களவுஅறிந்தார் நெஞ்சத்து கரவு

நீயாநானால ஒரு தலைப்பு கொடுத்துருந்தாங்க, போன தலைமுறை கணவர்கள் Vs இந்த தலைமுறை கணவர்கள். விவாதம் முடிஞ்ச பிறகு எப்படி இந்த தலைமுறை கணவர்கள் மட்டும் பொண்டாட்டிகளுக்கு உதவி செய்யறாங்கங்கறதுக்கு ரெண்டு காரணம் சொல்லப்பட்டது. ஒன்னு இந்த தலைமுறை ஆண்கள் வளர்க்கப்பட்ட விதம். பெரும்பாலான போன தலைமுறைக்கு கிடைச்ச அடிப்படை கல்வி, ஓரளவு ஆணாதிக்க சிந்தனைகளை குறைச்சு வீட்டு வேலைகளை ஆண்களும் செய்யலாம்னு சொல்லிக் கொடுக்க வச்சது.

இன்னொரு காரணம் இந்த தலைமுறை பெண்களுக்கு கிடைத்த கல்வி. அந்த கல்வி அவர்களை வேலைக்கு போக உதவியது. அப்படி அவர்கள் வேலைக்கு சென்று பொருள் ஈட்டி, ஆணின் பளுவை குறைக்க உதவ உதவ, பதிலுக்கு பெண்களோட வீட்டு வேலைகளுக்கும் ஆண்கள் உதவறாங்கன்னு.

ஆனா பாருங்க, இது எதுவுமே திட்டமிடப்பட்டு செய்யப்படலை. சிறு வயதில் வளர்க்கையில் பத்து இருபது வருடங்களுக்கு பிறகு இப்படித்தான் சமூகம் இருக்கும், பெண்கள் அதிகம் வேலைக்கு செல்வார்கள், அதனால் ஆண் பிள்ளைகளும் வீட்டு வேலை செய்து பழக வேண்டும் என்று முடிவெடுத்து செய்யலை. ஆனா அது தானா நடக்குது. ஒரு சமநிலை, அது எப்பவுமே தன்னைத்தானே மையத்துல இருக்கும்படியா பாத்துக்கும்.

இந்த விசயத்துல மட்டுமில்லை. எல்லா விசயத்துலயும் அப்படித்தான். கோபல்லபுரம் புத்தகத்துல கிரா அழகா சொல்லிருப்பாரு. ஒரு வருசம் ஊர்ல முளைக்கற மூலிகைகளோட அளவை வச்சே, அந்த வருசம் அந்த ஊர்ல எத்தனை பேருக்கு என்னென்ன வியாதி வரப்போகுதுன்னு சொல்லிடலாமாம். இந்த சமநிலை தவறும்போது பேலன்ஸ் பண்ணிக்கறதில்லை.தவற ஆரம்பிக்கும்போதே அதுக்கான கவுண்டர் ஆக்சனை ஆரம்பிச்சுருது.

இப்ப ஓசோன் படலத்தை எடுத்துக்குவோமே. அது என்ன? ஆக்சஜனோட மூன்று மூலக்கூறு சேர்ந்து இருக்கற (O3) படலம். அதோட வேலை என்ன? சூரியன்ல இருந்து வர புற ஊதாக்கதிர் பூமியை தாக்குனா எல்லா ஜீவராசிகளுக்கும் ஆபத்துங்கறதால பாதுகாப்பா இருக்கற படலம். ஆனா அது எப்படி உருவானது?

இயல்பா ரெண்டு ஆக்சிஜன் மூலக்கூறு தான்(O2) வளிமண்டலத்துல இருக்கு. அது கூட எப்படி இன்னொரு ஆக்சிஜன் மூலக்கூறு போய் சேர்ந்து மூன்று மூலக்கூறா மாறி இருக்கும்? அதுக்கு காரணம் புறஊதாக்கதிர்கள்தான்.

Image may contain: text

UV rays தான் ரெண்டு ஆக்சிஜன் மூலக்கூறை உடைச்சு தனித்தனி மூலக்கூறா மாத்துது. அப்படி உடைக்கப்பட்ட ஒற்றை மூலக்கூறு ஆக்சிஜன் ஏற்கனவே இருக்கு இரட்டை மூலக்கூறு ஆக்சிஜனோட சேர்ந்து O3 ஓசோனா மாறுது. இயற்கை எப்படி ஆபத்தான புற ஊதாக்கதிர் மூலமாவே தன்னை காப்பாத்திக்க ஒரு படலத்தை உருவாக்கி வச்சுருக்கு பாருங்க, இப்ப புற ஊதாக்கதிர் வரது நின்னுட்டா இந்த ஓசோன் படலம் உருவாகறது நின்னு தானா காலப்போக்குல கரைஞ்சுரும்.

சும்மா இல்லாம நாமதான் இங்கே அதை ஓட்டை போடற மாதிரியான வாயுக்களை உற்பத்தி பண்ணி அனுப்பிட்டுருக்கோம். அது எப்படி தெரியுங்களா? நாம அனுப்புற குளோரோ புளோரோ கார்பன்ல இருக்க குளோரின் முன்ன பார்த்த அந்த உடைஞ்சுருக்கற ஒத்தை ஆக்சிஜனை, நீ ஒன்னும் ரெட்டையோட சேர்ந்து ஆக்சோஜன் ஆக வேண்டாம், இன்னொரு ஒத்தையோட சேர்ந்து ரெட்டையாகுன்னு ரூட்டை மாத்திரும். அதோட சும்மா இருந்தாதானே? மூன்று மூலக்கூறு ஓசோனையும் என்ன நீங்க பிரியவே மாட்டிங்களான்னு குறுக்க புகுந்து ரெட்டையாவும் ஒத்தையாவும் உடைக்கும். திரும்ப ஒத்தையும் ஒத்தையும்தான் சேரனும்னு கடைசி வரை எல்லா மூலக்கூறையும் ஓசோன் ஆகவிடாம பழையபடி ஆக்சிஜனா மாத்திவிடும்.

Image may contain: text

இது பார்த்தா ஆணவக்கொலை பன்ற சாதி வெறியனுங்க நினைவு வரும். ஒற்றை ஆக்சிஜன் மூலக்கூறான நீ ஒன்னும் உன் மனசுக்கு பிடிச்சவன் கூட சேரக்கூடாது. உன் சாதிக்கார இன்னொரு ஒற்றை ஆக்சிஜன் கூடத்தான் சேரனும்னு சொல்ற மாதிரி தெரியும். முன்னைக்கு இப்ப குறைச்சுக்கிட்டோம். ஓசோன்லயும் ஓரளவுக்கு ஓட்டை அடைஞ்சுக்கிச்சு.

ஓசோனை கெடுக்கற மனிதனுக்குள்ளயும் மாறாத ஒரு சமநிலைக் கணக்கு இருக்கு. இவ்வளவு சுயநலம் பிடிச்ச கூட்டம் இருந்தா இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள்தான் அமைவாங்க. இத்தனை நல்லவன் இருந்தா இத்தனை கெட்டவன் இருப்பான்.

வெறும் எண்ணிக்கையை மட்டும் சொல்லலை. அவனுக்குள்ள இருக்க குணங்களோட அளவுக்கும் ஒரு சமநிலை இருக்கும். சினிமால சொல்லுவாங்களே? ஒரு பவர்புல் வில்லன் கேரக்டரை உருவாக்குனாதான் ஹீரோவ பவர்புல்லா காட்ட முடியும்ங்கற மாதிரிதான். இவ்வளவு நல்ல குணம் இருந்தா இவ்வளவு கொடுர குணம் இருக்கும்னு ஒரு கணக்கு இருக்கு.

நேர்மையா இருக்கனும், திருடக்கூடாது, இலஞ்சம் வாங்க கூடாதுன்னு வாழ்றவங்க கிட்ட செலவுல சிக்கனம், தேவையில்லாத பொருளுக்கு ஆசைப்படாத குணம் மாதிரியான குணங்கள் இருக்கும்ங்ஙற மாதிரி, நேர்மையற்ற, திருடற பழக்கம் இருக்கவங்களுக்கும் மேல சொன்னதுக்கு சமமான எதிர்குணம் இருக்குமாம்.

என்ன குணம்னா வஞ்சம். வஞ்சம்னா முதல்ல பொறாமை. இன்னொருத்தன் ஏதாவது பொருள் வாங்கி இருந்தா பொறுக்காது. உடனே வாங்கனும். வாங்க காசில்லையா? திருடு. முடியலையா? அவன் பொருளை ஏதாவது பண்ணிரு. அவனுக்கும் இருக்க கூடாதுன்னு நினைக்கற வஞ்சம்தான் நேர்மையற்ற திருடர்களின் ஆதாரக்குணம்ங்கறார் வள்ளுவர்.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0288
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு

உரை:
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம்போல், களவுசெய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.