ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் – ஸ்டீஃபன் ஹாக்கிங்

ஸ்டீஃபன் எனக்கு அறிமுகமானது சூப்பர் ஹீரோ என்றொரு ஸ்பூஃப் படத்தில்தான். அதிலும் அவரை பயங்கரமாக கலாய்த்திருப்பார்கள். யார் இவர், சக்கர நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு டிஜிட்டல் குரலில் பேசுகிறார் என்று யோசித்தேன். அடுத்து அவரது காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற புத்தகம் பற்றி பலர் சிலாகித்து பேசியிருப்பதன் மூலம் ஒரு அறிவியலாளர் என்று மட்டும் தான் தெரியும். அதன் பின் அவர் இறந்த பொழுதுதான் முக நூல் முழுக்க அவரைப் பற்றிய நிலைத்தகவல்களாக பகிரப்படவும் அவரது ஆளுமை எனக்குப் புரிந்தது. அது அப்படித்தான், ஒருவரின் இழப்பிற்கு பிறகுதான் கொண்டாடப்பட வேண்டும் என்று இருக்கிறது.

அமேசானில் எப்பொழுதும் ஒவ்வொரு மாதத் துவக்கத்தின் முதல் நாள் மாதாந்திர தள்ளுபடியில் மின்னூல்கள் விற்கப்படும். அப்படி ஒரு தள்ளுபடியில் வாங்கி வைத்து வாசித்தேன். இப்புத்தகத்தின் முன்னுரையில் ஸ்டீஃபன் தன்னைப் பற்றி சொல்வதன் மூலமாக அவரைப் பற்றி அறிந்ததை விட, அவரது மகளின் கட்டுரை வெகுவாக ஈர்த்தது. மேலும் அவரது கதையை படமாக எடுக்கையில் அவரது பாத்திரத்தின் நடித்தவரின் உரை.

எனக்கு எப்பொழுதும் மூவரை மிகவும் பிடிக்கும். பலரிடம் உதாரணமாக சொல்வேன். முதலாம் நபர் புருஸ் லீ. அடிபட்டு இனி நடக்கவே முடியாது என கைவிட்ட நபர், பின்னாள்களில் சண்டையிட்ட வேகத்தை இன்று வரை யாரும் விஞ்சவில்லை. அடுத்து நமது நடிகர் அஜித் குமார். இவருக்கும் ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள். அறையில் ஸ்பீக்கரில் பாட்டு ஓடினால் கூட முதுகுத்தண்டு மெலிதாக வலிக்குமாம். ஆனால் கடந்து வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்களை விட முக்கியமானவர் ஸ்டீஃபன். தனது 21 வயதில் நரம்பு அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பொழுது மருத்துவர்கள் அவருக்கு கொடுத்த காலக்கெடு 5 ஆண்டுகள். அதாவது 26 வயதில் இறக்க வேண்டியவர். ஆனால் அவர் இறக்கையில் வயது 76.

அந்த நோய் அவரை விட்டு சென்று விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவரை முடக்கிப் போட்டது. அவருக்காக சிறப்பு சக்கர நாற்காலி உருவாக்கப்பட்டது. அவரது குரல் போனது. கணிணி வழியில் தொடர்ந்து இறக்கும் வரை பேசினார். இது போல் எத்தனையோ பேர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்க இவருக்காக மட்டும் எதற்கும் இத்தனை அறிவியல் சாதனங்கள்? அப்படி எந்த விதத்தின் சிறந்தவர் என்ற கேள்வி எழும். கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த வானியல்/பிரபஞ்சவியலாளர். இவரது கோட்பாடு கருந்துளை குறித்த ஆய்வுகளுக்கு மிக முக்கியமான ஒன்று.

இந்த நூலில் 10 கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.

  1. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?
  2. பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
  3. அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
  4. வருங்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா?
  5. ஓரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது?
  6. காலப்பயணம் சாத்தியம்தானா?
  7. வருங்காலத்தில் நாம் இந்த பூமியில் உயிர் பிழைத்திருப்போமா?
  8. விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா?
  9. செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?
  10. வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?

இந்தக் கேள்விகளை பார்க்கும் பொழுதே புரிந்திருக்கும் இது எந்த வகைப் புத்தகம் என்று. முழுக்க அறிவியல் பாடம் நடத்தி போரடிக்க செய்யும் நபர் அல்ல ஸ்டீஃபன். சுஜாதாவை ஒத்த சுவாரசியமான எளிய நடை. காலப்பயணம் பற்றி சொல்கையில் ஐன்ஸ்டினின் கவிதை ஒன்றினை சொல்கிறார்.

ஒளியை விட வேகமாகப் பயணித்த

ஒய்யாரப் பெண்ணொருத்தி இருந்தாள்

ஓரிடத்திற்கு புறப்பட்டாள் இன்று

ஒயிலாய் அங்கு சென்றடைந்தாள் நேற்று

இப்படித்தான் சுவாரசியமாய் பாடம் நடத்துகிறார். கருந்துளைக்குள் நுழைந்தால் எப்படி நூடுல்ஸ் ஆவோம் என்று சொல்வதோடு அப்படி ஆகாமல் இருக்க எந்த வகை கருந்துளைக்குள் குதிக்க வேண்டும் என்று வேறு சொல்லித் தருகிறார்.

ஓநாய் குலச்சின்னம் புத்தகத்தில் ஓநாய் கூட்டத்தில் இருந்து பிரித்து வரப்படும் குட்டி ஒன்று, நாய்களோடு வளர்ந்தாலும் ஓநாயாகத்தான் வளரும். காரணம் அதனுள் டீஎனன்ஏவில் கடத்தப்படும் மரபு நினைவுகள். அதே ஒரு மனிதன் தனியாக ஒரு தீவில் குழந்தையாக வளர்ந்தால் அவன் இன்றைய நவீன மனிதனாக வளர மாட்டான். ஏனெனில் இன்றைய நவீனம் மனிதனுக்கு மொழி வாயிலாக கல்வி வாயிலாகத்தான் போதிக்கப் படுகிறது. மனிதனின் மிகப்பெரிய ஆயுதம் மொழி. அதை வைத்துத்தான் அவன் அனைத்து உயிரினங்களையும் வென்று கட்டுப்படுத்தினான். ஆக மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழிதான். இப்படி நானாக அப்புத்தகத்தை வாசிக்கையில் சிந்தித்தேன். இதை இப்புத்தகத்தில் ஸ்டீஃபனும் அங்கீகரிக்கவும் எனக்கு ஒரே சந்தோசம். ஆஹா நானும் ஒரு அறிவாளி என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்.

கற்பனைதான் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது. தன்னை கனவில் செல்போன்கள் துரத்தின. அதை கதையாக்கி 2.0 படம் எடுத்ததாக இயக்குனர் ஷங்கர் கூறுகிறார். ஐன்ஸ்டினுக்கும் அவரது சிறுவயதில் ஒரு கனவு வந்ததாம். ஒளிக்கற்றையின் மீது ஓடுவதைப் போல. (எனக்கு Justice League கார்ட்டூனில் Green lanternன் மோதிரத்தில் இருந்து வரும் ஒளிக்கற்றை மீது Flash ஓடுவது நினைவுக்கு வந்தது). அதை அடிப்படியாகக் கொண்டு இப்போது ஒரு ஆராய்ச்சி போய்க் கொண்டிருக்கிறது. எப்படி என்றால் லேசர் ஒளிக்கற்றையைக் கொண்டு தள்ளுமளவு எடை குறைந்த விண்கலத்தை தயார் செய்தல். ஒளியினால் தாக்கப்படும் பொருள் ஒளியின் வேகத்தில் 1/5 பங்கு வேகம் பெறுமாம். இது அறிவியலில் பெரும் பாய்ச்சல். இது போன்ற தகவல்களை படிக்கையில் புல்லரிக்கிறது.

இதிலுள்ள ஒவ்வொரு கேள்விக்கான விளக்கங்களை பற்றியே தனியாக விளக்கம் கொடுத்துக் கொண்டே போகலாம். இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய நூல். குறிப்பாக மாணவர்களுக்கு இது போன்ற நூல்களை கொண்டு சேர்க்க வேண்டும்.

இறுதியாக ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் ஒரு புகழ்பெற்ற உரையாடலை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது யார்?

கடவுள்

கடவுளைப் படைத்தது யார்?

அவரை யாரும் படைக்கவில்லை. அவர் சுயம்பு.

அப்படியென்றால் பிரபஞ்சமும் ஏன் சுயம்புவாக இருக்கக் கூடாது?