சார்லஸ் டார்வினும் பரிணாம தத்துவமும் – மருத்துவர்.பழ.ஜெகன்பாபு

தத்துவம் தொடர்பாக ஏதேனும் புத்தகம் கிண்டிலில் வைத்திருக்கிறேனா என்று தேடுகையில் இந்த புத்தகம் கண்ணில் பட்டது. சமீபத்தில் “சேப்பியன்ஸ்” நூல் வாசித்திருந்தேன். அதில் டார்வின் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை வாசித்திருந்ததால் இன்னும் அவரைப் பற்றி தெரிந்துக் கொள்ளாலாம் என இந்த நூலினை வாசிக்க துவங்கினேன். மொத்தம் 35 பக்கங்கள் தான்.

சார்லஸ் டார்வினும் பரிணாமத் ...

முதலில் காலம்காலமாக இருந்த படைப்பு பற்றிய நம்பிக்கையை விளக்குகிறார். கிறித்துவம், இஸ்லாம், யூத மதங்கள் ஒன்று போல இறைவன் ஒவ்வொரு நாளாக ஒவ்வொன்றாக படைத்து வந்து, மனிதனை படைத்ததாக சொன்னால், இந்து மதம் பிரம்மா என்றொரு படைப்பு கடவுளைக் குறிப்பிட்டு, அவரின் தலை, தோள், தொடை, பாதம் இவற்றில் இருந்து மனிதர்களை படைத்து அதற்கேற்றவாறு அவர்களுக்கு தொழில்களை வகுத்து கொடுத்ததாக சொல்கிறது.

இந்த மதம் எப்படி தன் புராணத்தில் “உலகத்தை ஓர் அரக்கன் பாயாக சுருட்டி கடலில் ஒளித்து வைத்தான்” என புருடா விட்டதோ, அதே போலத்தான் கிறித்துவமும் பூமி தட்டையானது, பூமியை மையம் கொண்டே சூரிய மண்டலம் சுற்றி வருவதாக அடித்துக் கொண்டிருந்தது.

காலம் காலமாக உலகம் முழுக்க கடவுள்/மதங்களின் பெயரால் பரப்பப்பட்டு வந்த மூட நம்பிக்கைகளை அறிவியல் அடித்து நொறுக்க துவங்கியது. ஆனால் அது சாமானியத்தில் நிகழவில்லை. உலகம் உருண்டை என கண்டறிந்த கோபர் நிக்கஸ் தன் இறப்பு வரை அதை வெளியே சொல்ல அஞ்சி மறைத்து வைத்திருந்தார். அவரது இறப்பிற்கு பிறகு வெளியான அவரது கண்டுபிடிப்பினை ஆதரித்ததற்காகவே புருனோ என்பவர் கி.பி 1600ல் பொது இடத்தில் கட்டி வைக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். கலிலியோ சூரியனை மையமாக வைத்து புவி சுழல்வது குறித்து கொள்கையை வெளியிட்டதற்காகவே போப் ஆண்டவர் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, இறக்கும் வரை 16 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்.

இப்படி தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்ட அறிவியல் சிந்தனைகள் ஒரு கட்டத்தில் முட்டிக்கொண்டு வெளிவந்தன. அதில் முக்கிய பங்காற்றிய டார்வின் ஒரு கிறித்துவ பாதிரியாராக வேண்டியவர். யதெச்சையாக எம்.எச்.பீகிள் கப்பலில் உலகம் சுற்ற கிளம்பிய இந்த22 வயது ஆய்வாளர், தனது 5 ஆண்டுகள் பயணத்தில் சேகரித்து வைத்த உயிரியல் மாதிரிகளை வைத்து 1859 நவம்பர் 22ல் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். “இனங்களின் தோற்றம்” (Origin of species) என்ற பெயரில் வெளியான நூலானது ஆதாரப்பூர்வமாக உயிரிங்களின் தோற்றம் & பரிணாமக் கொள்கையை விளக்கியது. அதன் மிக முக்கிய சாரம்சம் “குரங்கில் இருந்து மனிதன் 70 இட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தனி இனமாக பிரிந்து பரிணாமம் அடைய துவங்கினான்” என்பதுதான்.

மொத்த மதங்களின் ஆணி வேரையே ஆட்டிப் பார்த்த இந்தக் கொள்கைக்கும் நூலுக்கும் எந்தளவு உலகம் முழுக்க வெறுப்பு இருந்ததோ அந்தளவு ஆதரவும் இருந்தது. அது நாளாக நாளாக அதிகரித்தது. அவரது புத்தகங்கள் அனைத்துமே அச்சாவதற்கு முன்பே விற்பனை ஆக துவங்கியன.

சிலரை பல நாள் ஏமாற்றலாம், பலரை சில நாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. தொடர்ச்சியாக வளர்ந்த அறிவியல் சிந்தனைகளின் முன்பு மதங்கள் மண்டியிட துவங்கின.

வாழும் போதே டார்வினுடைய புகழ் உலகம் முழுக்க பரவி, அவரது பெயர் பல ஊர்களுக்கும் சின்னங்களுக்கும் சூட்டப்பட்டன. டார்வின் கொள்கையை தீவிரமாக எதிர்த்த கிறித்துவ மதம் அவ்வளவு சீக்கிரம் தனது தோல்வியை ஒத்துக் கொள்ளவில்லை. 1925ல் கூட அமெரிக்கா-டென்னசி மாநிலத்தில் ஜாண்டிஸ்கோப்ஸ் என்ற ஆசிரியர் டார்வின் கொள்கையை பயிற்றுவிக்கிறார் என்பதற்காக நீதி மன்றத்தால் தண்டிக்க பட்டார். அதே சமயம் 1967ல் அமெரிக்கா இந்த தீர்ப்பினை திரும்ப பெற்றுக் கொண்டது.

செப்டம்பர் 2008ல் இங்கிலாந்து சர்ச், டார்வினுடைய 200வது பிறந்த தினத்தில் அவரை தவறாக புரிந்துக் கொண்டதற்காக மன்னிப்பு கேட்டது. பரிணாம கொள்கையை முழுமையாக அங்கீகரித்தது.

அடக்குமுறையை கையாண்ட கிறித்துவ மதம் புருணோ ரோம் நகரில்கொல்லப்பட்ட இடத்தில் 1889ல் நினைவு சின்னம் அமைத்தது. 2008 மார்ச் மாதம் பெர்லினில் அவரது சிலை திறந்து வைக்கப்பட்டு போப் ஆண்டவர் புருணோவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மன்னிப்பு கேட்டார்.

அதே போல் இந்து மதம் எப்போது ரிக் வேதத்தில் புருஷசுக்தத்தில் இருப்பது போல் மனிதன் பிரம்மனின் தலை, தோள், தொடை, பாதத்தில் இருந்தெல்லாம் பிறக்கவில்லை என்று சொல்லி அதை திருத்த போகிறது? அதை திருத்தினால் சதுர்வர்ணம் மாயசிருஷ்டம் என்று சொல்லும் பகவத் கீதையையும் திருத்த வேண்டி வரும். தயாரா? அப்படி இல்லையென்றால் இந்துக்கள் டார்வீனின் பரிணாமக் கொள்கையை ஏற்க கூடாது என அறிவிக்குமா? உலகம் முழுக்க 99.8% அறிவியலறிஞர்களால் ஏற்றுக் கொண்ட பரிணாமக் கொள்கையை மறுதலித்து விட்டு செயல்பட யார் தயாராக இருக்கிறார்கள்?

புருணோவுக்கு இழைத்த அநீதிக்கு போப் மன்னிப்பு கேட்டது போல் நந்தனாரை தீக்குளிக்க செய்ததுக்கு இந்து மத பிரதிநிதிகள் யாரேனும் மன்னிப்பு கேட்க தயாரா? சரி வேண்டாம், நடந்ததை மறப்போம். இனியாவது சதுர்வர்ணம் தவறு, கடை பிடிக்கபட மாட்டாது என அறிவிப்பார்களா?

புத்தகத்தில் நிறைய பரிணாமம் தொடர்பான தகவல்கள் உள்ளன. மிக எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விசயம்தான் என்றாலும் ஆழமாக தெரிந்திருக்க வேண்டும் என்றால் அது பரிணாம தத்துவம் தான் என்பேன்.