சந்திரபாபு – கண்ணீரும் புன்னகையும் – முகில்

தமிழர்களுக்குச் சொந்த குடும்பத்தைத் தாண்டி மிகப்பெரிய ஈர்ப்பு உள்ள விசயம் சினிமாதான். நிஜத்தில் ஒருவரைக் காதலித்தால் திரையில் ஒருவரைக் காதலிப்பர். வெறும் கதாநாயகனை மட்டுமில்லாமல் ஒவ்வொரு நடிகரையும் ஒவ்வொரு விதத்தில் நேசிப்பான். சிறுவர்களுக்கு சூப்பர் ஹீரோ மேல் இருக்கும் நேசம் போல அது இருக்கும்.

ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொருவரை ரசிக்கும், நேசிக்கும். நான் கமலஹாசனை இரசித்து பெருமையாகச் சொல்லுகையில் என் தந்தை சிவாஜி போல வருமா என்பார். எதிர்த்து வாதாடினாலும் தந்தை வயதிற்கு வருகையில் சிவாஜியையும் நேசிக்காமல் இருக்க இயலாது. இங்கு சினிமாவையும் நடிகர்களையும் நேசிக்காதவர்கள் உண்டா என்ன?

நடிகர்கள் என்ற பதத்தைத் தாண்டி, கலைஞன் என்ற இடத்தை அடைபவதற்கான அர்ப்பணிப்பு இருப்பவர்களே காலம் கடந்து நேசிக்கப்படுகிறார்கள். சந்திரபாபு என்ற நடிகரின் திரைப்படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை, ஆனால் அவரது பாடல்களை கேட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். சந்திரபாபு நடித்து நான் பார்த்த முழுத் திரைப்படம் சபாஷ் மீனா மட்டும் தான். மற்றபடி அவரைப் பற்றி நான் அறிந்ததெல்லாம் அவர் ஆகச்சிறந்த பணக்காரராகவும் பெரும் குடிகாரராகவும் எம்ஜியாரால் வஞ்சிக்கப்பட்டவராகவும் இருந்தார் என்பது மட்டும் தான்.

மிக முக்கியமான விசயம், பாக்யாராஜின் அந்த 7 நாட்கள் திரைப்படம் சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது பரவலாகப் பேசப்பட்ட விசயம். திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலித்தவருடன் அனுப்பி வைத்து விட்டார் என்று சொல்லக் கேள்வி. இந்த அளவு அறிதல்களுடன் சந்திரபாபு குறித்து முகில் எழுதிய நூலை வாசிக்கத் துவங்கினேன்.

சந்திரபாபு : கண்ணீரும் புன்னகையும்: Chandrababu (Tamil Edition) eBook:  முகில், Mugil: Amazon.in: Kindle Store

முதல் அத்தியாயமே புதிய தகவல்களுடன் ஆரம்பித்தது. படவாய்ப்புகள் கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டு, தற்கொலைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி தன் நிலையை விளக்கும் இடம். அபாரம். இத்தனை திறமைகளுடன் வாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு நொந்திருப்பான் இந்த மனிதன்?

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன். சிறுவயதில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி & காமராஜரின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஓரளவு சாப்பாட்டுக்குப் பிரச்சனையில்லாத குடும்பத்திலிருந்தாலும் தனது கலையார்வத்திற்காக வீட்டை விட்டு வெளியேறி தெருத்தெருவாய் பட்டினியாய் அலைந்தவர். எந்த நிலையிலும் “என்னோட பிராண்ட் கோல்ட் பில்டர் தான், அது வாங்கி கொடுக்கிறதா இருந்தால் வாங்கிக் கொடுங்கள், இல்லை வேண்டாம்” எனச் சொல்லும் மேன்மகன்.

வாய்ப்பு கிடைத்த பிறகு உச்சம் தான். காத்துக் கிடந்த அத்தனை திறமைகளுக்கும் நிதானமே இல்லாமல் பொங்கி வழிந்தன. எழுத்தாளரும் சந்திரபாபுவின் நண்பருமான ஜெயகாந்தன் சொல்வது போல “தனது நடிப்பாற்றலை ஊதாரியாய் வாரி வழங்கினார்” என்றே சொல்லலாம்.

அதிலும் சபாஷ் மீனா படத்தில் சிவாஜியை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் கேட்கும் அளவு தன் திறமை மீது நம்பிக்கை கொண்டவர். அவருக்கு மட்டுமல்ல, மொத்த திரையுலகத்திற்கும் அவர் மீது அவ்வளவு நம்பிக்கை. உதாரணத்திற்கு ஒரு நிகழ்வினை சொல்கிறேன்.

ஏவிஎம் நிறுவனம் “சகோதரி” என்றொரு படத்தினை எடுக்கிறது. ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் படம் முடிந்த பிறகு போட்டுப் பார்க்கிறார். ஓடுவதற்கான சரக்கு ஏதுமில்லை என்பது புரிகிறது. சந்திரபாபுவை வரச் சொல்கிறார். படத்தைப் பார்த்து விட்டு வரச்சொல்லி, இதனை ஓடவைக்க வேண்டும் என்கிறார். அதற்கு சந்திரபாபு தனது நகைச்சுவைக் காட்சிகளை 7 நாள் படப்பிடிப்பு நடத்தி படத்துடன் இணைத்துப் படத்தை மேம்படுத்தித் தருவதாகச் சொல்கிறார்.

அதற்கான சம்பளமாய் ஒரு இலட்சம் கேட்கிறார். அப்போது எம்ஜிஆர், சிவாஜிகளின் சம்பளமே 75000ஐ தாண்டவில்லை. ஒருவாறு ஒப்புக்கொள்ளப்பட்டு, சொன்னது போல் தனது நகைச்சுவை பகுதிகளை எடுத்து இணைத்துத் தருகிறார். படம் ஹிட். சொன்னது போல ஒரு இலட்சம் சம்பளமும் பெற்றுக் கொண்டார்.

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது, ஏவிஎம் போன்ற நிறுவனம் கூட, ஓடாத படத்தை சந்திரபாபு நினைத்தால் ஓட வைக்க முடியும் என நம்பிய சூழல். வெறுமனே இயக்குநர் சொன்னதைக் கேட்டு நடிப்பவராய் மட்டும் இல்லாமல் திரைப்பட உருவாக்கம் பற்றி அனைத்தும் அறிந்திருந்ததால்தான், ஏற்கனவே எடுத்த படத்தின் இடையே தனிப்பட்ட காட்சிகளை எழுதி, அதைத் தானே இயக்கி, அதில் தானே நடித்து, அதனை எங்கெங்கு இணைக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் கையாள முடிந்தது.

வெறும் நடிப்பு, நடனம், இயக்கம் மட்டுமில்லாது இசையமைப்பும் சந்திரபாபுவிற்கு கைகூடும். பல பாடல்களை எழுதி, மெட்டமைத்து, தானே பாடியிருக்கிறார். அவருக்கு மட்டுமன்றி மற்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.

எம்ஜிஆரை நம்பியது, குடிக்கு அடிமையானது என்ற இரண்டு விசயங்கள் இந்த மாபெரும் கலைஞனைக் கலையிலிருந்து வெளியேற்றி சிறுவயதிலேயே உலகத்தை விட்டும் விரட்டி விட்டது.

அவரது சொந்த வாழ்க்கை சோகங்கள் பற்றிப் படிக்கையில் ஏற்படும் சோர்வைக் கூட எப்படி இத்தனை பிரச்சனைகளுக்கு இடையிலும் அந்த மனிதனால் இப்படி நடிக்க முடிந்தது என்ற வியப்பு விரட்டி விடுகிறது. தான் விருப்பப்பட்டு ஆசைஆசையாய் நிகழ்ந்த தனது திருமணம் தோல்வியடையும் வேளையில் கூட மனிதன் “சபாஷ் மீனா” படத்தில் இரட்டை வேடத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

எந்த நிலையிலும் சுத்தமாக உடையணிவது, மற்ற நடிகர்கள் பாகவதர் பாணியில் வேட்டி சட்டையுடன் நிகழ்ச்சிகளுக்குப் போய் வந்த காலத்தில், கோட் சூட்டுடன் ஸ்டைலாக உலா வந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சார் என்றிழைக்காமல் மிஸ்டர், மிஸ், மிஸ்ஸஸ் போட்டுப் பெயர் சொல்லி அழைப்பது, எந்த நிலையிலும் யாருக்கும் அஞ்சாமல் அவர் மனதில் பட்டதைச் சொல்வது என மனிதன் தனக்கு நேர்மையாக வாழ்ந்திருக்கிறார்.

இந்த புத்தகத்தின் மூலம் சந்திரபாபுவைப் போலவே அவரது வாழ்வில் வந்த வேறு சிலரின் முகங்களையும் அறிந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது. உதாரணத்திற்கு எம் எஸ் விஸ்வநாதனின் நடனத்திறமை.

வேறு நாட்டில் ஏன் வட இந்தியாவில் பிறந்திருந்தால் கூட சார்லி சாப்ளின் அளவுக்குப் புகழ் பெற்றிருக்க வேண்டிய மனிதர், தமிழ் நாட்டில் பிறந்ததாலோ என்னவோ சரியாகக் கொண்டாடப்படாமல் போய்விட்டார்.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டு டீவி போட்டால் ஆதித்யா சேனலில், இப்புத்தகத்திலிருந்து ஒரு காட்சியை அனிமேஷனாக போட்டு, பின்னணியில் அவர் கதையைச் சொல்கிறார்கள். கே டீவியில் மனம் கொத்திப் பறவை திரைப்படம். அதில் சிங்கம்புலி வைத்திருக்கும் டீக்கடை முழுக்க சந்திரபாபு படங்கள், யதெச்சையாக வேறு சேனல் வைத்தால் “புத்தியுள்ள மனிதரெல்லாம்” பாடல் ஓடுகிறது. இப்படி ஒரு பாடலுக்கு மென்மையான மேற்கத்திய நடனமெல்லாம் வேறு யாருக்கும் வந்து விடாது.

சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய நபர் சந்திரபாபு. வாழ்வில் உச்சத்தையும் பள்ளத்தையும் பாபு போல் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். புத்தகத்தின் தலைப்பில் சொல்வது போல தன் வாழ்வு முழுக்க கண்ணீரால் நிரம்பியிருந்தாலும் நம்மைப் புன்னகைக்க வைத்துவிட்டே சென்றிருக்கிறார்.

இறுதியாக இந்த ஒரு பாடல்,கண்ணதாசன் எழுதியது, பாபு பாடியது, அப்படியே பாபுவின் வாழ்க்கையை முழுமையாகச் சுருங்கச் சொல்கிறது.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

சிறப்பானதொரு மனிதனை, கலைஞனை அறிமுகபடுத்தியதற்கு எழுத்தாளார் முகிலுக்கு நன்றி.