களவென்னும் காரறி வாண்மை

இயக்குனர் பாரதிராஜாவோட கனவுப் படமான “குற்றப் பரம்பரை” வெப் சீரிசா ஆரம்பிக்க இருக்கு. இந்த கதைய படமா எடுக்க பாலா & பாரதிராஜாக்கு இடையே பெரும் போட்டி இருந்த்து. அது மேடைகள்ல சண்டையாவும் வெளிப்பட்டது. உண்மையில் அதெல்லாம் எப்பவோ வந்திருக்க வேண்டிய படைப்புகள்.

Image may contain: 1 person

குற்றப்பரம்பரை நாவல் கூட களவு மட்டுமே தொழிலா வச்சு வாழற ஒரு இனத்தை பத்தி மட்டும்தான் சொல்லும். காவல் பத்தி சொல்லாது. காவல் கோட்டம் நாவல் படிச்சவங்களுக்கு களவுக்கும் காவலுக்குமான தொடர்பு புரியும். அதை அரவான் படத்துல தெளிவா காட்டிருப்பாங்க.

ஒரு ஊருக்கு ஒரு காவல்காரன் வேணும். அது ஒருத்தனாவோ குழுவாவோ இருக்கலாம். அவனோட திறமை களவு நடக்க விடாம தடுக்கறதா இருக்கனும். அவனையும் மீறி ஒருத்தன் திருடிட்டா திருடனவன் காவல்காரன் ஆகிடுவான். இப்படி காவலை பிடிக்கனும்ங்கறதுக்காகவே திருடுவாங்க. அது காவல் கோட்டம்ல தெளிவா சொல்லிருப்பாங்க. களவு இல்லைன்னா காவல் இல்லை. களவு வயித்துல பொறந்த்துதான் காவல்னு.

இந்த புத்தகங்கள், படங்களுக்கு முன்ன இந்த காவல்/களவு பத்தியும் படங்கள் வந்துருக்கு. இராம்கியோட மருதுபாண்டி ஒரு உதாரணம். அந்த படத்துல மெயின்ரோலே ஒரு காவல்காரனா ஊருகிட்ட காவல் கூலி வாங்கிட்டு ஊரை காவல் காக்கும். அது இல்லாம நிறைய படங்கள்ல இந்த ஊர் காவல்காரர்கள் பத்தி ரெபரன்ஸ் உண்டு.

அதே மாதிரி சமீபத்துல வந்த அசுரன் படத்துல களவு பத்தி ஒரு காட்சி வரும். அந்த பன்னி வேட்டை சீனுக்கு முன்னாடி வர குட்டி சீன் அது. ஒரு குழுவா 4 பேர் வயல்ல திருட போவாங்க. இன்னும் சொல்லப்போனா குடும்பமா திருட போறது. அவங்க ஏன் திருடறாங்க, அவங்களுக்கு ஏன் தனுஷ் மரியாதை கொடுப்பாருன்னு அசுரன்ல தெளிவா சொல்லலை.

ஆனா தென்மேற்கு பருவக்காற்று படத்துல அது பத்தி சொல்லிருப்பாங்க. குடும்பத்தோட ஆடு திருடற கூட்டம். அங்கே நிலவற வறட்சி,அதை செய்ய வைக்கும். இன்னும் நல்லா கவனிச்சா அந்த படத்துல விஜய் சேதுபதியோட அப்பா இது மாதிரி களவுக்கு போய்தான் குத்து வாங்கி சாவார். தென் மேற்கு பருவக்காற்றுக்கு குறுக்க மேற்கு தொடர்ச்சி மலை மட்டும் இல்லைன்னா அங்கே இருக்க மக்கள் யாருக்கும் இப்படி திருட வேண்டிய நிலைமை வந்துருக்காதுன்னு சொல்லப்படும். அதுல வர டூயட் கூட “ஏன்டி கள்ளச்சி என்ன தெரியலையா?” ன்னுதான்.

அவன்-இவன் படத்தை எடுத்துக்கோங்க, திருடலைன்னா தெய்வக்குத்தமாயிரும்னு சொல்லுவாங்க. சமுத்திரக்கனி இயக்குன முதல் படம் நெறஞ்ச மனசு் விஜய்காந்த் நடிச்சுருப்பார். அதுலயும் அந்த ஊர் மக்களோட குலத்தொழில் திருட்டுன்னுதான் சொல்லிருக்கும்.

இப்படி வந்த படங்கள் எல்லாமே திருட்டு பத்தி மட்டும்தான் சொல்லி இருக்கு. அந்த இனங்கள் குற்றப் பரம்பரை சட்டத்துல அனுபவிச்ச கொடுரங்களை, கைநாட்டு சட்டத்துல மாட்டிக்கிட்டு பட்ட வேதனையத்தான் பாரதிராஜா எடுக்க போறார்னு நினைக்கறேன். ஒருவேளை அவரும் சாதி பெருமைய எடுத்து வைக்கலாம். பார்ப்போம்.

தென்பருவ காற்று படம் சொல்ற மாதிரி வறட்சி மட்டும்தான் களவுக்கு காரணமா? வறட்சியான பாலை திணை நிலப்பகுதியின் தொழிலே களவுதான்னு சங்க இலக்கியங்கள் சொல்லுது, அதை ஏத்துக்குவோம். ஆனா வறட்சி இல்லாத பசுமையான பகுதிகள்ல நடக்கற திருட்டுக்கு என்ன காரணம்? இப்ப நாட்ல நடக்கற திருட்டுக்குலாம் என்ன காரணம்? வறுமையா? வறுமைல இருக்கவனா நாட்ல அதிகம் திருடறான்?

இல்லை, வறுமைக்காக வேற வழியில்லாம திருடறதுலாம் ரொம்ப கம்மி. இங்கே எல்லாருமே திருடனாகிட்டாங்க. எல்லாருமேன்னா 100% இல்லை. தன்னால திருட முடியும், திருடுனா மட்டும்தான் சம்பாதிக்க முடியும்னு நம்பற எல்லாரும்.

அப்படி திருடுற வகைக்கு எத்தனையோ பேர் இருக்கு. இப்ப ஊழல் செய்யற அரசியல்வாதி திருடன்தான். இஞ்சம் வாங்கற அதிகாரி திருடன்தான். வரி கட்டாம ஏமாத்தற தொழிலதிபரும் திருடன்தான், அதை எப்படின்னு சொல்லித்தர ஆடிட்டரும் திருடன்தான். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

இவங்க எல்லாருக்குமே பொதுவான ஒரு விசயம் இருக்கு. என்ன தெரியுமா? இவங்க எல்லாருமே இதை திருட்டுன்னு நினைக்கறதில்லை. திறமைன்னு நம்பறாங்க. சமூகம் அதை அங்கீகரிச்சு ரொம்ப நாளாச்சு. அரசு வேலைல இருக்க மாப்பிள்ளைய பாக்கறப்ப இலஞ்சம் வாங்காதவனா வேணும்னு எத்தனை பேர் சொல்லுவாங்க?

சரி, திருடாத மக்களும் இருக்காங்க தானே? அவங்க ஏன் இப்படி திறமைன்னு நினைச்சு திருடாம இருக்காங்க? வாய்ப்பு கிடைக்காமலா? திருட முடியாமலா? இப்படில்லாம் இல்லாம எங்கே இருந்தாலும் நேர்மையாத்தான் சம்பாதிக்கனும்னு வாழ்றவங்களும் இருக்காங்க தானே? அவங்களுக்கு அந்த நேர்மைய எது தருது?

வளர்ப்பா? படிப்பா? இதெல்லாம் நேர்மைய கத்து தரக்கூடியவை. தொடர்ந்து நேர்மையா இருக்கனும்னு ஒருத்தன் நினைக்கனும்னா அவனுக்கு ஒரு நம்பிக்கை வேணும். என்ன நம்பிக்கைன்னா நம்மாள திருடாமலே நல்லபடியா வாழ்ந்துட முடியும்னு. அந்த நம்பிக்கை இல்லைன்னா சந்தர்ப்பம் அமையற வரைதான் திருடாம இருப்பான். நம்பிக்கை இருந்தா மட்டுமே எப்பவும் அவன் நேர்மையா இருப்பான்.

இந்த திருடாமலே சம்பாதிச்சு நல்லபடியா வாழமுடியும்னு ஒரு நம்பிக்கைய சொல்றமே, அதை வள்ளுவர் ஆற்றல்னு சொல்றார்.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:287
களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்

உரை
களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.