Topaz (1969)- Hitchcock Movie – விமர்சனம்

இரண்டாம் உலகப் போர் பற்றி ஒரளவிற்கு அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். எந்தெந்த நாட்டிற்கு இடையே நடந்தது என்றால் எளிதாக ஜெர்மன்,இத்தாலி,ஜப்பான் ஒரு பக்கமும் பிரிட்டன்,அமெரிக்கா, ரஷ்யா ஒருபக்கமும் இருந்து போர் புரிந்தது என்று சொல்லி விடுவோம். ஆனால் இது நாடுகளுக்கு இடையேயான சண்டை மட்டுமா என்றால் இல்லை. தத்துவங்களுக்கு, கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கம் நாசிசமும் பாசிசமும் மறுபக்கம் முதலாளித்துவமும் கம்யுனிசமும் இருந்தன. போர் முடிந்தது. நாசிசமும் பாசிசமும் அழிக்கப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் முதலாளித்துவத்திற்கும் கம்யுனிசத்திற்கும் யுத்தம் துவங்கியது.

முன்பு போல் வெளிப்படையான யுத்தம் இல்லை. இரகசிய யுத்தம். சண்டையிட மாட்டார்கள். ஆனால் சண்டைக்கு முழு வீச்சில் தயாராகிக் கொண்டே இருப்பார்கள். எந்தெந்த வழியில் எதிரி நாட்டை வீழ்த்த இயலுமோ அத்தனையும் செய்வார்கள். கோல்ட் வார் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இந்த யுத்தத்தில் அமெரிக்காவும் இரஷ்யாவும் தான் பிரதான எதிரிகள். அவர்களின் சித்தாந்தத்துடன் ஒத்துப் போன மற்ற நாடுகள் மேற்கண்ட இரண்டு நாடுகளின் பின் அணி வகுத்தன. என்னடா இவன் ஏதோ படத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். இந்தப் படத்தின் கதை புரிவதற்கு இவையெல்லாம் அடிப்படையாக தெரிந்தெரிக்க வேண்டியவை.

கம்யுனிச நாடான கியுபா ரஷ்யாவுடனும், பிரான்ஸ் அமெரிக்காவுடனும் கை கோர்த்து இருந்தது. இப்போது கதை துவங்குகிறது. கடந்த படத்தில் பார்த்தது போல் இந்த கோல்ட் வார் சமயத்தில் பட முக்கிய தலைவர்களும் அறிவியல் அறிஞர்களும் தங்கள் நாட்டை விட்டு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் தஞ்சம் புகுந்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ரஷ்யாவில் இருந்து ஒரு அதிகாரி அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் தப்பிச் செல்வதில் படம் துவங்குகிறது. அங்கு இருந்து அவரை குடும்பத்துடன் பத்திரமாக தப்ப வைக்கும் அமெரிக்க எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இருக்குமா? இரஷ்யாவின் இராணுவ திட்டங்களைப் பற்றி கேட்க, சில இரகசியங்களுக்கு மேல் தன்னால் சொல்ல முடியாது என்றும் ஆனால் யாருக்கு தெரியும் என்று சொல்ல முடியும் என்று ஒரு ஆளைச் சொல்கிறான். ஆனால் அவன் அமெரிக்காவினால் மகனை இழந்தவன், எக்காரணம் கொண்டும் அமெரிக்காவைச் சார்ந்தவர்களிடம் பேச மாட்டான்.

அந்த நேரத்தில் பிரஞ்சு நாட்டைச் சார்ந்த ஒரு உளவாளி தன் மனைவி, மகள், மருமகனுடன் நியுயார்க்கிற்கு வருகிறான். அவனை உதவச் சொல்லி அமெரிக்க உளவு நிறுவனம் கேட்கிறது. வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டு தனது நண்பனை களமிறக்கி வெற்றிகரமாக இரகசியங்களை களவாடுகிறான். ஆனால் அவன் முகம் அங்கு இருக்கும் ஒருவனாம் அடையாளம் பார்க்கப்பட்டு விடுகிறது. அதொடு வேலை முடிந்தது என்று கிளம்பலாம் என்றால் ரஷ்யாவின் திட்டம் கொடுரமாக தெரியவும் அதனைத் தொடர்ந்த உளவு வேலைக்கும் இறங்குகிறான்.

இரஷ்யா கியுபாவில் ஏவுகனைகளை இறக்கி, அமெரிக்காவைத் தாக்க தயாராக இருக்க திட்டமிடுகிறது என்று தெரிந்தாலும் சரியான ஆதாரம் வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள கியுபாவிற்குச் செல்கிறான். அங்கு அவனுக்கு காதலியாவும் உளவாளியாகவும் இருக்கும் கைம்பெண் ஒருத்தி இருக்கிறாள். அவள் கியுபா இராணுவ அதிகாரியின் காதலியும் கூட. அவள் உதவியுடன் சில புகைப்படங்களை எடுக்கிறான். ஆனால் மாட்டிக் கொள்கிறான். அந்தக் காதலி என்ன அழகு தெரியுமா? அதுவரை போனை நோண்டிக் கொண்டே பார்த்தவன் அவள் வந்தபின் தான் ஆர்வமாக பார்த்தேன்.

கியுபாவிலிருந்து ஒருவழியாக ஆதாரத்துடன் தப்பினாலும் இப்போது இன்னொரு பிரச்சனை முளைக்கிறது. பிரான்சு அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்காவிற்கு ஆதரவாக கியுபாவில் சென்று உளவு வேலை பார்த்தது அவனது உயரதிகாரிகளுக்கு தெரிந்து விசாரிக்க அழைக்கிறார்கள். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை, நடந்ததை சொல்லி விடலாம். ஆனால் இவன் எப்படி பிரான்சு உளவாளியாக இருந்து அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுகிறானோ அதேபோல் அவனது துறையில் இரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்படும் இரகசிய அமைப்பும் உண்டு. அதன் பெயர் தான் Topiaz. ஆனால் அதில் இருப்பது யார் யார் என்று தெரியாமல் யாரிடம் இரகசியத்தைச் சொன்னாலும் இவ்வளவு கஷ்டமும் வீணாகி விடும். ஆக முதலில் Topiaz இயக்கத்தை பற்றி முழுவதும் தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த வேலையில் இறங்குபவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அனைத்தும் நல்லபடியாக முடிகிறது.

படத்தின் மொத்த கதையையும் சொல்லி விட்டேன். ஆனால் நீங்கள் படத்தை தைரியமாக சுவாரசியமாக பார்க்கலாம். ஏனென்றால் நான் பல ரகசியங்களை மறைத்து விட்டேன். மேலும் ஒவ்வொரு இடத்திலும் எப்படி இரகசியத்தைத் தெரிந்துக் கொள்கிறான், எப்படி மாட்டுகிறான், எப்படி தப்பிக்கிறான், யார் துரோகி என்று எதையும் நான் சொல்லவில்லை. நீங்கள் தைரியமாக பார்க்கலாம்.

படம் நீளம், மெதுவாகத்தான் போகும். அதிகம் ஆக்சனும் கிடையாது. இருந்தும் ஏன் பார்க்க வேண்டும்? கோல்ட் வார் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக பார்க்க வேண்டும். ஹிட்ச்காக் எந்த நாட்டையும் விட்டுக் கொடுக்காமல் உலகம் முழுக்க படத்தை ஓட வைப்பதற்காக பேசிய அரசியலை புரிந்துக் கொள்ள பார்க்க வேண்டும். கியுபாவின் அழகிக்காக பார்க்க வேண்டும்.

இந்தப் படத்தில் நடித்த ஒரு 19 வயதுப் பெண்ணை ஹிட்ச்காக் தனது 65 வயதில் மணந்துக் கொண்டார் என்பது கொசுறு கிசுகிசு.