உள்ளத்தால் உள்ளலும் தீதே

வாரணம் ஆயிரம் படத்துல ஒரு சின்ன சீன் வரும், சின்ன வயசு சூர்யா ஒருத்தங்கிட்ட அடி வாங்கிட்டு வந்துருப்பார், அப்புறம் கண்ணாடி முன்னாடி நின்னு அடுத்த முறை அவனை பார்க்கறப்ப எப்படி அடிக்கனும்னு செஞ்சு பார்ப்பார். இப்படி ஒரு பஞ்ச் வச்சுட்டு, இப்படி குனிஞ்சு இன்னொரு பஞ்ச் அப்படி இப்படின்னு, அப்புறம் அவங்கப்பா சூர்யா வந்து பண்ண அட்வைஸ்லாம் எல்லாரும் பார்த்துருப்போம். இந்த மாதிரி பழக்கம் இல்லாதவங்களே இருக்க மாட்டாங்கங்கறது என்னோட அபிப்பிராயம்.

அதாவது சண்டை போடறதுக்கு முன்ன அதை செஞ்சு பார்க்கறத மட்டும் சொல்லலை, சில விசயங்களை செய்யறதுக்கு முன்ன அதை ஒரு தடவை மனசுக்குள்ள ஓட்டிப் பார்க்கறது, எப்பப்பலாம் அதை செய்வோம்னா இண்டர்வியுக்கு போறப்ப, பிடிச்ச பொண்ணுக்கிட்ட பேச போறப்ப (பிடிச்ச பசங்ககிட்ட பேசப் போறப்ப பொண்ணுங்களுக்கு எப்படி இருக்கும்னு அவங்கதான் சொல்லனும்) முக்கியமா காலேஜ் டைம்ல ஏதாவது தப்பு பண்ணி மாட்டி விசாரனைக்கு போறதுக்கு முன்ன செஞ்சு பார்த்துக்கற ரிகர்சல்தான் சுவாரசியமா இருக்கும்.

இப்படி மனசுக்குள்ள ஒரு சம்பவத்தை ஓட்டிப் பார்க்கறதுங்கறது நடக்கப் போறத விட நடந்து முடிஞ்ச விசயங்களுக்குத்தான் அதிகமா இருக்கும். ஒருமுறை நல்லா யோசிச்சு பாருங்க, உங்க வாழ்க்கைல அதிகம் உங்க மனசுல வந்து போன சம்பவங்கள் நீங்கள் தோற்ற, அவமானப்பட்ட, மாற்ற நினைக்கும் சம்பவங்களாகத்தான் இருக்கும். நீங்களே விரும்பாவிட்டாலும் அவைதான் திரும்ப திரும்ப மனதிற்குள் வந்து போகும்.

“அன்னைக்கு மட்டும் ஹெல்மெட் போட்டு போயிருந்தா?”

“அவ கேட்டப்பவே ஓகே சொல்லிருந்தா?”

“அந்த கேள்வியை இன்னொரு முறை ரிவிசன் பண்ணிருந்தா?”

“குழந்தைக்கு இருமல் வந்தப்பவே டானிக் கொடுத்துருக்கலாம்”

மேலே சொன்னவையெல்லாம் சாதாரணமாக அனைவரின் வாழ்விலும் திரும்ப ஓட்டிப் பார்க்கும் நிகழ்வுகள். சரவணன் சந்திரன் எழுதிய “வெண்ணிற ஆடை” நூலில் ஒரு கதையில் “அன்னைக்கு மட்டும் வெள்ளை டிரஸ் போடாம இருந்துருந்தா?”ன்னு ஒரு இடத்துல வரும். என்னை ரொம்ப பாதிச்ச இடம் அது. சரி விசயத்துக்கு வருவோம்.

இப்படி மனசானது அது பாட்டுக்கு நாம மறக்க நினைக்கற விசயத்தை ரீவைண்ட் பண்ணிக்கிட்டே இருக்கும். ஒரே சம்பவத்தை வெவ்வேற கோணத்துல இப்படி நடந்துருந்தா எப்படி இருக்கும்னு என யோசிச்சுக்கிட்டே இருக்கும். இது தப்பு, இப்படியே இருக்கறப்பத்தான் நாம கடந்த கால நினைவுகள்ல சிக்கிக்கறது, அதிகம் இந்த காதல் தோல்வி மக்கள் இதுலத்தான் சிக்கிப்பாங்க, பழையதையே நினைச்சு நினைச்சு பார்த்துட்டு இருக்கறது.

எதிர்காலத்தை பத்தி மட்டும் தான் சிந்திக்கனுமான்னா அதிகம் அதுலயும் மாட்டிக்க கூடாது, திட்டமிடலுக்காக சிந்திக்கலாம், ஆனா அதுலயும் நல்லது கெட்டது இருக்கு. ஒவ்வொருத்தரும் மனசுல எதெதுல்லாம் நடக்கனும்னு நினைக்கறாங்கன்னு அவங்களுக்குத்தான் தெரியும், இப்ப நல்லத பார்ப்போம், அதிகம் இந்த மோட்டிவேசனல் ஸ்பீச் கொடுக்கறவங்க என்ன சொல்லிக் கொடுப்பாங்கன்னா நீங்க எதுவாக நினைக்கறிங்களோ அதைப் பத்தி நல்லா கற்பனை பண்ணி பாருங்க, கலெக்டர் ஆனா உங்க ஆபிஸ் டேபுள்ல என்னென்ன இருக்கனும்னு கூட இப்பவே யோசிச்சு திட்டமிடுங்க, இது உங்க குறிக்கோளை நெருங்க ஒரு விதத்துல உதவி பண்ணும், இது மாதிரி.

இப்படி எதிர்காலத்தை பத்தி திட்டமிடறதுல செய்யக்கூடியதுன்னு சிலத சொல்ற மாதிரி, செய்யக் கூடாததும் இருக்கு, அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை உங்களோடதா நினைச்சு மனசுல கற்பனைய வளர்த்துக்க கூடாது,

இந்த பேனா மட்டும் எங்கிட்ட இருந்ததுன்னா,

இந்த கார் மட்டும் நான் ஓட்டுனன்னா,

இந்த வீடு மட்டும் எனக்கு சொந்தமா இருந்ததுன்னா,

இவ மட்டும் எனக்கு கிடைச்சான்னு பட்டியல் போய்கிட்டே இருக்கும், ஆனா அதோட விளைவு எங்க போய் முடியும்னா அதை திருடத்தான் தூண்டும், ஏன்னா நீங்க அது மாதிரி ஒன்னு வேணும்னு நினைக்கலை, அதையே உங்களுக்கு சொந்தமா நினைக்க ஆரம்பிச்சுட்டிங்க, அப்படி நினைக்கறது களவாட வைக்கும், களவு எப்பவும் கை விலங்குலத்தான் முடியும்.

அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:282

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் 
கள்ளத்தால் கள்வேம் எனல் 

உரை:

பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக. 
இது களவு தீதென்றது.