நவீன அரசியலின் நாயகன் – விசாகன்

கடந்த வருடம் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் சிறந்த வளரும் படைப்பாளார் விருதுடன் புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன. அதில் இந்த நூலும் அடக்கம். நேற்று முனைவர்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் என்பதால் எடுத்து வாசித்தேன்.

மொத்தம் 60 பக்கங்கள் தான். உண்மையில் இந்த நூல் திருமாவளவன் அவர்கள் எழுதிய “அமைப்பாய் திரள்வோம்” என்ற நூலினை முன்வைத்து எழுதப்பட்ட வழி நூலே ஆகும். இப்படி பெரிய புத்தகங்களிலுள்ள கருத்துக்களின் முக்கிய சாரங்களை எடுத்து சிறு நூல் வடிவில் வெளியிடுவார்கள் என்பதை இதற்கு முன்பு நான் நேரடியாக அறிந்ததில்லை.

தனது 30 வருட அரசியல் அனுபவத்தை, அதில் தான் கற்றறிந்ததை, அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதத்தில் திருமாவளவன் அவர்களால் எழுதப்பட்ட நூல்தான் “அமைப்பாய் திரள்வோம்”. அம்பெத்கர் சொற்களான “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்பதில் சக மக்களுக்கு கற்பிப்பது குறித்தும் ஒத்த எண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைப்பது குறித்தும் உண்மையில் இக்கால இளைஞர்களுக்கு பெரிதாய் அனுபவ அறிவு இல்லை. உண்மையை விட அதிகமாய் வதந்திகள் பரவும் இந்த சமூக வலைதள யுகத்தில் புதிதாய் ஒரு கருத்துரு உருவாக்கபடுதலும், அதை ஏற்றுக் கொண்டோரை ஒருங்கிணைத்தலும் அத்தனை எளிதல்ல.

மாற்று அரசியல் வேண்டும் என்ற குரல் மட்டும் நெடுங்காலமாய் ஒலிக்கிறது. ஆனால் எங்ஙனம் என்ற வழிமுறை யாரும் அறியாதது. அப்படி பொது வாழ்க்கையில் இறங்க விரும்பும் அரசியல் ஆர்வலர்கள் கட்டாயம் இந்த நூலை வாசிக்க வேண்டும். அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் தலைவர் தானே இப்படி ஒரு புத்தகம் எழுதுவார்? இந்த புரிதலே என்னுள் “அமைப்பாய் திரள்வோம்” நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கட்டாயம் வாசிப்பேன்.

அனைத்து திசைகளிலும் இருட்டடிப்பு செய்யும் நிலையில், ஏதேனும் ஒரு வகையில் இந்த புத்தகத்தினை அனைவரிடமும் கொண்டு சேர்க்க முன்னெடுத்த தோழர். விசாகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.