கள்ளாமை காக்கதன் நெஞ்சு

என்னோட பொண்ணு நறுமுகைக்கு அப்ப 4-5 மாசம் இருக்கும், அப்பதான் தவழவே ஆரம்பிச்சுருந்தான்னு நினைக்கறேன். ஒரு நாள் தரையில சப்பனங்கால் போட்டு உட்கார்ந்து காலோட பாதத்துல என்னவோ நோண்டிட்டு இருந்தா, எனக்கு குட்டியா ஒரு உருவம் இப்படி பெரிய மனுச தோரனைல உக்காந்து என்னவோ பன்றத பார்க்கவும் ஏனோ சிரிப்பு வந்துருச்சு, பக்கத்துல இருந்த வீட்டம்மாவ கூப்பிட்டு காட்டுனேன். எங்க 2 பேருக்கும் சிரிப்பு. கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டோம். எங்களை கவனிச்ச நறுமுகை ஏதோ கேலி செய்யறோம்னு புரிஞ்சுக்கிட்டு “ஏய்”ன்னு கத்திட்டு ஓன்னு அழுகை. சமாதானபடுத்திட்டு மனைவிக்கிட்ட கேட்கறேன் “ஒரு வயசு கூட ஆகலையே, இப்பவே இவளுக்கு இவ்வளவு கோபம் வருதே?”ன்னு. கோபம்ங்கற உணர்ச்சி எவ்வளவு சீக்கிரத்துல கத்துக்கப்படுதுன்னு ஆச்சர்யம்.

ஆனா அப்புறமா இன்னொரு விஷயம் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. என்னன்னா கோபம்ங்கறது கூட சாதாரணம்தான், அடிச்சாலோ, கிள்ளுனாலோ, கேட்டது கிடைக்கலைன்னாலோ இயல்பா எல்லா குழந்தைகளுக்கும் வரும். ஆனா நறுமுகை முதல் முறையா கோபப்பட்டது எதுக்குங்கறதுதான் என் சுவாரசியத்தை கூட்டுச்சு. அவ எள்ளலுக்கு எதிரா கோபத்தை வெளிப்படுத்திருக்கா, நாமளே கொஞ்சம் யோசிச்சு பார்ப்போமே, ஒருத்தங்க நம்மளை கேலி செஞ்சா ஏன் உடனே நம்மாள ஏத்துக்க முடியாத அளவுக்கு கோபம் வருது? எப்போலருந்து அந்த பழக்கம் நமக்கு வந்துருக்கும்? நம்ம வீட்ல நம்ம பெத்தவங்க நமக்கோ, இல்லை நாம நம்ம பிள்ளைங்களுக்கோ இதைப் பத்தி சொல்லிக் கொடுக்காமலே இது எப்படி மனிதர்களிடையே விரவி கிடக்கு, சில பேருக்கு கடின தோலா இருந்தா ஒன்னும் செய்யறதுக்கில்லை.

எள்ளல்ங்கறது என்ன மாதிரியானது? நம்மளை பரிகசிச்சு சிரிக்கற ஒரு செயல், அது எப்பப்ப நடக்கும்? நம்ம ஏதாவது தவறு செய்யறப்பத்தான் அதிகம் நடக்கும், உருவகேலியல்லாம் எள்ளல்ல சேர்த்த வேண்டாம், அதெல்லாம் தண்டிக்கப்படவேண்டிய வன்முறைகள். இப்போ ஒரு தேர்வுல பார்த்து எழுதி மாட்டிக்கறோம், மாட்டிக்கிட்டதால கிடைக்க போற அடிய விட, மொத்த வகுப்புக்கும் காட்சி பொருளாகிட்டோம்ங்கறதுதானே நம்மளை அதிகம் பாதிக்கும். எப்பவுமே சொல்லிக்கற வசனம் ஒன்னு இருக்கே, “நல்ல வேளை, யாரும் பார்க்கலை”. நமக்கு எவ்வளவு கேவலம், அவமானம் நடந்திருந்தாலும் அதை யாரும் பார்க்காத பட்சத்தில், வெளிய தெரிஞ்சுடாதுங்கற பட்சத்தில் அதோட தாக்கம் அப்படியே பாதிக்கு மேல குறைஞ்சுருதுங்கறதுதானே உண்மை. அதாவது எப்படின்னா நம்மக்கிட்ட கீழ்மைகள் அது எண்ணங்களோ செயல்களோ இருந்தாலும் அது வெளிய தெரிஞ்சு யாரும் பரிகசிச்சுடக் கூடாதுங்கறதுதானே எள்ளலுக்கு எதிரான பொதுவான மனித மனத்தொட நிலைப்பாடு.

இதுக்கு நேர்மாறா இன்னொன்னு இருக்கு, நம்மக்கிட்ட இருக்க மேன்மையானவைகளை எல்லாரும் பாராட்டனும்னு எதிர்பார்க்கறது, சத்தியமா இது இல்லாதவன் மனுசனே இல்லை, அவன் மகான், அவங்க வேணா சும்மா “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே”ண்னு வாழலாம், சராசரி மனுசன் வாழ்றதே அடுத்தவங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யறதுக்குத்தான். அது நல்லதா கெட்டதாங்கறது ரெண்டாவது, அப்படித்தானே போய்கிட்டு இருக்கு? நான் மாநில அளவுல முதல் மதிப்பெண் வாங்குவேன், ஆனா யாரும் கண்டுக்க மாட்டாங்கன்னா எப்படி இருக்கும்? ஊர்ல பெரிய பணக்காரன், பெரிய அதிகாரி, ஆனா அவனுக்கு ஒருத்தனும் வணக்கம் வைக்கமாட்டான்னா எப்படி இருக்கும்? சுத்தி இருக்கறவங்க கண்டுக்கலைன்னா நம்மால தொடர்ந்து செயல்படவே முடியாதுங்கறதுதானுங்க உண்மை, அப்படியே நின்னு துருப்பிடிச்சுட மாட்டோமா?

இப்படி அடுத்தவங்க தன்னை புகழனும், இல்லை அடுத்தவங்க அளவுக்கு தன்னையும் காட்டிக்கனுங்கறதுக்கான செஞ்சுக்கற பல விசயங்களை கவனிச்சிங்கன்னா அதோட தீவிரம் தெரியும். உதாரணத்துக்கு “வரவு எட்டணா செலவு பத்தணா”ன்னு ஒரு படம். நாசர் நேர்மையா இருப்பார், அவர் மனைவி பசங்களை கான்வெண்ட்ல படிக்க வைக்க நச்சரிச்சு, அதுக்காக இலஞ்சம் வாங்கி, வாழ்க்கையே திசை மாறிடும், இதுல நான் யாரையும் குறை சொல்லலை, காரணத்தை கவனிக்க சொல்றேன். அடுத்தவங்க வாழ்க்கையை பார்த்து ஆசைப்பட்டு, தன்னோட வாழ்க்கைய கெடுத்துக்கிட்டு, எல்லோரும் கேலி பண்ற நிலைமைக்கு ஆளாகறதுதானே அதிகம் நடக்குது?

விஜய் டீவில மகாபாரதம் போட்டப்ப பார்த்தேன், அதுல சூதாட்ட சீன் வரப்ப பொருள் வச்சு ஆடக்கூடாதுன்னு விதிமுறைகளை வகுப்பாங்க, உடனே புகழை வச்சு ஆட ஆரம்பிப்பாங்க, நான் இப்படிப்பட்ட தம்பிகளை உடையவங்கற புகழுடையவன், அதை பணயமா வைக்கறன்னு வச்சு ஆடறது, அதை கவனிக்கறப்ப பொருளுக்கும் புகழுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னு தோணுச்சு, இப்ப உங்ககிட்ட ஒரு கார் இருக்கு, அதே கார் எனக்கு வேணும்னு ஆசைப்பட்டா பொருளுக்கு ஆசைப்படறது, கார் வச்சுருக்கவன்ங்கற பேர் எனக்கும் வேணும்னு ஆசைப்பட்டா உங்க புகழுக்கு ஆசைப்படறது. பொதுவாவே அடுத்தவங்களை பார்த்து சூடு போட்டுக்கறது ஊர் பார்த்து சிரிக்கறதாத்தான் முடியும்.

இப்படி சொன்னா எப்படிங்க? எங்க ஊர்ல ஒருத்தர் முதல்முறையா 4 மாடி வீடு கட்டுனார், நானும் அவர் மாதிரி கட்டனும்னு நினைக்கறது தப்பா? சேச்சே, நான் சொல்ல வர்ரது அதில்லை, பேருக்கும் புகழுக்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவனுக்கு வாழ்க்கை அதே இடத்துலதான் தேங்கிக் கிடக்கும். ஆசைப்படலாம் தப்பில்லை, ஆனா அதுக்கு நேர்மையான வழில போகனும், நீங்களும் வீடு கட்ட நினைக்கறது தப்பில்லை, அதை ஏமாத்தி பிடுங்கிக்க நினைக்க கூடாது. ஒருவேளை அப்படி ஊரை அடிச்சு ஒருத்தன் முன்னேறி இருந்தாலும் ஊர் அவனை போக விட்டு பின்னாடி கேலி பேசி சிரிக்கத்தான் செய்யும், இன்னும் சொல்லப்போனா அவனால ஆபத்து வராதுன்னா நேராவே அசிங்கப்படுத்தும். என்னை அப்படி யாரும் கேலியா பேசிடக்கூடாதுன்னா அடுத்தவன் குடிய கெடுக்க நினைக்கதிங்க, அடுத்தவன் பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாதிங்க.

அதிகாரம்:கள்ளாமை  குறள் எண்:281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

உரை

பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும்