விசாவுக்காக காத்திருக்கிறேன் – டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

நடிகர் சத்யராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது சொல்லியிருப்பார். தன் காதலி லைலாவின் அழகை எப்போது பார்த்தாலும் புகழ்ந்து கொண்டே இருக்கும் மஜ்னுவினால் தூண்டப்பட்ட ஊர்மக்கள் அவளைக் காண்பதற்காகக் காத்திருக்கிறார்கள். அவளை நேரில் பார்த்த பொழுது அவள் சராசரி அழகுடன் இருக்கவும் இவளையே உச்சமாக வர்ணித்தாய் என்ற கேள்வியினை எழுப்பினார்கள். அதற்கு மஜ்னு, லைலாவின் அழகினை காண உங்களுக்கு மஜ்னுவின் கண்கள் தேவை. அதே போல இந்தியாவின் சாதிக்கொடுமைகளைக் காண உங்களுக்கு அண்ணல் அம்பேத்கரின் கண்கள் தேவை. இப்படி அவர் சொல்வதன் பொருளாக நான் எடுத்துக் கொள்வது அம்பேத்கரைப் போல மெத்தப் படித்தும், பணம் படைத்தும் சாதியின் பெயரால் அடக்குமுறைக்கு வேறு யாரும் ஆளாகி இருக்க மாட்டார்கள் என்பதால் இருக்கலாம்.

உலகம் முழுக்க ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு பெயரால் அடக்குமுறை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பிறப்பைக் காரணமாகச் சொல்லி சாதியின் பெயரால் நடக்கும் அடக்குமுறையினை உங்களால் வெளி நாட்டவருக்குப் புரிய வைக்க முடியுமா? முதலில் நம் நாட்டினருக்கே புரியுமா என்று தெரியவில்லை. சாதியின் அடக்குமுறை தெரிந்தால் எவனாவது பெருமையாக மீசையை முறுக்கித் தான் இன்ன சாதி என்று சொல்வானா? அது மூடத்தனத்தின் வெளிப்பாடு மட்டுமே.

டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்! | வினவு

இந்தியாவின் சாதிக் கொடுமைகளை விளக்க அண்ணல் தன் வாழ்விலிருந்து 4 சம்பவங்களையும் சமகாலத்தில் வேறு இருவருக்கு நடந்த 2 சம்பவங்களையும் சொல்வதுதான் இச்சிறு நூலின் சாரம்சம்.

அரசுப் பணியில் வெளியூரில் வேலை பார்க்கும் தந்தையைப் பார்க்க, பணம் & உணவுடன் புதிதாக ஊருக்கு வரும் அம்பேத்கர் & அவரது சகோதரர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள். வண்டிக்கான பணம் இருந்தும் மகர் எனப்படும் தீண்டத்தகாதவராய் பிறந்ததால் யாரும் வண்டியை வாடகைக்குத் தர மறுக்கிறார்கள். இருமடங்கு பணமும் & வண்டியை தாங்களே ஓட்டிக் கொள்வதாகவும் சொல்லவும் ஒரு வண்டி கிடைக்கிறது. உணவு இருந்தும் வழியெங்கும் தீண்டத்தகாதவர்களுக்குத் தண்ணீர் தர மறுப்பதால் நிறைவாகச் சாப்பிடாமல் பயணத்தைத் தொடரும் நிலை. இத்தனைக்கும் பை நிறையப் பணம் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தவரைக் கோடி ரூபாய் இருந்தாலும் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்தப்படுவார்கள். காரணம் சாதி.

இலண்டன் சென்று படித்து விட்டு கோட்டும் சூட்டுமாக பரோடா சமஸ்தானத்தில் பணியாற்ற வந்த அண்ணலுக்கு எங்கும் தங்க இடம் கிடைப்பதில்லை. ஒரு பார்சிகளுக்கான விடுதியில் பார்சி என்று பொய்யுரைத்து தங்கும் நிலை. இறுதியாக உண்மை வெளிப்படுகையில் கும்பலாக அவரை தாக்க வருபவர்களிடம் கெஞ்சிக் கேட்டுத் தப்பிக்கிறார். அன்று அவர் வாய் விட்டு தனிமையில் கதறி அழுததைப் பகிர்கிறார். அவருக்கு ஏன் தங்குமிடம் மறுக்கப் படுகிறது? அவரிடம் பணமில்லையா? அவர் குற்றவாளியா? சாதி மட்டுமே காரணம். இத்தனைக்கும் பார்சி மதத்தில் சாதிகள் இல்லை. இந்துக்கள் ஒருவனைத் தீண்டக்கூடாது என்றால் பார்சிகளும் அதைச் சரி என்னும் நிலைமைதான் இந்தியாவில். அந்த நேரத்தில் தன் கிறித்துவ நண்பரிடம் உதவி கோருகிறார். தன் மனைவி ஏற்றுக் கொள்ள மாட்டார் என மறுக்கிறார். இத்தனைக்கும் அவரும் அவர் மனைவியும் கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள். அவர் மனைவி பிராமணர் என்பதால் தீண்டத்தகாதவரை வீட்டில் சேர்க்க மாட்டார் எனச் சொல்லப்படும் காரணம் மூலம் நாம் என்ன புரிந்து கொள்ளலாம்? மதமே மாறினாலும் இந்தியர்கள் தங்களது சாதிய வழக்கங்களைக் கைவிட மாட்டார்கள் என்பதைத்தானே?

தாழ்த்தப்பட்டவர்களின் குறைகளை அறிவதற்காக அரசால் அனுப்பப்பட்ட குழுவின் உறுப்பினராக அண்ணல் வருகிறார். அவரை ஒரு டோக்லா வண்டியில் அழைத்துச் செல்கிறார்கள். விபத்து ஏற்படுகிறது. காலில் பலத்த அடி. காரணம் என்னவெனில் அவ்வண்டியை ஓட்டியவருக்கு முன் அனுபவம் ஏதுமில்லை. விசயம் என்னவென்றால் டோக்லாகாரர்கள் யாரும் தீண்டத்தகாத ஒருவருக்கு வண்டி ஓட்ட மாட்டோம் என்றும், அது தீட்டு என்பதுடன் தங்களுக்கு இழுக்கு என்று மறுத்து விடுகிறார்கள். அதனால் வெறுமனே வண்டியை மட்டும் வாடகைக்கு எடுத்து தங்களில் ஒருவனை வண்டி ஓட்டச் செய்ததன் விளைவே அவ்விபத்து. பொருளாதார படி நிலையில் மிகவும் கீழ் நிலையில் இருக்கும் டோக்லாகாரர்கள் கூட மஹர் இனத்தவருக்கு வண்டி ஓட்ட மறுப்பதை விடத் தீண்டாமையை எப்படி விளக்கி விடமுடியும்?

அதே போல் ஒரு முகமதியக் கோட்டைக்குச் சென்றிருந்த பொழுது, அங்குள்ள குளத்தில் கை, கால், முகம் கழுவியதற்காக மொத்த இஸ்லாமியர்களும் குளமானது தீட்டுப்பட்டு விட்டது என்று கும்பலாகத் தாக்க வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து “இதைத்தான் உங்கள் மதம் போதிக்கிறதா? நாளை நாங்கள் இஸ்லாத்தைத் தழுவினாலும் இப்படித்தான் நடத்துவீர்களா?” என்ற கேள்விக்கு பிறகே அடங்கி இருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் மீண்டும் எந்த நீர் நிலையையும் தொட்டு விடக்கூடாது என்பதற்காக ஓர் ஆயுதம் தாங்கிய காவலனைத் துணைக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்துக்களுக்குப் பிடிக்காத தீண்டத்தகாதோரை பார்சிகளுக்கு எப்படிப் பிடிப்பதில்லையோ, அதே போல் இஸ்லாமியர்களுக்கும் பிடிப்பதில்லை என்பது தெரிகிறது. இதனால்தான் மொத்தமாக அண்ணல் இஸ்லாத்தை ஏற்காமல் பௌத்தம் நோக்கி அணிவகுத்தது.

மகாத்மா காந்தியின் யங் இந்தியாவில் வெளியான செய்தி. பிரசவித்து 2 நாட்களே ஆன தன் மனைவி & குழந்தைக்கு சுகமில்லை என வரும் தாழ்த்தப்பட்டவரை ஒரு மருத்துவர் நடத்தும் விதம். சிகிச்சைக்கான பணம் அளித்தும் சில நிபந்தனைகளோடு வருகிறார். தெருவுக்குள் நுழையாமல் வெளியே நின்றுதான் சிகிச்சை, அவர் தெர்மாமீட்டரை தருவார், அதை ஒரு முஸ்லீம் வாங்கி, பின் அதை அந்த தாழ்த்தப்பட்டவர் வாங்கி மனைவி, குழந்தைக்குப் பரிசோதிப்பார். இப்படியே நடந்திருக்கிறது சிகிச்சை. பணம் பெற்றும் சாதியை நம்பும் அம்மருத்துவர் ஒழுங்காகச் சிகிச்சை அளிக்காததால் அப்பெண்மணியும் குழந்தையும் இறந்து போகிறது. உயிரைக் காக்க வேண்டிய மருத்துவருக்கு, தாழ்த்தப்பட்டோரின் உயிர் ஒரு பொருட்டாய் படாமல் போனதற்குக் காரணமென்ன? சாதிதானே?

படித்து கிராம நிர்வாகத்திற்கான வேலை பெறும் ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு நிகழ்ந்த அனுபவங்கள். இந்த சமூகத்திலிருந்து வந்து சரிக்குச் சரியாக தன்னெதிரே அமர்வதா என்ற சாதிவெறி அவரை கும்பல் கொலை செய்யும் அளவிற்கு இந்துக்களைக் கொண்டு சென்றிருக்கிறது. காலில் விழுந்து, வேலையை விட்டுப் போய் விடுகிறேன் எனக் கெஞ்சி அவர் உயிர்பிழைக்கிறார். இன்னார் இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் எவர் வரையறுத்தது யார்? அவரின் நோக்கமென்ன? அதன் விளைவுகளை அவர் அறிவாரா? கட்டாயம் அறிவார். ஆனால் அவருக்கு அக்கறையில்லை.

இவை வெறுமனே இந்தியாவின் சாதி படிநிலைகளைப் பற்றி வெளி நாட்டாருக்கு அறிமுகப்படுத்துவதற்கான சம்பவங்கள். இதை விடப் பல கொடூரமான சம்பவங்கள் இந்திய வரலாறெங்கும் நிரம்பியுள்ளன. அதே சமயம் இதெல்லாம் மாறிவிடவும் இல்லை. ஏன் இந்த சுதந்திர தினத்தில், அதுவும் முன்னேறிய மாநிலமான தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பெண் தலைவரைக் கொடியேற்ற அனுமதிக்காத அந்த அரசு அதிகாரியின் மனதிலிருந்தது என்ன? சாதிவெறி.

வெறும் படிப்பு மட்டும் காலகாலமாய் மக்களின் மனங்களில் ஊட்டப்படும் நஞ்சான சாதியைக் கலைந்து விடாது. அதற்கு சமூக நீதி குறித்த புரிதல் வேண்டும். பிறப்பால் இங்கு யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது என்ற எண்ணம் அனைவர் மனத்திலும் தோன்ற வேண்டும்.

சமூக நீதியைக் காப்போம், அதற்குத் தடையாய் நிற்கும் சாதி மதங்களை ஒழிப்போம்.