சேப்பியன்ஸ் – யுவால் நோவா ஹராரி

ஒவ்வொரு புத்தகமும் நமக்கு அறிமுகமாவதே ஒரு சுவாரசியமான சம்பவமாக இருக்கும். முதன் முதலில் நான் சேப்பியன்ஸ் பற்றி கேள்விப்பட்டது முக நூலில் தான். வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் உள்ளே என்ன இருக்கிறது என்று சொல்லாமல் தவறவே விடக்கூடாத புத்தகம் என்று சொன்னார்கள். அது வழக்கமாக எல்லா புத்தகங்களுக்கும் சொல்லப்படுவதுதான் என்று கடந்தேன். எழுத்தாளர் பா.ராகவன் தனது முக நூல் பக்கத்தில் “சேப்பியன்ஸ் படிக்கவில்லையா?” என்றேதான் அனைவரும் கேட்கிறார்கள் என்பது போல் பதிவு எழுதி இருந்தார். அப்போதே வாசித்து விடலாம் என குறித்து வைத்துக் கொண்டேன்.

புத்தகங்களை பொறுத்த வரை நான் அவசரப்படுவதே இல்லை. ஒன்று எப்படியும் ஏதேனும் தள்ளுப்படி வரும், இரண்டாவது கிண்டில் அன்லிமிட்டட்டில் வரும், அப்போது படித்துக் கொள்ளலாம் என விட்டு விடுவேன். இந்த புத்தகமும் முதலில் கிண்டிலில் 200ரூ க்கு கிடைத்தது. அச்சு வடிவில் 500ரூ மதிப்புள்ள புத்தகம் இது, சரி இன்னும் காத்திருப்போம் என 129ரூ விலைக்கு கிடைக்கும் பொழுது வாங்கினேன். அத்தோடு சரி, புத்தகத்தோடு புத்தகங்களாக உறங்க துவங்கியது. நிவேதிதா அவர்கள் சேப்பியன்ஸ் கூறும் கருத்துகளை மீம் வடிவில் இரண்டு பதிவுகளில் கூறுவதை வெகுவாக ரசித்தேன். உடனே எடுத்து வாசிக்க துவங்கினேன். அதன் பின் கொண்டாட்டம்தான். நான் ஒரு திரைப்படத்தினை போல இரசித்து இரசித்து புத்தகம் படிப்பது எப்போதாவதுதான் நடக்கும். இந்த புத்தகம் இதுவரை நான் வாசித்ததிலேயே சிறந்த புத்தகம் என்பேன். இத்தோடு நிறுத்திக் கொண்டு சென்று சேப்பியன்ஸ் புத்தகம் வாங்கி வாசித்து துவங்குவது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் சுருக்கமான வரலாறு, பள்ளிகளில் படித்த மனிதரின் அறிவியல் பெயரான ஹோமோ சேப்பியன்ஸில் சேப்பியன்ஸ் என்ற வார்த்தை மட்டும் தான் நம்மைக் குறிக்கும். தற்கால மனிதர்கள் இல்லாமல் நமக்கு முன்பும், நம்மோடும் பல மனித இனங்கள் பரிணாம வளர்ச்சியில் உருவாகின, உதாரணத்திற்கு ஹோமோ எரக்டஸ், நியாண்டர்தால் போன்ற மனித இனங்கள் அழிந்த பிறகு, தனது அறிவாற்றலால் உலகை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் தற்கால மனிதனின் பெயர் தான் ஹோமோ செப்பியன்ஸ், இதன் பொருள் அறிவார்ந்த மனிதன். இவனது தோற்றம் முதற்கொண்டு 2010கள் வரையிலான 70000 ஆண்டுகள் வரலாற்றினை கழுகுப்பார்வையில் இந்த நூல் நமக்கு காட்டுகிறது.

முதன் முதலாக ஆப்பிரிக்க சவானா புல்வெளிகளில் மிருகங்களின் தாக்குதலை எதிர்நோக்கி, தனது மூதாதையர்களை போல் இல்லாமல் நிமிர்ந்து நிற்க துவங்குவதில் இருந்து சேப்பியன்சின் வரலாறு துவங்குகிறது. இது நடந்தது 70000 ஆண்டுகளுக்கு முன்பு. அதே சமயத்தில் பூமியில் வேறு மனித இனங்களும் இருந்து இருக்கிறார்கள். மத்திய ஆசிய பகுதிகளில் நியாண்டர்தால்சும், கிழக்காசிய பகுதிகளில் ஹோமோ எரக்டசின் கடைசி மிச்சங்களும் வாழ்ந்திருக்கிறார்கள். அங்கு இருந்து கதை சொல்லி தனது கதையை துவக்குகிறார்.

வரலாறு போல பள்ளியில் நம்மை வேறு எந்த பாடமும் பெரிதாய் தூங்க வைத்திருக்காது. காரணம் அது சொல்லப்படும் முறைதானே தவிர வரலாற்றினை போல சுவாரசியமானது வேறு ஏதுமில்லை என்பேன். எனக்கு சுவாரசியமாக வரலாற்றினை முதலில் சொல்லிக் கொடுத்தது கார்ட்டுனிஸ்ட் மதன் தான். அவரது “வந்தார்கள் வென்றார்கள்” புத்தகத்தினை ஏகப்பட்ட முறை வாசித்திருக்கிறேன்.

வெறும் பகடி மட்டும் சுவாரசியத்தை தந்து விடாது, கதை சொல்லிக் கொண்டே இடையிடையே கேட்கப்படும் கேள்விகள்தான் சுவாரசியத்தைக் கூட்டுபவை. வந்தார்கள் வென்றார்களில் கங்கைக்கரை வரை சென்ற ராஜேந்திர சோழனின் படைகள் மேற்கு நோக்கி திரும்பி, கஜினி முகமதுவை எதிர் கொண்டிருந்தால் இந்தியாவின் வரலாறு எப்படி இருந்திருக்கும் என ஒரு கேள்வி எழுப்பி இருப்பார். யோசித்தாலே சிலிர்ப்பூட்டும் இடம் அது.

அது போன்ற கேள்விகளை ஒவ்வொரு அத்தியாயத்திலும் யுவால் எழுப்பி இருக்கிறார். உதாரணத்திற்கு சேப்பியன்சோடு மற்ற மனித இனங்களும் இப்போதும் வாழ்ந்து வந்திருந்தால் என்று யூகிக்க வைத்து பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறார்.

  • நியாண்டர்தால்கள் ஆதாம் மற்றும் ஏவாளின் வழித்தோன்றல்கள் என்று பைபிள் முழங்கியிருக்குமா?
  • ரோமானியர்களின் பிரம்மாண்டமான படைப் பிரிவுகளிலோ அல்லது ஏகாதிபத்திய சீனாவின் நிர்வாகத்திலோ நியாண்டர்தால்களால் பணியாற்றியிருக்க முடியுமா?
  • ஹோமோ பேரினத்தின் அனைத்து உறுப்பினர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளவர்கள் என்று அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் ஒப்புக்கொண்டிருக்குமா?
  • அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுசேர வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களிடம் வலியுறுத்தியிருப்பாரா? 

கேஜிஎப் படத்தின் கிளைமாக்சில் சொல்வது போல “இது வெறும் முதல் அத்தியாயம் தான்”. இப்படி புத்தகம் முழுக்க எழுப்பப்பட்ட கேள்விகளை கணக்கிட்டால் கண்டிப்பாக ஆயிரத்தைத் தாண்டும்.

மனித வரலாற்றின் திருப்பு முனைகளாக மூன்று இடங்களைக் குறிப்பிடுகிறார்.

  1. மற்ற எந்த உயிரினங்களுக்கும் ஏற்படாத “அறிவு புரட்சி” -70000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது
  2. தனக்கான உணவை தானே விளைவிக்கும் “வேளாண் புரட்சி” – 12000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது
  3. நீராவி என்ஜின் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட “தொழிற்புரட்சி” – 500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது

எறும்பு, தேனீ, கரையான் போன்று துவக்கத்தில் இருந்தே மனிதன் கூட்டமாக சேர்ந்து இயங்கவில்லை. தனித்தனி குழுவாக இயங்கிக் கொண்டிருந்த ஹோமோ சேப்பியன்சை முதலில் ஒருங்கிணைத்தது மொழி, அதனோடு சேர்ந்த கற்பனை வளத்தைத்தான் “அறிவுப் புரட்சி” என்று குறிப்பிடுகிறார்.

ஒற்றைக்கு ஒற்றை நின்றால் மனிதனால் எந்த வல்லுயிரியையும் வேட்டையாட இயலாது, அவன் கூட்டாக செயல்படுவது மட்டுமில்லாமல் தெளிவான திட்டமிடுதலும் அவசியமாகிறது. கூட்டமாக மேயும் வரிக்குதிரைகளை இரண்டு மலைகளுக்கு நடுவே ஒரு கூட்டம் விரட்டி வர, மறு கூட்டம் ஏற்கனவே அங்கு நின்றிருந்து வரும் குதிரைகளை அம்பெய்தி கொல்வதற்கு எவ்வளவு ஒருங்கிணைப்பு தேவைப்பட்டு இருக்கும்?

மொழி வளர்ந்ததும் முதலில் வளர்ந்தது என்னவென்று நினைக்கிறீர்கள்? வதந்திதான். வதந்திகளாலேயே மனித சமூகம் ஒருங்கிணைந்தது. இல்லை என்றால் 150க்கு மேற்பட்ட மனிதர்களை வேறு எந்த காரணம் சொல்லியும் ஒரே பணியில் ஈடுபடுத்த முடியாது. இதை இந்த புத்தகத்தில் படித்து விட்டு “The Big Bang theory” என்ற வெப்சீரியசிலும் இதே கருத்து வெளியான பொழுது இன்னும் தெளிவாக புரிந்தது. இங்கு மனிதர்களை ஒருங்கிணைக்க பயன்படும் கற்பனை யதார்த்தங்கங்களை பார்ப்போமே, பணம், மதம், சாதி, தேசம், கடவுள், இனம், மொழி இவற்றின் பெயரால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும். உண்மையில் இந்த அத்தியாயம் வெகு சுவாரசியமானது. எனக்கு அதை சுருக்கமாக சொல்ல வரவில்லை. ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன்.

ஒரு குரங்கிடம் சென்று உன்னிடமுள்ள ஒரு வாழைப்பழத்தை என்னிடம் தந்தால் உனக்கு சொர்க்கத்தில் இரண்டு வாழைப்பழங்கள் கிடைக்கும் என்று சொன்னால் நம்பி தனது வாழைப்பழத்தினைக் கொடுத்து ஏமாறாது. ஆனால் ஒரு மனிதனிடம் நீங்கள் இதை சொல்லி ஏமாற்றலாம்.

ஆதாரப்பூர்வமாக உலக வரலாற்றினை சொல்லிக் கொண்டே வருபவரால் மதங்களை கடந்து விட முடியுமா? ஏனெனில் அனைத்து மதங்களும் மனிதர்களின் படைப்புக்காக சொன்ன அத்தனை கதைகளும் டார்வின் தியரி முன்பு அடிபட்டு போகிறதே, அதை அநியாயத்திற்கு பங்கம் செய்கிறார். அதிலும் போப் ஆண்டவர் போட்டோவை போட்டே, அவரது துறவு வாழ்க்கையை பகடி செய்வதெல்லாம் உச்சக்கட்டம்.

வேட்டையாடியாய் வாழ்ந்த மனிதன் உலகின் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தினான் என நிதானமான விவரிக்கப்படுவதை பார்க்கையில் ஒரு கால யந்திரத்தை கண்டறிந்து சென்று முதல் சேப்பியனை கடத்தி வந்து கசாப்பு போட வேண்டுமென தோன்றுகிறது. ஒவ்வொரு கண்டமாக எப்படி நகர்ந்தான்? எந்தெந்த விலங்குகளை எப்போது மொத்தமாக ஜீரணித்தான் என்று விளக்குவதோடு, அவை இறந்ததால் மற்ற சூழல் மண்டலத்திற்கு உண்டான பாதிப்புகளையும் சொல்கிறார்.

வரலாற்றின் முக்கியத்துவம் அற்ற மிருகமாய் இருந்த சேப்பியன் வேட்டையாடியாய் இருந்ததோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லை, நிதானமாய் வேளாண்மை செய்கிறேன் என இரண்டாவது புரட்சிக்கு இறங்கியதுதான் விலங்குகள் அழிவில் இருந்து சூழல் சீர்கேட்டினை அவனது பிரதான தொழிலாக மாற்றியது.

வேட்டையாடறதுல இருந்து விவசாயியாய் மாறுகையில் என்னென்ன நடந்தது என வரிசையாக சொல்கிறேன்

முதலில் கொஞ்சம் இடத்தில் விவசாயம் செய்கிறான்

நிலையாக உணவு கிடைக்குமென நம்புகிறான்

ஆனால் வேலை அதிகமாக இருக்கிறது

அதற்காக நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறான்.

அந்த பிள்ளைகளுக்கு சாப்பாடு போதவில்லை

அதற்காக இன்னும் காட்டை எரித்து விளைநிலமாக்குகிறான்

திரும்பவும் வேலை அதிகரிக்குது, பிள்ளைகளை அதிகம் பெற்றுக் கொள்கிறான், இப்படியே மக்கள் தொகை அதிகரிக்கிறது

அதே நேரம் இன்னொரு பக்கம் ஒரே இடத்தில் நிலையா வாழ்வதால் நாகரீகம் வளர்கிறது, வீடு, வாசல், ஊர், நகரம் உருவாகிறது, ஊருக்குள் வயலுக்குள் மிருகம் வரக்கூடாதுன்னு வேட்டையும் தொடர்ந்து நடக்கிறது.

வேட்டையாடியாக இருந்த வரை எல்லாவற்றையும் உணவுக்காக வேட்டையாடினால் பின்னாடி பற்றாக்குறை வருமென புரிந்து, பெண் இனங்களை வேட்டையாடாம இருக்கற அளவு அவனுக்கு அறிவு இருந்தது, அப்படியே இருந்திருந்தால் அவன் காட்டுக்குள்ளயே இருந்திருப்பான்

மனிதன் காட்டுக்குள் இருந்த வரை, உலகமும் காடாகத்தான் இருந்தது. காட்டுக்குள் வாழ்ந்த வரை எத்தனை ஆயிரம் வருடமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல மக்கள்தொகை அதிகரிக்கவே இல்லை. அதை இயற்கை கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தது.

அவன் வெளியே வந்த பிறகுதான் “உலகம் அனைத்து உயிர்களுக்குமானது” என்பது மாறி “உலகம் மனிதனுக்கானது” என்றானது.

வேளாண் சமூகமாக மாறிய பிறகு அரசுகள் உருவாகின்றன. அதன் பிறகான வரலாறு படு சுவாரசியம். எப்படி என்றால் யுவால் அடிக்கடி வரலாற்றுக் காலத்தில் இருந்து தற்காலத்திற்கு தாவி வந்து இரண்டையும் ஒப்பிட்டு பகடி செய்வார். உதாரணத்திற்கு அலுமினியத்தை மலினமாக பிரித்தெடுக்கும் முறை கண்டறியப்படும்வரை உலகின் மதிப்பு மிக்க உலோகமாக அலுமினியம் இருந்திருக்கிறது. மூன்றாம் நெப்பொலியன் தன் அரண்மனைக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு அலுமினியத்திலும் சாதாரண விருந்தினர்களுக்கு தங்கத்திலும் பாத்திரங்களைக் கொண்டு விருந்து பரிமாறி இருக்கிறார். ஆனால் இப்போது நாம் ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகளில் கூட அலுமினிய பூச்சு தட்டுகளை பயன்படுத்துகிறோம். இதை மூன்றாம் நெப்பொலியன் அறிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார் என்று முடிக்கிறார்.

அரசுகள் உருவான பிறகு, மதங்களும், கடவள்களும், வியாபாரங்களும் உருவாகி உலகம் முழுக்க பரவுகின்றன. சேப்பியன்ஸ் இப்போது உலகம் முழுக்க பரவி இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க பேரரசுகளும், மதங்களும் தோற்ற பிறகு பணம் வெற்றி பெறுகிறது. இன்று உலகத்திலுள்ள அனைத்து மனிதனும் நம்பும் விசயம் பணம் மட்டும் தான். இன்னும் கொஞ்சம் ஆதிவாசிகள் மீதம் இருக்கிறார்கள். அவர்களும் வரவழைக்கப்பட்டு விடுவார்கள்.

மதங்களையும் கடவுளையும் ஆதாரப்புர்வமாக வைத்து செய்த பிறகு நவீன மதங்களான முதலாளித்துவத்திற்கு வருகிறார். அங்கு வரும் பொழுது மூன்றாவது புரட்சியான தொழில் புரட்சியும் ஏற்பட்டு விடுகிறது. அச்சம கால ஏகாதிபத்தியத்தை பற்றியும், அமெரிக்க கண்டம் கண்டறிந்ததன் விளைவுகளையும் சொல்லிக் கொண்டே, தொழிற்புரட்சியை பற்றி விளக்குகிறார்.

இடையில் பணம் & வங்கி அடிப்படையிலான பொருளாதார முறையை விளக்கும் இடம் வெகு சுவாரசியம்.

அறிவியலும் தொழில் நுட்பமும் எப்படி முதலாளித்துவத்தை வளர்த்தது என்பதை புரிய வைப்பதோடு உண்மையில் முதலாளித்துவம் என்பது எப்படிப்பட்டது என்பதை யுவால் மூலமே நான் தெளிவாக புரிந்துக் கொண்டேன்.

அப்படியே இருபதாம் நூற்றாண்டை அலசி விட்டு தற்காலத்திற்கு வந்து அடுத்து மனிதன் செல்லும் பாதை பற்றி சுருக்கமாக சொல்வதோடு நூல் நிறைவு பெறுகிறது.

இந்த நூலின் தொடர்ச்சியாக ஹோமோ டியஸ் என்ற நூலும், 21ம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் என்ற நூலும் வெளியாக இருக்கின்றன. இதில் ஹோமோ டியஸ் தமிழில் கிடைக்கிறது. சுவாரசியம் என்னவென்றால் அதனையும் எப்போதோ ஆஃபரில் வாங்கி வைத்திருக்கிறேன். கட்டாயம் அவற்றையும் வாசிப்பேன்.

இதற்கு முன்பு ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய ஆழமான கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில்கள் என்ற புத்தகத்தினை வாசித்திருந்தேன். இரண்டும் பல இடங்களில் ஒத்துப் போகிறது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, மொழி உருவானதால் ஏற்பட்ட அறிவுப்புரட்சி, இதற்கு பிறகு அறிவியலால் மனிதன் அடைய இருக்கும் நிலைகள் இந்த தலைப்புகளில் இருவரும் சொல்வது ஒத்துப்போனாலும் இரண்டும் படு சுவாரசியம்.

மற்ற உயிரினங்களோடு சேர்ந்து சராசரி விலங்காய் இருந்த மனிதன் எப்படி கடவுளாக மாறப்போகிறான் என்பது வரையிலான கதைதான் மொத்த புத்தகத்தின் சாரம்சம். இது குறித்து சுருக்கமாக எழுதினாலும் 40-50 பக்கங்களுக்கு வரும், அவ்வளவு விசயங்கள் இருக்கின்றன. அதிலும் தகவல்கள் என்றால் எண்ணிலடங்காதவை.

மொழிப்பெயர்ப்பினை பற்றி சொல்லியே ஆக வேண்டும். உண்மையில் இது போன்ற அறிவியல்சார் புத்தகங்களை தமிழில் மொழிப்பெயர்ப்பது எளிதல்ல, ஆனாலும் மொழிப்பெயர்ப்பாளர் நாகலட்சுமி சண்முகம் மிகவும் சிறப்பான முறையில் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் செய்துள்ளார். அதற்கு தனி நன்றிகள் அவருக்கு.

சாதாரணமாக வாசித்து முடிக்க 10 மணி நேரம் தேவைப்படும் இந்த புத்தகத்தை நிறுத்தி நிதானமாக 20 நாட்கள் தினம் கொஞ்சமாக வாசித்தேன். மிகவும் நிறைவான வாசிப்பனுபவம் கிடைத்தது. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலாக இதனை பரிந்துரைக்கிறேன்.

சேப்பியன்ஸ் குறித்த எனது மீம் சீரிஸ்க்கான இணைப்பு

https://www.facebook.com/kathir.rath/media_set?set=a.10219698106537353&type=3