Family plot (1976)- Hitchcock Movie – விமர்சனம்

நம்ம பட்டியலில் இருக்கும் கடைசி படம். படத்தின் தலைப்பை பார்க்கையில் ஏதோ குடும்ப படம் போல இருக்கிறதல்லவா? ஹிட்ச்காக்காவது குடும்ப படம் எடுப்பதாவது என்று நினைக்காதீர்கள். அவர் பல காதல் படங்களையும் குடும்ப சித்திரங்களையும் எடுத்து ஹிட் கொடுத்துள்ளார். நாம் த்ரில்லர் வகை படங்களை மட்டும் வரிசையாக பார்த்து வருவதால் அவற்றை தவிர்த்துள்ளோம். படத்தை பற்றி எதுவும் தெரியாமல் பார்ப்பவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சுவாரசியமான காட்சி கிடைக்கும். படத்தைப் பற்றி தெரிந்துக் கொண்டு பார்த்தாலும் பிடிக்கும் தான். இருந்தாலும் திடிரென எதிர்பாராத காட்சி போல சுவாரசியம் உண்டா?

பெரிதாக ஒன்றுமில்லை. மாயாபஜார் 1995ல் ஊர்வசி ஒரு பெண் சாமியார் வேடம் போட்டு ஊரை ஏமாற்றுவாரே நினைவிருக்கிறதா? மாயம்மா என்று. அதைத்தான் இப்படத்தின் நாயகியும் செய்கிறார். ஆவிகளுடன் பேசக் கூடிய ஸ்பிரிச்சுவலிஸ்ட் தொழில். பெரிய பித்தலாட்டக் காரி. நம்மூர் ஜோதிடக்காரர்கள் போல் நம் பிரச்சனையை நம் வாயாலேயே சொல்ல வைத்து அதற்கு காரணத்தையும் நம்மிடமிருந்தே அறிந்துக் கொண்டு ஆவிகளிடம் பேசுவது போல் மெமெக்ரி செய்து பயங்கரமாக நடித்து ஏமாற்றும் திறமை கொண்டவள். அவளிடம் ஒரு வயது முதிர்ந்த பெரிய குடும்பத்து பெண்மணி சிக்குகிறாள்.

அவள் இரவெல்லாம் சரியாக உறங்குவதில்லை என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு அப்படியே பேசி 40 வருடங்களுக்கு முன் தன் தங்கையின் குழந்தையை தத்துக் கொடுத்ததை சொல்ல வைத்து, அந்த குழந்தை கிடைத்தாள்தான் அதற்கு சேர வேண்டிய சொத்தும் அந்தஸ்தும் கிடைத்தால் தான் இறந்து போன் தங்கையின் ஆத்மா சந்தியடையும் என புழுகி, அந்த வாரிசை கண்டு பிடித்துத் தந்தால் 10000 டாலர் என்று டீலை பேசி முடிக்கிறாள். ஏன் அந்த குழந்தையை தத்துக் கொடுக்கிறார்கள் என கேட்கிறார்களா? “சின்னத்தாயவள் பெற்ற இராசாவே….” கதைதான்.

இந்த டீலைக் குறித்து தன்னுடைய டாக்சி டிரைவர் காதலனுடன் பேசிக் கொண்டே வரும் போது, காருக்கு குறுக்கே வரும் பெண்ணை கேமிரா தொடர்கிறது. அந்தப் பெண் நேரே போலிஸ் ஸ்டேசன் சென்று அங்கு இருப்பவர்களிடம் ஒரு பெரிய டைமண்டை வாங்கிக் கொண்டு ஹெலிகாப்டரில் சென்று தங்களிடம் இருந்த பணயக் கைதியை விடுவிக்கிறார்கள். இதற்கு மாஸ்டர் மைண்டாக இருக்கும் வில்லன் இதை தொடர்ந்து செய்து கொண்டு வந்திருப்பதை காட்சிகள் விளக்குகின்றன. நகரத்தில் முக்கியப் புள்ளிகளைக் கடத்தி அதற்கு பதிலாக அரிய வைரக்கற்களை கேட்டு மிரட்டி வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

என்னடா இது இரண்டு கதையும் வெவ்வேறு விதமாக சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது. என்னவென்றால் கதாநாயகியும் கதாநாயகனும் 10000 டாலருக்காக தேடும் அந்த பெரிய குடும்பத்தின் வாரிசுதான் இந்த கடத்தலில் ஈடுபடும் வில்லன். தன்னை யாராவது மெலிதாக சந்தேகப்படுகிறார்கள் என்று தெரிந்தாலே ஈவு இரக்கமின்றி கொலை செய்து விடுவான். கொடுரமானவன் என்று நினைக்க வேண்டாம். கொலையை கலை போல் இரசித்து செய்பவன். இல்லையென்றால் 15 வயதிலேயே தன் வளர்ப்பு தந்தையையும் தாயையும் வீட்டினுள் அடைத்து வைத்து உயிரோடு கொளுத்தி விட்டு தீவிபத்து என்று கதை கட்டி இருப்பானா? அதிலும் அவன் இப்போது இருப்பது வேறு அடையாளத்தில். பழனியப்பன் எப்படி சித்தார்த் அபிமன்யூவாக கோர்ச் சூட்டில் சுற்றிக் கொண்டிருப்பானோ அப்படி சமூகத்தில் பெரிய மனிதனாக இருப்பவன். போலிசே வந்தால் கூட பதறாமல் அவர்களுக்கு டீ கொடுத்து பேசி அனுப்பும் திறமைசாலி.

கதாநாயகன் சாதாரண டாக்சி டிரைவர் என்று எளிமையாக நினைத்து விடவேண்டாம். 40 வருடத்திற்கு முன்பு கைக்குழந்தையாக காணாமல் போன ஒருவனை கண்டுபிடிக்க வேண்டும், அவனைப் பற்றி எதுவும் தெரியாது. பேர் ஊர் எந்த அடையாளமும் தெரியவில்லை என்றாலும் ஒவ்வொருவராய் விசாரித்து வில்லனை நெருங்குவது சுவாரசியமாய் இருக்கும்.

தான் செய்யும் கடத்தல்களுக்காக போலிசில் பிடித்து கொடுத்து ரிவார்ட் வாங்கத்தான் இவர்கள் இருவரும் தன்னைப் பற்றி விசாரிக்கிறார்கள் என்று தவறாக புரிந்துக் கொள்ளும் வில்லன் அவர்கள் தன்னை நெருங்க விடாமல் தடைகளை ஏற்படுத்திக் கொண்டே வர, அதை வைத்தே அவர்கள் முன்னேற, கொலை செய்ய முடிவெடுக்கும் வில்லனிடம் இருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள்? வில்லனை கண்டுபிடித்து அவனை அவனது குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார்களா? இல்லை வில்லன் முந்திக் கொண்டு அவர்களை கொன்று தனது கடத்தல் தொழிலை தொடர்கிறானா? என்பதெல்லாம் படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். படத்தின் இணைப்பு

தொழில் நுட்பம் பெரிதாக வளராத பொழுது, காரில் போவதைக்  கூட பின்புறம் திரையில் ஓடவிட்டு நிற்கும் காரில் எடுக்கும் காலத்திலேயே இப்படிப்பட்ட திரில்லர் படங்களை எடுத்திருக்கும் ஹிட்ச்காக் மட்டும் இப்போது இருந்திருந்தால் தெறிக்க விட்டுருப்பார். முதலில் மெதுவாக துவங்கி அமைதிப்படை சத்யராஜைப் போல அதற்கு ஆப்போசிட் என்று சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக சீட்டின் நுனிக்கு கொண்டு வரவழைப்பதில் மன்னன். அதிலும் படம் முடிவதற்கு 5 நிமிடம் முன்பு கூட படபடப்பை முடித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் இல்லை. அதிகபட்சம் கடைசி 30 நொடிக்கு முன்பு வரை அந்த படபடப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறார். வெறும் சவுண்ட் எஃபெக்ட்டயும் கிராஃபிக்சையும் வைத்து கேமராவை சுற்ற விட்டு திகிலூட்டும் இயக்குனர்களெல்லாம் முதலில் ஹிட்ச்காக்கிடம் இருந்து பல விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதில் முக்கியமானது, தேவையில்லாமல் எல்லா வேலைகளையும் நான் மட்டும் தான் செய்வேன் என்று நிற்பதில்லை. ஒரு நல்லக் கதையை பிடிப்பது, அது அதிகம் ஹிட்டான நாவல்களில் தான் கிடைக்கிறது, அதை வைத்து தேர்ந்த திரைக்கதை எழுத்தாளரை விட்டு எழுதி வாங்கிக் கொண்டு இயக்கத்தில் மட்டும் தனது மொத்த திறமையை இறக்குவது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். அதற்கென்று திரைக்கதை எழுதமாலெல்லாம் இல்லை. ஆனால் எல்லா படங்களுக்கும் அவரே எழுதவில்லை. மற்றவர்களின் திறமைகளை உபயோகப்படுத்தி இருக்கிறார். அது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு துறையில் 50 வருடம் தொடர்ந்து வெற்றிகளை பெற்றுக் கொண்டே இருப்பது என்பது சாதாரணம் இல்லை. அதிலும் சினிமாவில் தாக்குப்பிடிப்பதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்? உலக சினிமா இரசிகர்கள் என்றெல்லாம் இல்லை. சினிமா பிடிக்கும் என்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹிட்ச்காக் படங்களை பாருங்கள்.