Torn Curtain (1966)- Hitchcock Movie – விமர்சனம்

ஒவ்வொரு படத்திற்கும் கதை எழுத அமர்கையில் அது துவங்க ஒரு புள்ளி தேவைப்படும். அது எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். படமாக வந்து வெற்றி பெற்ற பிறகு அப்புள்ளியை பலர் கவனிக்காமல் கூட போகலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜெமினி படம் பார்த்திருப்பீர்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் வித்தியாசமான கதை என்று எதுவுமில்லை என்றாலும் அந்தக் கதை எங்கு இருந்து ஆரம்பித்து எழுதப் பட்டுருக்கும் என யூகிக்க முடிகிறதா? படிப்பதை நிறுத்தி விட்டு யோசித்து விட்டு தொடருங்கள்.

இயக்குனர் சரண் தினசரியில் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகள் மாலை நேரக் கல்லூரியில் படிப்பதாக வந்த செய்தியை படித்து அதை மையமாகக் கொண்டு எழுதிய கதைதான் ஜெமினி. எப்படி? ஹிட்ச்காக்கும் அது போல் ஒரு படத்தின் கதையை எழுத வைக்கும் புள்ளிக்காக காத்திருந்தார். அதுவும் சைக்கோ படம் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பின் இரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அப்போது அவரை உண்மையில் நடந்த ஒரு விசயம் ஈர்க்கிறது. அமெரிக்க அறிவியலறிஞர் ஒருவர் தன் மனைவி பிள்ளைகளுடன் ரஷ்யாவில் ஒரு வருடத்திற்கு மேல் தங்கி உளவறிந்து பத்திரமாக திரும்புகிறார். அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது.

மைக்கெல் ஒரு இயற்பியல் அறிஞர், குறிப்பாக ராக்கெட் விவகாரத்தில் புலி. தனது உதவியாளராக இருக்கும் சாராவை காதலிக்கிறான். இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு உரையாற்ற இருவரும் செல்லும் போது திடிரென திட்டம் மாறுகிறது. தான் அவசரமாக ஸ்டாக்ஹோம் செல்ல வேண்டும் என சாராவை வீட்டிற்கு போக சொல்லி விட்டு மைக்கெல் பெர்லின் செல்கிறான். அவன் தன்னிடம் மறைத்து விட்டு இப்படி செல்வதை அறிந்துக் கொண்டு சாராவும் அவனை பின் தொடர்கிறாள். விமானம் அங்கு தரை இறங்கும் போதுதான் தெரிகிறது. அந்த நாட்டு மந்திரி வந்து வரவேற்பு தருமளவிற்கு மைக்கெலின் வரவை அங்கு எதிர்பார்த்திருக்கிறார்கள் என்று.

தனது ஆராய்ச்சிக்கு அமெரிக்காவில் சரியான அங்கிகாரமும் பண உதவியும் கிடைக்காததால் பெரிலினில் தனது ஆராய்ச்சியை தொடர இருப்பதாக மைக்கெல் பத்திரிக்கைகளுக்கு பேட்டி தருகிறான். தனது காதலன் இப்படி தன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்து எதிரி நாட்டுடன் கைகோர்த்திருப்பது சாராவிற்கு வருத்தத்தை தந்தாலும் அவன் போகும் வழியில் பின் தொடர சம்மதிக்கிறாள். ஆனால் காட்சி மாறுகிறது. மைக்கெல் அங்கு ஒரு விவசாயியை சந்திக்க செல்கிறான். அதுவும் யாருக்கும் தெரியாமல், தனது மெய்காப்பாளனை ஏமாற்றி விட்டு செல்கிறான்.

அப்போதுதான் அவன் அமெரிக்காவிற்கு துரோகம் செய்வது போல் வந்து, பெர்லின் இரகசியத்தை தெரிந்துக் கொண்டு செல்லவிருக்கிறான் என்பது நமக்கு புரிகிறது. இரகசியங்களைத் தெரிந்துக் கொண்ட பின் அங்கிருந்து தப்பிக்க உதவ ஒரு அமைப்பு இருக்கிறது . அதன் பெயர் π. ஆம் கணிதத்தில் உபயோகிப்பதுதான். அதைச் சார்ந்தவர் தான் அந்த விவசாயி. எதிர்பாராத விதமாக தன் காதலியும் இங்கு வந்து மாட்டிக் கொண்டதால் இரண்டு பேர் தப்பித்துப் போக ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறான்.

அவன் எதிர்பாராத விதமாக அவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவனது மெய்காப்பாளன் வந்து சேர, மைக்கெலின் இரட்டை வேடத்தைப் புரிந்துக் கொண்டு போலிசிற்கு தகவல் தர முயல்கிறான். வேறு வழியில்லாமல் அவனைக் கொல்ல நேர்கிறது. யாருக்கும் சந்தேகம் வராத படி தன் உளவு வேலையை தொடர்கிறான்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் இரகசியத்தை தெரிந்துக் கொள்ள பயன்படுத்தும் உத்திதான். கல்லூரியில் லேப் தேர்விற்கு மாணவர்களைக் கேள்வி கேட்டு தனியாக மார்க் தர வேண்டும். அவன் செய்த எக்ஸ்பெரிமண்ட் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் தான் கேள்வி கேட்க இயலும். அதற்காகவே தேர்விற்கு முதல் நாள் மாணவர்களைப் போல் ஆசிரியர்களும் படித்து விட்டு வருவார்கள். சுருக்கமாக சொல்வதென்றான் பதில் சொல்ல தேவைப்படுவதை விட கேள்வி கேட்க அதிக அறிவு தேவைப்படும். தன்னிடமிருந்து இரகசியத்தை தெரிந்துக் கொள்ள கேட்கபடும் கேள்விகளில் இருந்தே அவர்களின் இரகசியத்தை மைக்கெல் தெரிந்துக் கொள்வான்.

அதன் பின்னர் ஒரு மணி நேரத்திற்கு விரட்டல் தான். அதுவரை மெதுவாகப் போகும் படம் அதன் பின் தான் வேகமெடுக்கும். வேறு நாடு, மொழி தெரியாது. உதவுவதற்கு இருக்கும் அமைப்பில் இருப்பது யார் யார் என்றும் தெரியாது, ஆனால் சிக்கினால் கொன்று விடுவார்கள் என்பதால் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். சும்மா சொல்லக் கூடாது, அந்த π அமைப்பு சரியாக திட்டமிட்டு ஒவ்வொரு கட்டமாக அவர்களைத் தப்பிக்க வைக்கும். குறிப்பாக அந்த பேருந்தில் தப்பிக்கும் காட்சியெல்லாம் அக்மார்க் ஹிட்ச்காக்தனம்.

பாட்ஷா எடுத்த பின் சுரேஷ் கிருஷ்னாவிற்கு அதைத் தாண்டித்தான் படமெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதைப் போல அங்கு ஹிட்ச்காக் எடுத்த சைக்கோ படத்திற்கு பின்னர் இரசிகர்கள் மீண்டும் அவரது பழைய சேஸிங்க் டைப் படங்களை பெரிதாக ஆதரிக்கவில்லை. இந்தப் படம் தோல்வியடையவில்லை. ஆனால் பெரிய வெற்றியும் பெறவில்லை. ஹிட்ச்காக் அறுபது வயதை கடந்த பிறகு எடுத்த படம் இது. பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றாலும் சைக்கோ போல் பயமுறுத்தவில்லை என்பது இரசிகர்களின் ஆதங்கம்.

அதே நேரத்தில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்து ஒரு மாதிரி மசாலாத்தன்மையை எதிர்பார்க்க வைத்து விட்டது. தனி மனிதனின் திறமையைக் காட்டுவது போல் படமெடுக்க ஹிட்ச்காக் எப்போதும் விரும்பியதில்லை. அதனால் அதே கதைக்களத்தில் ஒரு சாமானியன் தப்பி வருவதைப் போல் ஹிட்ச்காக் எடுத்த இந்த படத்தை இரசிகர்கள் பெரிதாக அங்கிகரிக்கவில்லை.

ஹிட்ச்காக் படங்கள் பிடிக்கும் என்பவர்கள் தவறவிடக்கூடாத படம் இது.