முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே – நா.முத்து நிலவன்

கல்வி தொடர்பான புத்தகம் ஒன்றினை வாசிக்க வேண்டும் என்றதுமே நான் இந்த நூலைத்தான் நினைத்தேன். காரணம் இதன் தலைப்பே மிகவும் எதிர்பார்ப்பினை தூண்டுவதாக இருந்தது. பலர் இந்த புத்தகத்தினைப் பற்றி நம் குழுமத்திலேயே எழுதி இருந்தாலும் அதற்கு முன்பே நூலின் தலைப்பினைப் பார்த்தே இதனை வாசித்து விடுவது என நினைத்திருந்தேன். 

Mudhal Mathipen Eduka Vendam Magale! (Tamil Edition) eBook: Naa ...

ஆசிரியர் பல பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. அனைத்துமே கல்வியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவைதான்.

ஆசிரியர் உமாவை கொலை செய்தது யார் என்ற கட்டுரையினை நான் வெளியான போதே வாசித்த நினைவு இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் விவாதித்த விசயம் அது. ஒரு பள்ளி மாணவன் ஆசிரியரை அத்தனை முறை கத்தியால் குத்தி கொலை செய்ததை மறக்க இயலுமா? நான் அப்போது உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த காலம். கல்லூரியில் அனைவரும் அது குறித்து விவாதித்தது நன்றாக நினைவில் இருக்கிறது. கல்வித்துறையில் மட்டுமன்றி எந்தெந்த சமூக காரணங்கள் அம்மாணவனை கத்தியெடுக்க வைத்தது என்பதைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார்.

அடுத்து கல்வித் துறையின் தலையாய பிரச்சனையாக இருக்கும் கல்வி ‘புகட்டப்படுவதைப்’ பற்றி சொல்லியிருக்கிறார். இது எத்தனை ஆண்டுகள் பேசினாலும் தீராத காஷ்மீர் பிரச்சனை போலவேதான் இருக்கிறது. நாட்டில் அனைவருக்குமே தெரிகிறது, இப்போதுள்ள கல்விமுறை வெறுமனே மனப்பாடம் செய்வதை மட்டும் தான் ஊக்குவிக்கிறது என்பது ஊரறிந்த இரகசியமாக இருந்தும் இன்னும் எதற்காக இந்த மதிப்பெண்ணை நோக்கிய ஓட்டப் பந்தயம்?

சமச்சீர் கல்விமுறை வந்த பொழுது இத்தனை சிக்கல்கள் இருந்தன என்பதனை இந்த நூலில் வாசிக்கையில்தான் தெரிந்துக் கொண்டேன். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. ஆனால் தேங்காமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றளவு மகிழ்ச்சிதான்.

முத்தாய்ப்பான கட்டுரையாக இல்லை இல்லை கடிதமாக இருப்பது “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” தான். கல்லூரியில் பயிலும் தனது மகளுக்கு ஆசிரியர் எழுதியுள்ள இந்தக் கடிதமானது, நாட்டின் அனைத்து பிள்ளைகளுடன் அனைத்து பெற்றொர்களும் படிக்க வேண்டிய ஒன்று. உண்மையில் இந்த முதல் மதிப்பெண் என்பதெல்லாம் ஒரு நாள் கூத்துதான். அதற்காக வாழ்வில் ஓராண்டு மன அழுத்தத்தோடு, மற்ற அனைத்து விசயங்களையும் தியாகம் செய்துவிட்டு பாடப்புத்தகத்திலேயே மூழ்கி இருக்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒன்று.

ஆசிரியர் கூறும் இரண்டு விசயம் கட்டாயம் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஒன்று ஒரே வினாத்தாளுக்கு நாடு முழுக்க மாணவர்கள் தேர்வெழுதி, யார் எத்தனை மதிப்பெண் என்று பட்டியலிடுவதைத் தவிர்த்துவிட்டு, நூற்றுக் கணக்கில் வினாத்தாள்களை தயார் செய்து, ஆளுக்கொன்றாய் கொடுத்து, கணிணியில் தேர்வெழுத வைத்து, கணிணியே திருத்தி கொடுத்தல். இம்முறை அவன் படித்திருக்கிறானா என்று சோதிக்க போதுமானது. அவன் வேறெந்த மானப்பாடமும் செய்ய வேண்டி இருக்காது. காபியடித்தான் நிகழாது.

இன்னொன்று தேர்வு என்ற ஒன்று நடந்தால் அது திருத்தப்பட்டதும் விடைத்தாள் மாணவனுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இது தேர்வெழுதும் மாணவர்களின், அதற்கு பணம் கட்டும் பெற்றோர்களின் உரிமை. அதை அரசு/தனியார் கல்வி நிறுவனங்கள் செய்தே ஆக வேண்டும்.

எனக்கு இன்னொரு எண்ணம் வெகு நாட்களாக உண்டு. திறந்த புத்தக தேர்வு முறை. மாணவர்கள் தேர்வு எழுதுகையில் கையில் புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவத்தினை கொடுத்து விட வேண்டும். அதில் முக்கியமான தரவுகள் மட்டும் இருக்கும். உதாரணத்திற்கு ஆண்டுகள், எண்ணிக்கைகள் போன்ற மனனம் செய்ய வேண்டியவைகள். தேர்வு அறையில் அமர்ந்து அந்த தரவுகளில் சந்தேகம் வரும் பொழுது எடுத்துப் பார்த்துவிட்டு சொந்தமாக எழுத வேண்டும். வாழ்வில் கல்விச்சாலையை தாண்டிய பிறகு யாரும் இப்படி அமர்ந்து நிஜவாழ்வில் தேர்வு எழுத போவதில்லை. தேவையான தகவலை புத்தகத்தில் பார்க்கத்தான் போகிறோம். மாணவர்களுக்கு இப்படி எந்தேந்த தகவல்கள் எங்கிருந்து கிடைக்கும் என்ற விவரம் தெரிந்தால் போதாதா? உதாரணத்திற்கு பாரதியாரின் பாடல்களை படிப்பதுடன் அவர் பிறந்த/இறந்த ஆண்டை மனனம் செய்வதான் அவனுக்கு என்ன இலாபம் இருக்கிறது? ஒரு நானோ மீட்டர் என்றால் எத்தனை மீட்டர் என்பது அந்த தேர்வெழுதும் கணத்தில் நினைவில் இல்லை என்பதற்காக அவனுக்கு எதற்கு முட்டாள் பட்டம்? மனனம் செய்வதை தவிர்க்கும் வகையினை இந்த திறந்த புத்தக தேர்வு முறை நீக்கும். அடுத்து வினாக்களின் தரத்தை உயர்த்தினால் போதுமானது.

தனியார் பள்ளிகளின் பித்தலாட்டங்களாய் தோலுரித்திருக்கிறார். அதற்கு அரசு அதிகாரிகளின் துணை வேறு. அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும் என்றால் சுயமரியாதை இருப்பவர்கள் விருது பெற வாய்ப்புண்டா என அருமையான கேள்வியினையும் எழுப்புகிறார்.

நான் மிகவும் இரசித்தது, தமிழய்யா தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை அவர்களது கிராமத்திற்கே சென்று பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ள கட்டுரை. மிக மிக அருமை.

நூலை வாசித்து முடித்த பிறகுதான் நினைவு வந்தது. ஆசிரியருடன் நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். நமது வாசிப்பை நேசிப்போம் குழு துவங்கி முதல் வாசிப்புப் போட்டி நடந்த பொழுது, அவராக தொடர்பு கொண்டு பேசி, நம் முயற்சியை பாராட்டி, புத்தக பரிசளிக்க பணமும் அனுப்பி வைத்தார். அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றிகள்.

அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். கிண்டில் அன்லிமிட்டட்டில் கிடைக்கிறது.