வாய்மை எனப்படுவது யாதெனின்

கல்லூரியில் படிக்கையில், ஒரு நாள் இரவு சுமார் 11 மணிக்கு மேல் இருக்கும், நன்றாக நினைவிருக்கிறது. அன்று நான் மொட்டை மாடியில் படுத்திருந்தேன். நான் மட்டுமல்ல. சக நண்பர்களும் தான். திடிரென்று போன் அடித்தது. அந்தக் காலகட்டத்தில் அந்நேரத்திற்கு அழைத்து பேசக்கூடிய தோழிகளையோ காதலிகளையோ நான் பெற்றிருக்கவில்லை, நீங்க நம்பலன்னாலும் அதான் நிசம். போன் செய்திருந்தது என் நண்பனின் காதலி.

“டேய் அவன் போன் பண்ணா நான் இவ்வளவு நேரம் உங்கிட்டதான் பேசுனேன்னு சொல்லிரு” என சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.

எனக்கு அவள் வைத்த பின் தான் தூக்கமே தெளிந்தது. உடனே இன்னொரு போன். நண்பன்.

“மச்சி”

“சொல்லுடா”

“***** கூட நீயா பேசிட்டுருந்த?”

“ஆமா ஏன் டா?”

“ஒன்னுமில்லைடா, குட் நைட்” என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். ஆனால் அதன் பிறகு எங்கிருந்து நான் தூங்குவது?

அப்போது தோழியிடம் பேசிவிட்டு வந்தவனை பிடித்துக் கொண்டேன். டீ சாப்பிடப் போகலாம் என்று அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினேன். அவன் ஏதோ, அவன் காதலியைப் போல் “வேறு யாரிடம் பேசிக் கொண்டிருந்திருப்பாள்?” என்ற யோசனைக்கு சென்றான். சுடு தண்ணியை வாங்கி மூஞ்சில ஊத்திருவேன் என மிரட்டி என் பிரச்சனைக்கு இழுத்து வந்தேன்.

“நடு நிசி நேரமாக இருந்தாலும் நான் என்ன பேசிக் கொண்டிருந்தேன் என கொஞ்சம் கூட சந்தேகப் படாத அந்த துரியோதனுனுக்கு நான் செய்தது துரோகம் அல்லவா?” என்றுக் கேட்டேன். பொறுமையாக சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்ட அவன் “அப்படியா நினைக்கற?” என்றான்.

அவனுக்கு என் பிரச்சனை புரியவில்லை. நண்பன் போனில் “இந்நேரத்துக்கு என்னடா பேச்சு வேண்டிக் கிடக்கு?” என்று சந்தேகப் பட்டு இருந்தால் இப்படி குற்ற உணர்வு தோன்றி இருக்காது. அவன் என்னை முழுமையாக நம்புகிறான். அதனால் தான் குழப்பம் என தெளிவாகக் கூறினேன்.

“அவன் எப்படி உன்னை நம்பி சண்டை போடாம விட்டானோ, அதே மாதிரிதானே அவளும் உன்னை நம்பித்தானே உதவி கேட்டா? இப்ப நீ ஏதாவது மாத்தி சொன்னா அவளுக்கும் தானே துரோகம் பண்ற மாதிரி ஆகிரும்?” என்றுக் கேட்டு குட்டையை மேலும் குழப்பினான்.

இதை யோசித்துக் கொண்டிருந்தால் விடியா தூக்கம் வராது. நான் தூங்கவில்லை என்றால் உன்னையும் தூங்க விட மாட்டேன் என மிரட்டினேன்.

“மச்சி, நீ பொய் சொன்னன்னுதான் ஃபீல் பன்ற?”

“ஆமாடா”

“நீ பொய் சொல்லலை மச்சி”

“என்னடா சொல்ற?”

“அவன் போன் பன்றதுக்கு முன்ன அவ கூடதானே போன்ல பேசுன?”

“ஆமா, ஆனா அது ஒரு 10 செகண்ட் தான்”

“அந்த கணக்கெல்லாம் யார் கேட்டா? அவன் கேட்டது என்ன? அவ கூட நீயா பேசிட்டிருந்தன்னு தானே? நீதானே பேசுன, அது 10 செகண்ட்னா என்ன? 10 மணி நேரம்னா என்ன?”

“என்னடா சூழ் நிலைக்கு ஏத்த மாதிரி பொய்யை உண்மையாக்குற? தப்புடா”

“அப்படி இல்லை மச்சி, இப்ப நீ அவன் கிட்ட இல்லைடா நான் 10 செகண்ட் தான் பேசுனேன். அதுக்கு முன்னாடி நான் பேசலைன்னு சொன்னா என்ன நடக்கும்?”

“என்ன நடக்கும்?”

“அவங்களுக்குள்ள பிரச்சனை வரும், ஏற்கனவே ஆரம்பிச்சுருச்சுங்கறது வேற விஷயம், ஒருத்தருக்கொருத்தர் மறைக்க ஆரம்பிக்கறப்பவே இது நீடிக்க போறதில்லைன்னு ஆகிருச்சு. ஆனா இப்ப நீ சொல்லி பிரிஞ்சா காலகாலத்துக்கும் உன்னாலதான் பிரிஞ்சோம்னு அவங்க மனசுல ஆழமா பதிஞ்சுரும், அது வெறுப்பாகும். உங்க 3 பேத்துக்குள்ள இருக்க நட்பும் சிதஞ்சுரும், அவங்க காதல் என்னைக்கா இருந்தாலும் முடியத்தான் போகுது. நீ கொஞ்சம் தள்ளிப் போட்டுருக்க, அவ்வளவுதான். ஆனா உன்னோட தனிப்பட்ட நட்பைக் காப்பாத்திருக்க. இது மாதிரி நல்லது செய்யறதுக்காக சொல்ற பொய் மட்டுமில்லை, தீமைய தடுக்கறதுக்காக சொல்லபடற பொய்யும் உண்மைதான்னு….”

“திருவள்ளுவரே சொல்லிருக்காரு, அதானே?”

“அதேதான்”

அதிகாரம்:வாய்மை குறள் எண்:291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

உரை:

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.