ஆக்கம் அளவிறந்துக் கெடும்

ஆசிரியர்ன்னு நிறைய பேரை கடந்து வந்துருப்போம், சாக்ரடிஸ் சொல்ற மாதிரி “எதிரில் வரும் எல்லாரும் ஆசிரியர்தான், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்ற இருக்கும்”கறது வேற விஷயம், பள்ளியிலயோ கல்லூரியிலயோ சம்பளம் வாங்கிட்டு நமக்கு பாடம் நடத்தி, அட்டெண்டென்ஸ் எடுக்கறவங்கத்தான் ஆசிரியர்னு வச்சுப்போம். அதுல யாருக்கு ரொம்ப பயப்படுவோம்? பள்ளிக்கூடங்கள்ல அடிக்கற வாத்தியார்னு சொல்லுவோம், ஆனா அடிக்கறவங்களுக்கு மட்டுமா பயப்படுவோம்? எல்லா ஆசிரியர்களுமா அடிக்கப்போறாங்க? கவனமா பார்த்தா யார் யாரெல்லாம் நேர்மையா இருக்காங்களோ அவங்களை பார்த்துத்தான் பயப்படுவோம். அவங்களைத்தான் பிடிக்கும், அவங்களைத்தான் கடைசி வரை மறக்காம இருப்போம்.

ஆசிரியர் தொழிலை பொறுத்த வரை நேர்மைங்கறதுல முதல் விசயம் தங்களோட பாடம் தொடர்பான திறமையை வளர்த்தல், ரெண்டாவது அதை மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், ரெண்டாவதா சொன்ன பயிற்றுவித்தல்ல கூடுதலா ஒரு வார்த்தைய பயன்படுத்தனும். அனைத்து மாணவர்களுக்கும் சமமா பாடம் போய் சேர்ர மாதிரி சொல்லித் தரது, ஆசிரியர் பணி மட்டுமில்லை, எல்லா துறைகள்லயுமே நேர்மைன்னு சொன்னாலே இந்த பாரபட்சமற்ற அணுகுமுறைய சொல்லனும். அதாவது வேண்டியவங்களுக்கு ஒரு மாதிரி, வேண்டாதவங்களுக்கு ஒரு மாதிரின்னு நடந்துக்க கூடாது. அரசு அலுவலகங்களை உதாரணமா சொல்லனும்னா இலஞ்சம் கொடுக்கறவங்களுக்கு ஒரு மாதிரியும் சாதாரண பொதுமக்கள்கிட்ட ஒருமாதிரியும் வேலை செஞ்சுத் தரக்கூடாது. அதெல்லாம் நடக்கற கதையில்லைன்னு சொன்னாலும் அப்படித்தானே இருக்கனும். ஒவ்வொரு விசயத்துக்கும் எப்படி இருக்கனுங்கறது திரும்ப திரும்ப சொல்லித்தானே ஆகனும்.

சரி, இந்த மாதிரி நேர்மையா நடந்துக்கற, அதாவது பாரபட்சம் இல்லாத விசயம் இருக்கா? என்னைக் கேட்டா கடவுளைக் கூட சொல்ல முடியாது. அத்திவரதரை பார்க்கக் கூட ஒரு கூட்டம் விடியற்காலைல போய் இரவுதான் பார்க்க முடிஞ்சது, சிலரால நேரா போய் பார்க்க முடியுது. எல்லாருமே சமம்னு பார்க்கற இடம் ஏதாவது இருக்கா? மனிதனா உருவாக்குன எந்த இடத்துலயும் இந்த சமத்துவம் இருக்காது. கடவுளோ, கடவுள் இருக்க இடமோ மனிதனால உருவாக்கப் பட்டதுதானே? அப்படிப்பட்ட எல்லா இடத்துலயும் பணமும் அதிகாரமும் தன்னோட பலத்தை காட்டத்தான் செய்யும்.

இந்த விசயத்துல தான் இயற்கை மேல ஒரு பெரிய மதிப்பு உருவாகும். அது அரவணைக்கறதுலயும் சரிஅழிக்கறதுலயும் சரி எந்த பாரபட்சமும் காட்டாது.

பொன்னியின் செல்வன்ல வந்தயத்தேவன் ஒரு இடத்துல குந்தவையோட அழகை பத்தி சொல்லப் போய் பழவேட்டரையர் கோபப்பட்டு “உன் தகுதிக்கு இளவரசியின் அழகை இரசிக்கிறாயா?” என்று கேட்க “என்ன செய்வது? மாட மாளிகையில் வசிப்போருக்கும் மண்குடிசையில் வசிப்போருக்கும் சந்திரன் ஒன்றாகத்தானே அழகாய் தெரிகிறது?” என்று சமாளிப்பார். இயற்கையில் சமத்துவம் அந்த இடத்தில் உணர்த்தப்படும்.

அதே போல் சென்னை வெள்ளத்தை எடுத்துக் கொள்வோமே, சமூக வலைதளங்களில் ஒருவரின் நிலைத்தகவல் வைரலாக அப்போது சுற்றியது.

“நான் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர், அமெரிக்கால இருக்க ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியோட சென்னை பிராஞ்ச்-ல வேலை பார்க்கறேன்.

மாசம் 1.5 லட்சம் சம்பளம் வாங்கறேன். என்கிட்ட 2 பெரிய பேங்கோட கிரிடிட் கார்ட் இருக்கு. ரெண்டுமே 1 லட்சம் லிமிட்டேசன்…

அது இல்லாம என் சேவிங் அக்கவுண்ட்-ல 50 ஆயிரம் வச்சுருக்கேன், இப்ப கையில கூட 10 ஆயிரம் பணமா இருக்கு.

சென்னைலயே சொந்தமா ஃபிளாட் வாங்கி இருக்கேன், ட்ருபிள் பெட் ரூம், அதுவும் சிட்டி சென்டர்ல, மதிப்பு வாங்கும் போதே 1.5 கோடி.

இவ்வளவும் இருந்தும்
அய்யா, இப்ப நீங்க போடப் போற சாப்பாட்டு பொட்டளத்தை நம்பித்தான் நான் இருக்கேங்கறத யோசிக்கும் போது

எனக்கு வாழ்க்கைன்னா என்னான்னு புரிஞ்சுருச்சுங்கய்யா…”

எப்படி இயற்கை பாரபட்சம் பார்க்காம அடிச்சுருக்கு பாருங்க? ஆமா எதுக்கு இயற்கை அடிக்கனும்? அதுகிட்ட இருந்து திருடுனா வேற என்ன செய்யும்? இயற்கைக்குன்னு ஒரு சம நிலை இருக்கு, ஒரு வழியா கொடுக்கும், ஒரு வழியா எடுத்துக்கும், எதை சொல்றன்னா நாம வளங்கள்னு சொல்ற விசயங்களைத்தான், அப்படிப்பட்டத வளர்ச்சிங்கற பேர்ல நாம திருடிக்கிட்டா? இப்ப சென்னை மக்களையே எடுத்துக்கோங்க, ஏரி போன்ற நீர் நிலைகளுக்கான இடத்தை திருடறது, அது பத்தாம நீர் போற பாதையை ஆக்கிரமிச்சு கட்டிடம் கட்டறது, அதுவும் திருட்டுத்தானே? பார்க்கறதுக்கு ஊர் நல்லா வளர்ந்து முன்னேறிக்கிட்டே போற மாதிரித்தான் தெரியும். ஒரே நாள்ல மொத்தமா உள்ளதும் சேர்ந்து போயிரும்.

பாரபட்சம் காட்டாத நேர்மையான இயற்கைகிட்ட திருடுனாவே இப்படினா, இருக்கறதுலயே மோசமான உயிரினமன மனுசங்கக்கிட்ட ஒருத்தருக்கொருத்தர் திருடி சேர்த்துக்கிட்டா என்னாகும்? அதுவும் ஆரம்பத்துல நல்லாருந்து ஒட்டுக்கா அழிஞ்சுத்தான் போகும்.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

உரை:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும்.