குருகுலப் போராட்டம் – சமூகநீதியின் தொடக்க வரலாறு – நாரா.நாச்சியப்பன்

மகாபாரதத்தில் நடந்த குருஷேத்திர போரினை அனைவரும் அறிந்திருப்போம். அடுத்து வரக்கூடிய யுக மாற்றத்திற்கான துவக்கமாக அது நடக்கும். குரு குலத்தில் பிறந்தவர்களுக்கிடையிலான அந்த குருகுலப் போரினைப் போலவே தமிழகத்திலும் ஒரு குருகுலப் போர் நிகழ்ந்தது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அந்தப் போராட்டமே தமிழகத்தின் சமூக நீதி போராட்டத்தின் முக்கியமான மைல்கல். அதனை துவக்கமாக கூற இயலாது. ஏனெனில் அதற்கு முன்பே அயோத்திதாசர் கொள்கை அளவில் பேசத் துவங்கி, நீதிக்க்ட்சியினர் ஓரளவு செயல்படுத்தவும் துவங்கி இருந்தார்கள்.

ஈ.வே.ராமசாமி காங்கிரசில் இருந்து வெளியேற முக்கியமான காரணம் எது? இது கடந்த வருடம் குருப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி. ஆட்சி நிர்வாகத்தில் அமரப்போகும் அரசு அதிகாரிகளுக்கு தமிழகத்தில் நிகழ்ந்த பெரும் வரலாற்று திருப்புமுனையின் துவக்கப்புள்ளி தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக கேட்கபட்ட வினா. சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனை என்ற பதிலை சரியாக தேர்வு செய்த அனைவருக்கும் உண்மையில் என்ன பிரச்சனை என்பது ஆழமாக தெரியாது. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இந்த நூலின் மூலம்தான் எனக்கு பல விவரங்கள் தெரிய வந்தன.

ஒத்துழையாமை போராட்டத்திற்கு பிறகு ஆங்கில அரசு நடத்தும் கல்விக்கூடங்களுக்கு தேசியவாதிகள் தம் பிள்ளைகளை அனுப்புவதில்லை என முடிவு செய்தாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கான கல்வி என்னாவது என்ற கேள்வி எழும்போதுதான் சுதேசி கல்வி நிறுவங்கள் ஆங்காங்கே துவக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதே போல் ஏதேனும் கல்வி நிலையம் அமைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஏற்கனவே துவங்கப்பட்டு நடத்திக் கொண்டிருந்த ஒரு கல்வி நிலையத்திற்கு நிதிப் பற்றாக்குறை என்றும் உதவி வேண்டும் என்றும் பத்திரிக்கையில் வந்த விளம்பரம் மூலம் தெரிந்துக் கொண்ட காங்கிரஸ் செயற்குழு, இருதவணைகளில் 10000 ரூபாய் தருவதாகக் கூறி முதல் தவனையாக 5000 கொடுத்து விடுகிறது. காங்கிரஸ்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை அங்கு படிக்க அனுப்புகிறார்கள்.

அதில் ஒரு காங்கிரஸ்வாதியின் பிள்ளை, மெட்ராஸ் மாகாணாத்திற்கு முதலமைச்சராக இருந்தவரின்(யாரென்று நூலில் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள், ஒரு சிறிய சஸ்பென்சாக இருக்கட்டும்) பிள்ளை, இனி அங்கு படிக்கப் போகமாட்டேன் என அழுகிறான். என்ன நடந்தது என அவர் விசாரிக்க குருகுலம் செயல்படும் முறையை விவரிக்கிறான்.

காலை 4 மணிக்கு எழுதல்

கை, கால், முகம் கழுவி பல் விளக்கிய பின் உடற்பயிற்சி

மண்வெட்டியோடு சென்று குழிவெட்டி மலங்கழித்து மூடிவருதல்

7.30 மணிக்கு கூடத்தில் தெய்வ வழிபாடு, அதில் பார்ப்பன மாணவர்கள் ஒரு புறம், மற்ற மாணவர்கள் ஒரு புறம் நிற்க வேண்டும்

காலை உணவாக கஞ்சி

உழவு வேலை, தோட்ட வேலை, சமையல் வேலை என மாணவர்களுக்கு வேலை கொடுக்கப்படும்

இதே போல் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு மாணவர்கள் கொத்தனார் வேலை செய்தல், செங்கல் சுமத்தல்

மற்ற ஆங்கிலப் பள்ளிங்கூடங்களை போலவே வரலாறு, சமூக நலம், பூகோளம், விஞ்ஞானம் சொல்லித் தரப்பட்டன.

தமிழும் சமஸ்கிருதமும் இந்தியும் கற்றுத் தரப்பட்டன. பயிற்சி மொழி ஆங்கிலமாகவே இருந்தது.

இதுவரை விவரங்கள் கேட்ட தந்தைக்கு ஆங்கில வழிக்கல்வி மட்டும்தான் உறுத்தலாக இருந்தது. வேறு என்ன பிரச்சனை என விசாரிக்கிறார்.

சூத்திர பிள்ளைகளையும் பிராமணப் பிள்ளைகளையும் வேறுபாடாய் நிகழ்த்துவதை விவரிக்கிறான். பார்ப்பன பிள்ளைகளுக்கு மட்டும் விசேஷ நாட்களில் வடை,பாயாசத்தோடு சாப்படு, ஆனால் அன்றும் மற்றவர்களுக்கு சோறும் சாம்பாரும்தான்.

அதே போல் ஒரு நாள் தாகத்திற்கு வழியில் இருந்த பானையில் தண்ணிர் மொண்டு குடிக்க, அவ்வழியாக வந்த பிரம்மச்சாரி வாத்தியார் பாதித்தண்ணிர் குடிக்கையிலேயே கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். “சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு” என பயங்கரமாக திட்டினார். தீட்டாகிவிட்டதாம். தீட்டுன்னா என்னன்னெ எனக்கு தெரியலை.

அதே மாதிரி பிராமண பசங்க தோட்ட வேலைக்கு வர மாட்டாங்க, சமையல் வேலை மட்டும்தான் அவங்களுக்கு, நாங்க போனா எங்களை பாத்திரம் மட்டும் கழுவ சொல்லுவாங்க, ஒரு நாள் நாங்களும் சமைக்கறோம்னு கேட்டதுக்கு அந்த சமையல் ஐயர் முறைத்துக் கொண்டே “சூத்திரப் பசங்க சமைச்சா பிராமண பசங்க சாப்பிட மாட்டாங்க”ன்னு சொன்னார்.

அப்புறம் எப்பவுமே அவங்களுக்கு எங்களுக்கும் தனித்தனி பந்திதான். எனக்கு இதுல்லாம் பிடிக்கவே இல்லை. நான் அங்கே போக மாட்டேன் என அழும் மகனிடம் “இதை அப்படியே வந்து ராமசாமி மாமாகிட்ட சொல்லு” என கூட்டி செல்கிறார்.

வெள்ளையனுக்கு எதிராக நாடு முழுவதும் இந்தியர்களை ஒருங்கிணைக்க சமபந்தி நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரசிடம் இருந்து நிதி பெற்றுக் கொண்டு இப்படி ஏற்றத்தாழ்வை கடை பிடிப்பதா என்ற கேள்வியுடன் செயற்குழு கூடுகிறது.

செயற்குழுவின் ஒவ்வொரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்று விவரமாக இப்புத்தகத்தில் கொடுக்கப்ப்ட்டுள்ளன. அனைவரும் இதை ஆதரித்தார்கள், இதுதான் இந்துக்களின் தர்மம் என்று வாதிட்டார்கள். அதை விட கொடுமை என்னவென்றால் இப்படி பிரச்சனை நடந்துக் கொண்டிருக்கிறது என தெரிய வந்ததுமே, யாருக்கும் தெரியாமல் குருகுலத்தை நடத்தி வந்த வ.வே.சு ஐயர், இரக்சியமாக அடுத்த தவணைக்காக செக்கை வாங்கிக் கொண்டு விட்டதுதான். இத்தனைக்கும் அப்போது பொருளாளர் ஈ.வே.ராமசாமிதான். அவருக்கே தகவல் சொல்லாமல் நடந்திருக்கிறது இந்த திருட்டு வேலை.

ஏற்கனவே கடந்த 5 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தான் கொண்டுவரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஏதேதோ காரணங்கள் சொல்லி காங்கிரஸ் தலைமை தட்டிக் கழிப்பதில் நொந்திருந்த ஈ.வே.ரா இந்த பிரச்சனையில் மொத்தமாக வெளியேறுகிறார். வெளியேறிய கையோடு அவர் துவக்கியதுதான் சுயமரியாதை இயக்கம். பின்னாளில் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகமாகிறது. தி.கவில் இருந்து வந்ததுதான் திமுக, அதிமுக, மதிமுக எல்லாம்.

தமிழக சமூக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இந்த நிகழ்வினைப் பற்றி ஏகப்பட்ட தகவல்களை இந்த நூல் வழங்குகிறது. நான் குறிப்பிட்டுள்ளவை மிகக் கொஞ்சம் தான். சமூக நீதியில் ஆர்வமுள்ளோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.