வேட்கையோடு விளையாடு – ஈரோடு கதிர்

கொஞ்சம் வெளிப்படையா பேசுவோம். உங்களுக்கு யார் மேலயாவது பொறாமை இருக்கா? குறிப்பிட்ட நபரைக் கேட்கலை. இப்படிப்பட்டவங்களை பார்த்தா பொறாமையா இருக்குங்கற மாதிரி கேட்கறேன். உதாரணத்திற்கு நான் சொல்கிறேன். எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருக்கவங்களைப் பார்க்கறப்ப எனக்கு பொறாமையா இருக்கும். இப்ப என்னோட கேள்வி புரிஞ்சுருக்கும்னு நம்பறேன். அதே மாதிரி இன்னொருத்தங்களை பார்த்து சமீபமா ரொம்ப பொறாமை படறேன். தவறாம உடற்பயிற்சி செய்யறவங்களை பார்த்தா பொறாமையா இருக்கு.

எனக்கு கடந்த வருடமே வயிற்றுப்புண் காரணமா நெஞ்சுவலி வந்து அலாரம் அடிச்சுருச்சு. நானும் அதன் பிறகு தொடர்ச்சியா ஓடவும் நடக்கவும் செய்துட்டுத்தான் இருக்கேன். ஆனா அதுக்கு முன்ன இருந்தே எடையை குறைக்கனுங்கற எண்ணம் இருந்துக்கிட்டே இருக்கும். அந்த நேரத்துல என்னோட நட்பு பட்டியல்ல இருக்க ஈரோடு கதிர் அவர்களின் உடற்பயிற்சி சம்பந்தமான பதிவுகளைப் பார்க்கறப்ப உடனே நாமளும் நாளைலருந்து ஒழுங்கா செய்யனும்னு தோணும். ஒரு நாள் திடிர்னு ஈரோட்டில் இருந்து கோவைக்கு சைக்கிள்ல போனத படம்பிடிச்சு போட்டப்ப மிரண்டுட்டேன். அப்புறம் உள்ளத்தனைய உடல்ங்கற குழுமத்துக்கு தோழர் பூங்கொடி மூலம் போன பிறகு நல்ல முன்னேற்றம். அங்கேயும் கதிர் அவர்களை பார்த்தப்ப எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.

என்ன இவன் புத்தகத்தை பத்தி சொல்லாம ஏதேதோ சொல்லிட்டுருக்கான்னு தோணும். ஆனா நான் காரணமாதான் சொல்லிட்டு இருக்கேன். நமக்கு ஒரு விசயம் செய்யனும் இல்லை ஒன்றை நோக்கி பயணிக்கனும், உழைக்கனும். ஆனா நாம் அதனை செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். அதற்கு இரண்டு பெருங்காரணங்கள் இருக்கும். ஒன்று நம்மால் முடியுமா என்ற தயக்கம். மற்றொன்று சோம்பல். உடற்பயிற்சி விசயத்தில் மட்டுமில்லை, வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற உழைக்காமல் நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கு “இங்கே பாரு, உன்னால முடியும், வா, ஓடு” என சொல்ல ஒரு குரல் தேவைப்படுகிறது. அப்படி ஒவ்வொருவரும் தங்களை தாங்களே சுயமுன்னேற்றம் செய்துக் கொள்ள ஒரு உற்சாகமூட்டும் கரவொலியாய்த்தான் இந்த நூல் இருக்கிறது.

மொத்தம் 25 கட்டுரைகள். மாணவர்களுக்கான பயிற்சியளித்தலின் தனது அனுபவத்தைக் கொண்டு அவர் உணர்ந்துக் கொண்டதை பகிர்வது போல் நம்மை உற்சாகப் படுத்துகிறார். அதிலும் முதல் கட்டுரை “யார் நீ” என்ற கேள்விக்கு அவர் தந்த உதாரணம் என்னை வெகு நேரம் யோசிக்க வைத்தது. எனக்கு திருப்தியான பதில் கிடைக்கும் வரை அடுத்தக் கட்டுரைக்கு நான் செல்லவில்லை.

சமகால உலக விசயங்களை சொல்லிக் கொண்டே, தனது அனுபவங்களை அதனுடன் தொடர்பு படுத்தி கதை சொல்வது போல் சுவாரசியமாக அவர் சொல்லிக் கொண்டிருக்க, கட்டுரை முடிகையில்தான் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பது உரைக்கிறது.

சிலர் நினைக்கலாம். புத்தகத்தைப் படித்தால் முன்னேறி விடுவார்களா என்று? அப்படியில்லை. முன்னேற வேண்டியதில்லை என நினைப்பவர்களுக்கு எது கொடுத்தாலும் எதுவும் நடக்காது. ஆனால் முன்னேற வேண்டும் என வேட்கை இருப்பவர்களுக்கு இருக்கும் தயக்கத்தை உடைக்க இத்தகைய புத்தகங்கள் அவசியமாகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு, அதிலும் குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என தோன்றுகிறது.

வெறும் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, அரசுப் பணிக்கு முயன்றுக் கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கும் இந்த நூலைப் பரிந்துரைக்கிறேன். நான் தமிழில் இதுவரை இத்தகைய சுயமுன்னேற்ற வகை புத்தகங்களை வாசித்ததில்லை என்றாலும் நான் வாசித்தவரையில் மிக கச்சிதமான வார்த்தைகளை பயன்படுத்தி நறுக்கென்று எழுதும் விதத்தில் சுவாரசியமான வேறு புத்தகத்தை இவ்வகையில் நான் படித்ததில்லை என்று கூற முடியும்.