களவின்கண் கன்றிய காதலின் விளைவு

1981, கர்நாடகால, நஞ்சங்கோடுன்னு ஒரு தாலுகா, அது கேரளா பார்டங்கறதால அங்கே கன்னடர்களோட மலையாளிகளும் சமமா வாழ்ந்துட்டுருந்தாங்க. அப்போதைய காலக்கட்டத்துல அந்த வட்டாரம் முழுக்க சலிம் பாஷாங்கறவர்தான் பெரிய தலைக்கட்டா இருந்தார். அவர் ஒன்னும் அந்த ஊரை சேர்ந்த பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. 3 வருசத்துக்கு முன்ன பஞ்சம் பிழைக்கறதுக்காக பொண்டாட்டி பையனோட அந்த ஊருக்கு வந்தவர். பாயாசக்கடைதான் அந்த ஊர்ல அவர் செஞ்ச முதல் தொழில்

ஆனா அந்த 3 வருசத்துல அவரோட சொத்து மதிப்பு அங்க இருந்த பரம்பரை பணக்காரங்களையும் தாண்டி இருந்தது. 117 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து புகையிலை விவசாயம், அது இல்லாம மற்றவங்க நிலங்கள்ல இருந்து கிடைக்கற புகையிலையும் வியாபாரம் பண்ணி தரது, அது இல்லாம ஒரு பெட்ரோல் பங்க், ரெண்டு ஹோட்டம், ரெண்டு மெஸ், ஒரு சூப்பர் மார்க்கெட். எல்லாத்தையும் சேர்த்தா மதிப்பு பல இலட்சங்கள் தேறும்.

3 வருசத்துக்கு முன்ன 10000 போட்டு ஆரம்பிச்ச தொழில் இப்ப மாசமான இலட்சத்துல இலாபம் கொடுத்துட்டு இருக்கு. அது மட்டுமில்லாம அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் கண் கண்ட தெய்வம், வேலைக்காரங்களை கண்ணியமா நடத்தறது, கேக்கறப்ப முன்பணம் கொடுக்கறது, மத்த இடத்தை விட அதிக சம்பளம்னு எல்லாரும் மதிக்கற மாதிரியான வாழ்க்கை.

அப்ப அந்த வருசம் இடைத்தேர்தல் வருது, அங்க முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி குண்டுராவ், ஆளுங்கட்சி மேல மக்கள் அதிருப்தில இருக்காங்கன்னு எப்படியாவது இந்த தேர்தல்ல ஜெயிச்சுடனும்னு ஜனதா கட்சி ஹெக்டே வெற்றி வேட்பாளரை தேட எல்லாரும் சலிம்பாஷாவத்தான் கை காட்டறாங்க. பேசி ஒப்புதல் வாங்கி, அந்த ஊரை சார்ந்தவன்னு சான்றிதழ் தயாரிச்சு நாமினேசன்ல கையெழுத்து போட்டாச்சு.

காங்கிரஸ் முதலமைச்சர் குண்டுராவ் பார்க்க விரும்பறதா சொல்லி சலீம்பாஷாவ கூட்டி போறாங்க, நம்ம கட்சிலயே நின்னு ஜெயிச்சு வாங்கன்னு முதல்வர் கேட்க, இல்லைங்க வாக்கு கொடுத்துட்டேன், நாமினேசன்ல கையெழுத்தும் போட்டாச்சுங்கறார் சலீம்.

சரி, நாளைக்கு சபைல ஒரு ஓட்டு தேவைப்படறப்ப ஆதரவு கொடுப்பிங்களான்னு கேக்கறார் முதல்வர். கண்டிப்பா தரேன்னு சலீம் சொல்ல, எங்க கட்சிக்காரங்களுக்கு வேண்டியதை பண்ணி தருவிங்களான்னு கேக்க அதுக்கும் ஒத்துக்கறார், சந்தேகப்பட்ட முதல்வர் அந்த தொகுதியை சேர்ந்த தன்னோட கட்சிக்காரனை பார்க்க

“சலீம்பாஷா வாக்கு கொடுத்தா தாராளமா நம்பலாம்”னு சொல்றார். எதிர்கட்சிகாரனே பில்டப் பன்ற அளவுக்கான கேரக்டர். அப்படியே முதலமைச்சரோட ராணுவ ஹெலிகாப்டர்ல பறந்து பேசிட்டு வந்ததும் ஜனதா கட்சிக்காரங்களுக்கு பயம் வந்துருது. எங்கே முதலமைச்சர் பேச்சைக் கேட்டு நாமினேஷன் பன்னாம போயிருவாரோன்னு, அதுக்காக கட்சி தலைவர் ஹெக்டேவ பார்க்க கூட்டி போறாங்க. ஹெக்டேவும் கட்டுக் கட்டா பணம் எடுத்து கொடுத்து எப்படியாவது ஜெயிச்சுருங்கன்னு சொல்லி அனுப்பறார்.

மொத்தம் 27000 வாக்காளர்கள் இருக்க சின்ன தொகுதி. எப்படியும் சலீம் பாஷாதான் ஜெயிக்கப் போறார்னு இருக்கறப்ப நாமினேஷனுக்கு முன்னாடி நாள் அவருக்கு பின்னாடி இருந்து “மணியன்பிள்ளை”ண்னு ஒரு குரல். பழைய பேரை மறக்காத முன்னாள் திருடன் மணியன் பிள்ளையும் இந்நாள் சலீம்பாஷாவும் திரும்பி பார்க்க, போலிஸ் தோள் மேல கைப் போடுது.

“என் கைல ரொக்கமா 3 இலட்சம் இருக்கு, கொடுத்துடறேன், 10 நாள் கழிச்சு வந்திங்கன்னா மிச்சம் 7 இலட்சம் தரேன், என்னை விட்டுடுங்க, உங்களுக்கு என்ன வேணா பண்ணித் தரேன்”ண்னு மணியன் கெஞ்சுனாலும், இப்ப விட்டா மணியன் நிரந்தரமா சலீம்பாஷாவா மாறிடுவான்னு போலிஸ் கைது பண்ணுது.

கைது பண்றப்ப மணியனோட சொத்து மதிப்பு ஒரு கோடிக்கும் மேல, வியாபாரத்துல மட்டும் 98 இலட்சம் புழங்கிட்டு இருக்கு. அத்தனையும் போலிஸ் முடக்கிருச்சு. நல்லா கவனிங்க, அந்த வருசம் அரசாங்கத்துல வேலை பார்க்கற ஒரு குமாஸ்தாவோட சம்பளம் 500 ரூபாய்தான். கோடிஸ்வரன் ஆனதுமில்லாம விட்டுருந்தா ஜெயிச்சு அமைச்சர் கூட ஆகிருக்க வேண்டிய கடைசி நிமிசத்துல மணியனை பின்னோக்கி இழுத்தது எது?

இங்கே புகையிலை வியாபாரம் துவங்க முதல் முதல்ல 10000 தேவைப்பட்டுச்சுன்னு கேரளால ஒரு வீட்டுல திருடிட்டு வந்த 40 சவரன் நகைகள்தான், விடாம துரத்திட்டு வந்து பாம்பு மாதிரி கொத்தி, பரம்பதம் மாதிரி ஆரம்பிச்ச இடத்துக்கே கீழ இழுத்து விட்டது.

அந்த 10000 அ வேற வழில புரட்டிருக்கலாம், இருந்தாலும் திருடனுங்குங்கற ஆசைக்காக திருடப் போய், அதை வச்சு தன்னோட உழைப்பினால் கோடிக்கணக்குல சம்பாதிச்ச சொத்தையும் சேர்த்து இழக்கற மாதிரி ஆகிருச்சு.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்

உரை

களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலின் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது தொலையாத துன்பத்தைத் தரும்.

திருடன் மணியன் பிள்ளை – ஜீ.ஆர்.இந்துகோபாலன் எழுதி தமிழில் குளச்சல் மூ யூசுப் மொழிப்பெயர்த்துள்ளா மணியன் பிள்ளை என்ற முன்னாள் திருடரின் சுயசரிதத்தில் இருந்து ஒரு அத்தியாயத்தை எடுத்து சுருக்கி பகிர்ந்திருக்கிறேன். கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய நூலாகவே இதை கருதுகிறேன்.