பருவம் – எஸ்.எல்.பைரப்பா

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வளரும்போதே இயல்பாய் ஊட்டப்படும் கதைகள் இராமாயணமும் மகாபாரதமும். தமிழர்களே கூட ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய அறிமுகம் இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் இந்தியர்கள் கட்டாயம் இந்த இதிகாசங்களை அறிந்திருப்பார்கள். ஒருவேளை வாழும் காலத்தில் நேரம் கிடைக்கவில்லை என்றாலும் ஓய்வான காலத்தில் இதை நோக்கித்தான் அவர்களது தேடல் இருக்கும். அப்படிப்பட்ட இதிகாசங்களில் எனக்கு இராமாயணத்தை விட மகாபாரதம் தான் மிகவும் பிடிக்கும்.

சிறுவயதில் கோவில் திருவிழாக்களில் பார்த்த தெருக்கூத்துகளில் துவங்கும் இந்த கதை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் துளியும் அலுக்கவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் புதிதாக சொல்கிறார்கள். கூத்தில் இருந்து, சினிமா, சீரியல் என பார்த்தும் புத்தகங்களில் படித்தும் கேட்ட கதைகள் முற்றிலும் வேறு ஒரு கதையாக சொல்லப்பட்டால் அதை விட வேறு எது சுவாரசியம் தந்து விடப்போகிறது?

இதற்கு முன்பு “இரண்டாம் இடம்” நாவல் வாசித்திருந்தேன். அது மொத்த மகாபாரதத்தையும் வேறு கோணத்தில் காட்டியது என்றால் இந்த “பருவம்” தலைகீழாக புரட்டி விட்டது என்றே சொல்லலாம். 927 பக்க நூலை, தினம் 100 பக்கங்களாக நிதானமாக இரசித்து வாசித்தேன்.

பருவம் – Dial for Books

கதை துவங்கும் பொழுதே நூறு வயது கடந்த மத்ர தேசத்து அரசன் சல்லியனிடம் இருந்து தொடங்குகிறது. இதுவரை படித்த மகாபாரதங்களில் போரில் துணைப்பாத்திரமாக வந்த சல்லியனைக் கொண்டு கதையை துவங்குவதே வித்தியாசமாக இருந்தது. அதுவும் அவரது வயது. குரு நாட்டில் யுத்தம் வர வாய்ப்பிருக்கிறதாம் என காற்றுவாக்கில் வரும் செய்திக்கு அவர்களின் எதிர்வினை என புதிய கோணம்.

என்னதான் அரசனாக இருந்தாலும் பேத்திக்கு சுயம்வரம் நடத்த வசதி இல்லாமல் இருப்பதே புது தகவல். அவளின் திருமணத்தினை மனதில் கொண்டே போரில் கலந்து கொள்கிறார். இப்போது மேடைக்கு மேடை பாரத கலாச்சாரம் என்று ஒற்றைத்தன்மையை நிறுவ முயற்சிப்பது போல் அப்போது இல்லை. முழுக்க ஆரியர்களே இருந்தாலும் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் ஒவ்வொரு வித கலாச்சாரம். ஒரு பகுதியில் பெண்ணுக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வரலாம். இன்னொரு பக்கம் பெண் வீட்டார் கொடுப்பார்கள். வடக்கே சென்றால் சகொதரர்களுக்கு பொது மனைவி முறை என ஏகப்பட்ட வகைகளில் வாழ்வியல் முறைகள்.

அப்ப்டியே கதை 80 வயதினைக் கடந்த குந்தியின் பார்வையில் நகர்கிறது. தன் பிள்ளைகளுக்காக கிருஷ்ணன் சமாதான தூது வந்திருக்கையில் ஆற்றங்கரையோரம் அமர்ந்திருந்து, தன் மொத்த வாழ்வினையும் ஒருமுறை ஓட்டிப் பார்க்கிறாள். நாம் சினிமா/சீரியல்களில் பார்த்தது போல் ஒரு மந்திரத்தை சொன்னால் குழந்தை பிறக்கும் லாஜிக் மீறல்கள் எதுவுமில்லை.

இளமையும் அழகும் கொண்ட பாண்டுவினை மணந்து வரும் குந்தி & மாதுரி இருவருமே எந்த குறையும் இல்லாதவர்கள். ஆனால் சிறுவயதிலேயே நூற்றுக்கணக்கான பணிப்பெண்களுடன் ஆட்டம் போட்ட பாண்டு சுத்தமாக வீரியம் இழந்திருக்கிறான். வடக்கே இமயமலை அடிவாரம் சென்று பர்ணசாலை அமைத்து, வைத்தியம் செய்து கொள்ள முயல்கிறான். ஆனால் அவன் காட்டுக்கு வந்ததும் அவனது பார்வையற்ற அண்ணனுக்கு காந்தாரியுடன் திருமணம் நடக்கிறது. அவனுக்கு முதலில் குழந்தை பிறந்தால் அரசாட்சி மூத்த குழந்தைக்கு செல்ல வேண்டும் என்பதால் நியோகம் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கிறான் பாண்டு.

நியோகம் என்றால் கணவனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழலில் வேறு ஒருவரிடம் இருந்து விந்துவை தானமாக பெறுவதுதான். ஆனால் அந்த காலத்தில் அறிவியல்முறைகள் இல்லாததால் நேரடியான உடலுறவில் ஈடுபட வேண்டி இருக்கும். ஆனால் அது ஒரு பூஜை போலத்தான் நடக்கும். விதிமுறைகளை கவனியுங்கள்.

  • நியோகம் பெரும்பாலும் பிராமணர்களால் தான் செய்யப்பட வேண்டும். சமயங்களில் கணவனின் உறவினர்களும் ஈடுபடுத்தபடுவார்கள்.
  • குழந்தைக்காக என்பதை தவிர இருவரிடையே வேறு எந்த உணர்வுகளும் இருக்க கூடாது
  • கூடலின் போது கூட மனைவி, கணவன் குறித்தே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்
  • கரு உண்டாகும் வரை தொடர்ச்சியாக கூடலாம். அதன் பின் அவரை தந்தையாக நினைத்து வணங்கி, அவரிடமிருந்து விலகி விட வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாண்டு நியோகம் செய்ய முடிவெடுத்த பொழுது, அவர்களுடன் இருக்க வேண்டிய பிராமணர் ஊருக்கு சென்றிருப்பார். அதனால் அருகிலுள்ள தேவலோகத்தில் உள்ள தர்மஅதிகாரியை உதவி கேட்க, பாண்டவர்களின் மூத்தவனான தர்மன் பிறப்பான். அடுத்து வலிமைக்காக தேவர்களின் தளபதி, அதே போல் அடுத்து தேவர்களின் தலைவன் இந்திரன் நியோகம் செய்து பீமன், அர்ச்சுனன் பிறப்பார்கள். இரட்டை சகோதரர்களான அஸ்வினி வைத்தியர்களுடன் கூடி மாதுரி நகுலன், சகாதேவனை பெற்றெடுப்பாள்.

தேவலோகம் என்றதும் வானத்தில் இருக்கும் என நினைக்க வேண்டாம். இமயமலைக்கு மேலே இருக்கும் தேவர்கள் என்ற இனக்கூட்டம் வாழும் இடம் தான் தேவலோகம். அங்கு முப்பது இனக்குழுக்கள் இருக்கும். யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கூடலாம். நாம் முப்பத்து முக்கோடி தேவர்கள் என சொல்வது இவர்களைத்தான்.

அதே சமயம் திருதராட்டினுக்கு துரியோதனன் பிறந்திருப்பான். அடுத்தடுத்து கௌரவர்கள் பிறந்திருப்பார்கள். மகாபாரத கதை அனைவரும் அறிந்தது தானே? சுவாரசியம் என்னவென்றால் யார் யாருடைய பாணியில் விவரிக்க படுகிறது என்பதுதான்.

அடுத்து பீமன் பார்வையில் கதை துவங்கும். சினிமா/சீரியலில் பார்த்தவர்களுக்கு ஒரு தோற்றப்பிழை இருக்கும். என்னவெனில் தொலைவினை அவர்கள் உணரவே வாய்ப்பில்லை. இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் நடமாட எத்தனை நாட்கள் தேவை என யோசியுங்கள்? அஸ்தினாபுரம்-விராடதேசம்-மத்ரதேசம்-துவாரகை இது அத்தனையுமே குறைந்தது 15 நாட்கள் பயணம் தேவைப்படக்கூடிய தொலைவில் இருக்கும் இடங்கள். அதேபோல் கதை மாந்தர்களின் வயது. கர்ணன் படம் பார்த்தவர்களுக்கு கடைசிவரை சிவாஜிக்கு வயதே ஆகாததை பற்றி யோசிக்கவே வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் மகாபாரதத்தின் படி குந்திக்கு 15 வயதில் பிறக்கும் கர்ணனுக்கு, குருஷேத்திரம் துவங்குகையில் 65 வயது ஆகியிருக்கும். பேரன் பேத்தி எடுத்திருப்பான். அதை விட விஜய் டீவி சீரியல் பார்த்தவர்கள் பலமாய் ஏமாந்திருப்பதும் இந்த உருவத்தில் தான். அனைத்து பாத்திரங்களும் சிக்ஸ் பேக்கிலேயே மனதில் தங்கும். ஆனால் நிதர்சனம் என்ன?

காலங்கள் உருண்டோட முதுமையும் வருமே…! சூதில் தோற்ற நாட்டினை திரும்ப கேட்க வருகையில் பாண்டவர்கள் அனைவரும் 50ஐ தாண்டி இருப்பார்கள். பாஞ்சாலிக்கு நரை விழ துவங்கி இருக்கும். அனைவருக்கும் மூத்தவனான கர்ணனுக்கு பற்களே விழ துவங்கி இருக்கும். அந்த நிலையில்தான் இவர்கள் அனைத்து நாட்டினரையும் திரட்டி யுத்தத்தை தொடங்குவார்கள்.

யுத்தத்தையும் திரையில் பார்த்த நமக்கு இந்த புத்தகம் பல அதிர்ச்சிகளை கொடுக்கும். முதலில் யுத்தமெனில் மகாராணி ஆரத்தி எடுத்து வெற்றித்திலகமிட்டு அனுப்புவார்கள். வீரன் அடுத்த ஷாட்டில் இரதத்தில் இருந்து அம்பெய்து கொண்டிருப்பான். ஆனால் நிஜம் என்ன? அனைவருமே கிளம்பி நகருக்கு வெளியே ஏதோ ஓரிடத்தில் கூடாரமிட்டு தங்கி போரிட வேண்டும். அங்கு உணவு கூட சமாளித்து விடலாம். தண்ணீர்? அதுவும் இயற்கை உபாதைகளுக்கு?

முதல் நாள் பெரிதாக இருக்காது. அடுத்தடுத்த நாள் மரணபயத்தில் பேதியாகும் இலட்சகணக்கான வீரர்கள் நிறைந்த அந்த இடத்தின் சுகாதார நிலை எப்படி இருக்கும் என யோசிக்க முடிகிறதா? அந்த நாற்றத்தில் உண்ண முடியுமா? உறங்க முடியுமா? இதில் என்ன இலட்சணத்தில் போரிட முடியும்? இது போன்ற பல யதார்த்த சிரமங்களை வெளிப்படையாக சொல்வதுதான் இந்த புத்தகத்தின் முதல் நல்ல விசயம்.

அடுத்து மனிதர்களின் உணர்வுகளை பேசுவது. பீமனின் பார்வையில் கதை செல்கையில் அவன் வாழ்வில் வந்த பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டே அப்படியே மற்றவர்கள் குறித்தும் யோசிக்கிறான். ஏற்கனவே இரண்டாம் இடம் நாவல் பீமனின் பார்வையிலான கதை என்றாலும் இது கொஞ்சம் மாறுபடும். அடுத்து துரௌபதியின் பார்வை. நான் மிகவும் இரசித்த பகுதி இது. கண்டு காதலித்த அர்ச்சுனனிடமிருந்த அவள் காதலும் நேசமும் பீமன் பக்கம் திரும்பும் இடம் அவ்வளவு அருமையாக இருக்கும்.

இந்த புத்தகத்தில் எனக்கு முழுவதும் புதியதாய் இருந்தது கிருஷ்ணன் பற்றி அவனது யாதவ நண்பன் யுயுதானன் பார்வையில் கதை சொல்லப்படும் பகுதி. மனிதனாக காட்டினாலும் இவனை போல் தந்திரசாலி யாருமில்லை என அனைவரும் போற்றும் கிருஷ்ணன் வாழ்வானது முற்றிலும் புதிய கோணத்தில் மிகவும் இரசிக்கத்தக்க வகையில் இருந்தது.

அடுத்து அர்ச்சுனன் பார்வையில் போய்விட்டு, பேரன் பேத்தி எடுத்த கர்ணன் தாத்தா பார்வையில் வருகையில் எழுந்து அமர்ந்து விடுவோம். கர்ணன் தாத்தாவா? விஜய் டீவி மகாபார்தம் சீரியலில் பலருக்கு கர்ணனாக நடித்தவரை பிடித்திருக்கும். ஆனால் என்ன செய்ய? யுத்தம் நடக்கையில் கர்ணன் தாத்தாதான். பேரன் பேத்தி என்றால் அவருக்கு உயிர். இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள நம் மனம் போராடுவதில் இருக்கிறது எழுத்தாளரின் வெற்றி.

விதுரன், திருதராட்டிரன், பீஷ்மர், துரோணாச்சாரியார், வியாசர் என ஒவ்வொருவர் பார்வையிலும் அவர்களது வாழ்வினை சொல்லிக் கொண்டே மகாபாரத கதையினையும் அட்டகாசமாக சொல்லி செல்கிறார் எழுத்தாளர். அதிலும் குருஷேத்திரத்தை நெருங்கியதும் கதை கிளாசிக் தன்மையாக மாறுகிறது. ஒவ்வொருவரும் தன் வாழ்வின் முடிவினை குறித்து யோசிக்க துவங்குவது அருமையாக இருக்கும். அதுவும் பீஷ்மரின் முடிவு கவித்துவம்.

யுத்தத்தினை சுருக்கமாக சொன்னாலும் நாம் இதுவரை கேட்ட ஜாலங்களை சில்லு சில்லாய் நொறுக்குகிறார். பீமன் கௌரவர்களை கொல்வது மட்டும்தான் இதுவரை நாம் கேட்ட பாணியிலேயே இருக்கிறது. மற்ற அனைத்தும் புதிய கோணம்தான்.

யுத்தம் நிறைவு பெற்ற பிறகு நான் லீனியர் பாணியில் ஒவ்வொரு இடத்திலும் நிகழ்வதை சொன்ன இடம் அட்டகாசம். அப்படியே இதே முறையை ஒத்துதான் ஜெயமோகன் விஷ்னுபுரத்தின் இறுதியை வைத்திருப்பார். ரெண்டும் வெவ்வேறுதான். ஆனால் எனக்கு இரண்டும் ஒரே விதமான் உணர்வினை கொடுத்தன என சொல்கிறேன்.

ஆரியர்களுக்கிடையே நிகழ்ந்த இந்த யுத்தமானது பாரதத்தின் வரலாற்றினை, கலாச்சாரத்தை மாற்றி, புதிய இனக்கலப்புகளை உருவாக்கியது. அனைவரும் புனிதமாக கருதும் மகாபாரதத்தை சிரிக்காமேலேயே வைத்து செய்திருக்கிறார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இந்த நூலை பற்றி மட்டுமே அவ்வளவு எழுதலாம். ஆனால் இதெல்லாம் வாசித்து அனுபவிக்க வேண்டிய நூல். அதனால் சுருக்கமாக முடித்து கொள்கிறேன்.

மகாபாரதம் விரும்புபவர்கள் கட்டாயம் இந்த நூலினை வாசிப்பீர்கள் என்பது உறுதி. தவிர்க்கவே முடியாது. எஸ்.ராவின் இந்த கட்டுரை உங்களுக்கு உதவக்கூடும். https://www.sramakrishnan.com/?p=3337

இதையெல்லாம் முடித்தவர்களுக்கு ஜெயமோகனின் வெண்முரசு இருக்கிறது. அதற்கு பிறகு அசல் மகாபாரதத்தினை ஒருவர் தமிழில் மொழிபெயர்த்து ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதை வாசிக்கலாம். மகாபாரதம் பற்றி மட்டுமே நிறைய பேசலாம். அது ஒரு கடல். அவ்வளவுதான்.

இந்த நூல் வாசிக்கையில் எனது வாசிப்பனுபவங்களை மீம் வடிவில் கொடுத்துள்ளேன். அதற்கான இணைப்பு https://www.facebook.com/kathir.rath/media_set?set=a.10219862066436248&type=3