கடக்க இயலவில்லை. எழுத்தாளரது “ஹப்பி” புத்தகத்துடன் சேர்த்துக் கடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன்.

அய்யனார் விஸ்வநாத் கண்டிப்பாகத் தமிழ் எழுத்துலகில் தவிர்க்க இயலாதவராக வளர்வார் என்றே எனக்குத் தோன்றுகிறது.