தடித்த கண்ணாடி போட்ட பூனை – போகன் சங்கர்

சரளமாக தமிழ் எழுதத் தெரிந்தவனுக்கு கவிதை எழுத வரும் என நம்பும் வெள்ளந்தி சமூகம் இது. என் கல்லூரி நண்பன் ஒருவன், எப்போதாவது என்னுடன் பேசுபவன், என்னை கவிஞரே என்பான். அவன் இதுவரை நான் எழுதியதை எதையுமே வாசித்ததில்லை, எழுதுகிறேன் என்றுத் தெரியும், கவிதையும் எழுதுவேன் என்று நினைத்து விட்டானோ அல்லது எழுதுபவர்களுக்கு அனைத்தும் கைவரும் என்று நம்புகிறானோ என்னவோ. ஒருமுறை நன்றாக திட்டிவிட்டேன். ஏன் இவ்வளவு கோபப்படற என்றவனிடன் நேராகப் போய் திமுக தலைவர் ஸ்டாலினைப் பார்த்து “வணக்கம் முதலமைச்சரே” என்று சொல்லிப் பார் என்றேன். நானே எனக்கு கவிதை வாசிக்க கூட வருவதில்லை என்று நொந்துப்போய் இருந்தால் கவிஞராம், கடுப்பேத்தறாங்க மைலார்ட்.

பதின்ம வயதில் காதலைக் கடக்கையில் வெற்றியோ தோல்வியோ அங்கு கவிதை இல்லாமல் இருக்காது. ஆனால் என் போன்ற அறிவீலிகள் சினிமா பாடலையும் கவிதையையும் ஒன்றென்று நம்பி ஏமாந்திருப்பார்கள். அவர்களுக்கு கவிதையின் உச்சக்கட்டம் என்பது தபூ சங்கரது கவிதைகள் தான். ஓரளவு தொடர்ச்சியாக வாசிக்கத் துவங்கிய பின் கவிதைகளும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த நேரம் பார்த்து பிரமீளின் “சிறகிலிருந்து பிரிந்த. இறகு ஒன்று. காற்றின் தீராத பக்கங்களில். ஒரு பறவையின் வாழ்வை. எழுதிச் செல்கிறது.” கவிதையை எதெச்சையாக காண, அவரது மொத்தக் கவிதைகளின் தொகுப்பை வாங்கினேன். அதில் ஒவ்வொரு கவிதையாக நானும் அவ்வபோது வாசித்தாலும் இன்னும் அது என்னை உள்ளே நுழைய விடாமல் வெளியே தள்ளிக் கதவை சாத்திக் கொண்டிருக்கிறது.

தடித்த கண்ணாடி போட்ட பூனை - போகன் ...

நம் குழுமத்தின் ஆண்டு விழா போட்டிக்காக, போகன் சங்கர் அவர்களின் இந்தக் கவிதைத் தொகுப்பினை நான் தேர்வு செய்ய காரணம் இதற்கு முன்பு படித்த அவரது போக புத்தகம் தான் காரணம். என்னளவில் மிக மிக கொண்டாட்டமாக வாசித்த புத்தகம் அது. கதைகளையே கவிதை போல சொல்லியிருப்பவரின் கவிதை எப்படி இருக்கும் என தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தான் வாசிக்க வைத்தது. இதுதான் நான் முதன்முதலாக வாசித்து முடித்த கவிதைத் தொகுப்பு.

காட்சிகளை கற்பனை செய்யவைக்கும் கதைகளுக்கும், உணர்வுகளை தூண்டும் கவிதைகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டென்பதையும், வார்த்தைகள் எத்தனை வீரியமானவை என்பதனையும் ஓரளவு புரிந்துக் கொண்டேன்.

கவிஞர் தமது சூழல்/அனுபவங்களை வெளிப்படுத்தும் வண்ணமே கவிதைகளை எழுதி இருக்கிறார். அதை போகப்புத்தகம் வாசித்ததால் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இதன் வீச்சு வேறு இரகம்.

‘அழகிய வாதாம்பருப்பு வாசனை மிதக்கும்’ என்று துவங்கும் ஒரு கவிதையில் வெளிப்படும் எண்ணங்கள் என்னை மிகவும் பாதித்தது. எனக்கு இந்த அனுபவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் என்னிடம் இதில் வருவதை போலவே “மற்றவர்களுக்கு நல்ல கனிகள் கொடுப்பவர்கள், எனக்கு மட்டும் அழுகிய பழங்களையே நீட்டுகிறார்கள்” என்று அழுததுண்டு. இக்கவிதையை வாசித்து விட்டு சற்று நேரம் தனித்து அமைதியாக இருந்தேன்.

ரயிலில் இருந்து 

பார்க்கும் மழை

வேறு மாதிரி இருக்கிறது

மனைவியை

அவள் அலுவலகத்தில் வைத்து

சந்திப்பது போல

இந்த உவமையை நான் மிகவும் இரசித்தேன். இதன் இறுதியில் வரும் பகடியையும்.

“எதையும்

விட மறுக்கும் நபர்கள் 

நாற்றம் பிடித்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்”

இவ்வரிகள் வரும் கவிதை, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்தது. எனக்காகவே சொல்லப்பட்டது போல இருந்தது.

பிணமானது தன்னை அறுப்பவனிடம் “எஸ் எஸ் நிறுத்தாதே” என்று சொல்வது போல ஒரு கவிதை வரும் பாருங்கள், மிக அருமை.

பெண்களிடம் தொலைப்பேசி எண்ணை கேட்பதற்கு வசதியாக ஒரு கவிதை உண்டு. வாத்து முட்டையை வைத்து, அதை எங்காவது உபயோகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

வரலாற்று மன்னர்கள் குதிரைகளுடன் வருவது போன்றொரு கவிதை வெகு சுவாரசியம்.

“என்னுடைய துக்கம் கிண்ணத் தொட்டிகளுக்குத் திரும்ப மறுக்கும் போன்சாய் மரங்களின் துக்கம்” – வெகுவாய் இரசித்தேன்.

திடிரென அறைவிளக்குகளை அணைக்கையில் அவசரமாக தத்தம் ஆடைகளை சரி செய்துக் கொள்ளும் இருளைக் கவனித்திருக்கிறீகளா?

சிறியது பெரியதுமாய் மொத்தம் 200 கவிதைகள், பத்து பத்து நிமிடங்களாக ஒதுக்கி ஓரளவுக்கு நிதானமாகத்தான் வாசித்தேன். என்னளவில் இது புதிதான சிறப்பான அனுபவமாகத்தான் இருந்தது. ஆனால் வேறொரு கவிஞர் தனது வலைதளத்தில் இப்புத்தகம் குறித்து எழுதி இருந்ததை படிக்கவும், இன்னும் பயிற்சி தேவை என்பது புரிந்தது. எதுவாயினும் நல்ல புத்தகம்.

இப்புத்தகத்தினை மீண்டுமொருமுறை நேரம் கிடைக்கையில் வாசிப்பேன். இனி அவ்வபோது கவிதைகளையும் வாசித்து பழக நினைக்கிறேன். 

மற்றவர்களும் வாசித்து விட்டு, அல்லது ஏற்கனவே வாசித்திருந்தால் உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.