களவெண்ணா அன்புடையார்

சமீபத்துல “ஜீவி”ன்னு ஒரு படம் வந்தது. “எட்டுத் தோட்டாக்கள்” பட தயாரிப்பாளர் & நாயகனோடது , படம் அருமையா இருந்தது, முக்கோண விதியை பத்தி படம் எடுத்தது தமிழ்ல இதான் முதல் முறைன்னு நினைக்கறேன். ஒரே மாதிரியான சம்பவங்கள் அடுத்தடுத்த சந்ததியை ஆக்கிரமிக்கும். அது தொடராம இருக்கணும்னா ஒரு மையப்புள்ளியில் முழுமை பெறணும்  இதான் முக்கோண விதி.

எனக்கு தெரிஞ்சு முக்கோண விதிக்கு சரியான உதாரணம் டெல்லி சுல்தான்கள் வரலாறுல இருக்கு. இதை முக்கோணம்னும் சொல்லலாம், சங்கிலித் தொடர்னும் சொல்லலாம்.

முதல் முதல்ல முகமது கஜினி தான் வென்ற பகுதிகளை நிர்வகிக்க தன்னோட அடிமைகள்ல ஒருத்தரான “குத்புதின் ஐபக்”அப்படிங்கறவரை சுல்தானா நியமிச்சுட்டு போறார், அப்போலருந்து டெல்லில அடிமை வம்சத்தோட ஆட்சி நடக்குது, அதுல கடைசியா வர மன்னர் கெய்கூபாத், அவருக்கு எதிரா நடக்கப்படற கலவரத்துல தனக்கு கீழ வேலை பார்க்கற சிப்பாயிடம் உதை வாங்கியே உயிரை விடுகிறார், அடுத்து ஆட்சிக்கு கலவரத்துக்கு காரணமான கில்ஜி வம்சம் வருகிறது. முதல் சுல்தான் ஜலாலுதின் கில்ஜி. முக்கோணத்தின் முதல் பக்கம்.

தொடர்ச்சியான போர் வெற்றிகளால் சுல்தான் ஜாலாலுதினின் மனம் கவர்ந்து, படைத் தளபதியாகி, சுல்தானின் மகளையும் மணந்து, அயோத்தியை பரிசாகப் பெற்று, பெரும்படை திரட்டி, சுல்தானிடம் அறிவிக்காமலே போரெடுத்து சென்று பல நகரங்களை வென்று தன் பலத்தை அதிகரித்து, சமயம் பார்த்து தன்னை நம்பிய மாமனார்/சுல்தான் ஜலாலுதின் கில்ஜியை முதுகில் குத்திக் கொல்கிறார் அடுத்த சுல்தானாக பதவியேற்ற அலாவுதின் கில்ஜி. முக்கோணத்தின் இரண்டாம் பக்கம்.

தன்னை விலைக்கு வாங்கி வந்த சுல்தான் அலாவுதின் கில்ஜிக்கு தேக சுகத்தை தந்தது மட்டுமில்லாமல், தனது போர் திறமையை காட்டுவதற்காக மாலிக் கபூர்(எஜமானனின் அடிமை) என்ற பட்டத்துடன் படைத் தளபதியாகி, செல்லும் இடமெல்லாம் வெற்றி பெற்றதுடன் பெண்ணும் பொண்ணும் பொருளுமாய் சூரையாடி வந்து நற்பெயர் பெறுகிறான் அந்த அடிமை, மேக நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையிலே படுத்து கிடந்த சுல்தான் அலாவுதின் கில்ஜிக்கு குழந்தைக்கு மருந்து கொடுப்பது போல் “இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்” என்று நஞ்சை கொடுத்து கொல்கிறான், பெயருக்கு ஒரு குழந்தையை அரியனையில் அமர்த்திவிட்டு அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொள்கிறான். முக்கோணத்தின் மூன்றாவது பக்கம்.

இன்னும் முடிந்து விடவில்லை, அதிகாரத்தை வைத்து அரச குடும்பத்தை சார்ந்த அனைவரையும் கொல்ல பார்த்த அடிமை மாலிக் கபூரை, 35 நாட்களுக்கு பிறகு புத்தி வந்த அரச வீரர்கள் வெட்டிக் கொள்கிறார்கள். ஆட்சி, அதிகாரம் மீண்டும் கில்ஜி வம்சத்திற்கு செல்கிறது. மீண்டும் முக்கோணத்தின் முதல் பக்கம். சுல்தானாக முபாரக் கில்ஜி. மீண்டும் கில்ஜி வம்சத்து சுல்தானை கொல்வது அவரிடம் அடிமையாக இருக்கும் குஸ்ரூகான். எப்படி முக்கோண விதி?

இந்த தொடர்பியல் முக்கோண வரலாற்றில் கொல்லப்பட்ட சுல்தான்கள் அனைவரும் செய்த பொதுவான தவறு ஒன்று இருக்கிறது. இவர்கள் யாரும் தாங்கள் வகிக்கும் சுல்தான் பதவியை வெறும் அதிகாரமாக மட்டும் தான் பார்த்தார்கள், அதாவது அதை போர் மூலமாகத்தான் இழக்க நேரிடும் என்று நம்பினார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு சொத்து. அதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருடக்கூடும்.

இந்த டெல்லி சுல்தான்கள் கதையில் இன்னொரு சுவாரசியம் கவனித்தீர்களா? ஒவ்வொருவருமே நம்பிக்கை துரோகம் செய்துதான் திருடித்தான் அந்த பதவிக்கு வந்திருக்கிறார்கள், ஆனால் தனக்கு கீழே இருப்பவன் திருட மாட்டான், துரோகம் செய்ய மாட்டான் என நம்பி இருக்கிறார்கள்.

களவு என்றால் இரவோடு இரவாக வந்து, கன்னம் வைத்து உடும்பில் கயிறு போட்டு, ஏறி வந்து, பொருளை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு செல்வது மட்டுமல்ல, நமக்கு சொந்தமானது எதுவாயினும் அதை நம் விருப்பமின்றி எடுத்துக் கொள்வது அனைத்துமே களவுதான். அதை செய்ய வெளியில் இருந்துதான் ஆள் வர வேண்டும் என்பதில்லை. நம்முடனே இருக்கும் நம்பிக்கையானவர்கள்தான் அதிகம் அதைத் திருடுவார்கள்.

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் நம்முடன் இருப்பதே அண்ணன் எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும்? என்பதை எதிர்பார்த்துத்தான், சாகவில்லை என்றால் சாகடிப்பார்கள். எல்லாரும் அப்படித்தானா என்றால் இல்லை, பிற உயிர்களை மதிக்கும் அருள் உள்ளம் கொண்டவர்கள், பதவி, அதிகாரம், சொத்து சுகங்களை விட அன்பை பெரிதாக எண்ணுபவர்கள் அந்தக் காரியத்தில் ஈடுபடுவதில்லை.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0285

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

உரை:

அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.