அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ

மழை ஓரளவிற்கு குறைந்து விட்டது. முன்பே கிளம்பி இருக்க வேண்டும். இப்போது தூறல் தான். அதுவும் சன்னமாகத்தான். வண்டி இப்போதுதான் இராண்டாவது கொண்டை ஊசி வளைவைத் தாண்டுகிறது. ஏறி முடிப்பதற்குள் முழுவதுமாக மழை நின்றிருக்கும். ஏற்காட்டில் பாதி மழையில் ஒரு மூங்கில் காடு இருக்கிறது. எப்போது மழை பெய்தாலும் நான் அங்கு இருக்க வேண்டும் என நினைப்பேன். அடிவாரத்திற்கு அருகில் தான் வீடு என்பதால் மழை வந்தாலே கிளம்பி விடுவேன்.

இப்போதெல்லாம் நிறைய மயில்களைப் பார்க்க முடிகிறது. இந்தப் பக்கம் மிகவும் குறைச்சலாகத்தான் வரும். பருவ நிலை மாறுதல் காரணமாக இப்படியெல்லாம் நடக்கும் என்று சூர்யாதான் சொல்வான். அவன் இருந்திருந்தால் அவனையும் கூட்டி வந்திருப்பேன். அவனுக்கு இப்படி மழையில் வெளியில் திரிவது பிடிக்காது என்றாலும் எனக்காக வருவான். இப்போதெல்லாம் அதிகம் தனியாகத்தான் சுற்ற வேண்டி இருக்கிறது. ஆளுக்கொரு பக்கமாக போய்விட்டார்கள்.

வானம் முழுக்க மேகம் தான் நிரம்பி இருந்தது. வெளிச்சம் எதனுள் புகுந்து வந்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இந்த கொஞ்ச வெளிச்சமும் இல்லை என்றால் இரவு போல் இருக்கும். காலை 10 மணி வாக்கில் இந்த மாதிரி கிளைமேட்டெல்லாம் டிசம்பர் மாதத்தில் தான் கிடைக்கும். அதுவும் மலை ஏறினால்தான் முழுதாய் உணர முடியும்.

என் இடம் வந்து விட்டது. மூங்கில் தோட்டம். வண்டியை ஓரமாக நிறுத்தி பூட்டி விட்டு, இறங்கி நடந்தேன். ஈரமான தரையில் நடப்பது மொத்த மன நிலையையும் மாற்றும். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு இந்த மழை நேர மூங்கில் தோட்டம் தான் சொர்க்கம். உண்மையில் என்னைப் போல யாரும் பைத்தியம் பிடித்து இப்படி இந்த நேரத்தில் வராமல் இருப்பதும் நல்லதுதான். இல்லை என்றால் இந்த ஏகாந்தம் கிட்டாது.

இதற்கு முன்பு கல்லூரிக் காலத்தில் அடிக்கடி வருவேன் அவளுடன். அதைப் பற்றி பேச எதுவுமில்லை. மீண்டும் மழை வந்தால் நன்றாக இருக்கும். கொஞ்ச நேரம் இருந்து விட்டு வெளியே சாலை ஓரமாக இருந்த தடுப்பு சுவரில் அமர்ந்தேன். அங்கங்கு மழை நீர் இறங்கி சிறு சிறு ஓடைப் போல் கீழ் நோக்கி சாலையில் இறங்கிக் கொண்டிருந்தது.அருகில் இருந்த ஒரு மரத்தில் இலையைப் பறித்து அதில் போட வேண்டும் போல இருந்தது.

எட்டிப் பறித்தேன். மரத்தின் இலைகளில் சேகரமாகி இருந்த தண்ணீர் மழையாக என் மேல் கொட்டியது. இலையை பறிப்பதை நிறுத்தி விட்டு மரத்தை பிடித்து வேகமாக உலுக்கி நனைந்தேன். மொத்தமாக தண்ணீர் கொட்டவும் என்னை மறந்து “ஊவ்வ்வ்” என்றுக் கத்தினேன். அப்போது என்னைக் கடந்த பேருந்தினுள் இருந்து அவள் என்னைப் பார்த்தாள்.

விரிந்த கண்களுடன் ஏதோ சொல்ல வருவதைப் போல் இதழ்கள் திறந்து என்னைப் பார்த்தவளை என்ன மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளிடமும் எந்த அசைவும் இல்லை. அவள் காது ஜிமிக்கி மட்டும் பேருந்தின் அசைவிற்கு ஏற்றார் போல் ஆடிக் கொண்டிருந்தது. யார் இவள்?

************************************

தேவதையோ! தெரிந்தெடுக்கப்பட்ட மயிலோ! அல்லது காதணி கொண்ட மனிதப்பெண்தானோ! என் சிந்தை மயங்குகிறதே!

அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

************************************

அவள் முழுவதும் என் கண்ணில் இருந்து மறைந்த பிறகுதான் சுய நினைவிற்கு வந்தேன். அது பள்ளிப் பேருந்து. இந்த கான்வென்ட் பள்ளி எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். பள்ளிப் பேருந்து என்றால் மாணவர்களும் இருந்திருப்பார்களே? நான் எங்கே கவனித்தேன். ப்பா, என்ன பொண்ணுடா…!

நேரே அந்தப் பள்ளிக்குச் சென்றேன். உள்ளேச் செல்வதற்கு முன்பாகவே என்னவென்று யோசித்து விட்டேன். இந்த மாதிரி நேரத்தில் எப்படி பேச வேண்டும் அணுக வேண்டும் என்று சூர்யா சொல்லிக் கொடுத்திருக்கிறான்.

பள்ளியில் அடுத்த ஆண்டு அக்கா மகளுக்கு அட்மிஷன் போட விரும்புவதாக சொல்லி அலுவலகத்தில் ஃபீஸ் விவரங்களை விசாரித்தேன். அவர்கள் கொடுத்த பிரவுச்சரை வாங்கிக் கொண்டு பள்ளியை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றேன். ஒருவர் கூட்டிச் சென்றார். இன்ஸ்பெக்சனுக்கு வருபவர்கள் கூட என்னைப் போல் சுற்ற மாட்டார்கள்.

ஒருவழியாக அவளைக் கண்டு பிடித்தேன். ஒரு வகுப்பிற்குள் கணக்கு நடத்திக் கொண்டிருந்தாள். நின்று பார்க்கவும் திரும்பி பார்த்தாள். அவள் கண் விரிந்தது. புன்னகைத்தேன். அப்படியேதான் நின்றிருந்தாள். அவள் இப்படி நீண்ட நேரம் உறைந்து நின்றால் சரியாக இருக்காது என்று நானே நகர்ந்து வந்தேன்.

பள்ளியை விட்டுக் கிளம்புகையில் பைக்கில் கேட்டைத் தாண்டியதும் சூர்யாவிற்கு போனடித்தேன்.

“மச்சி, ஹரிடா, ஒரு பொண்ணைப் பார்த்தண்டா”

-சாரல் காலம்