Marnie (1964)- Hitchcock Movie – விமர்சனம்

ஆரம்ப காலத்தில் ஒரே மாதிரியான படங்களை எடுத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் ஹிட்ச்காக். பட வரிசையை கவனியுங்கள். நார்த் பை நார்த்வெஸ்ட் ஒரு ஆக்சன் படம், அடுத்து வந்த சைக்கோ சைக்கலாஜிக்கல் திரில்லர், அடுத்து பேர்ட்ஸ் மிஸ்டிரிக்கல் திரில்லர், அடுத்து மார்னி ரொமண்டிக் திரில்லர். இவரல்லவா இயக்குனர். இங்கும் இருக்கிறார்களே, ஒரே கதையில் வெவ்வேறு நடிகர்களைப் போட்டு எடுத்துக் கொண்டு. கடைசியாக மணிவண்ணன் தான் இது போல வித்தியாசங்களைத் தொட்டது. கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், அமைதிப் படை என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இருக்காது. சரி படத்திற்கு வருவோம்.

மார்க்கரேட் சுருக்கமாக மார்னி தான் கதை நாயகி, இவளைச் சுற்றித்தான் மொத்த படமும் நகரும். ஒரு மாஸ் ஹீரோவுக்கான இண்ட்ரோ உண்டு. ஒரு அலுவலகத்தில் 10000 டாலர் திருடு போயிருக்கும். திருடிய பெண்ணை போலிசிடம் இந்தப் பக்கம் வர்ணிக்க, அந்தப் பக்கம் அவள் அந்த அடையாளங்களை ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டிருப்பாள், மொத்தமாக வேறு ஆளாக மாறியப் பின் தான் அவள் முகத்தையே காட்டுவார்கள். போலிஸ் விசாரனையின் போது சாதாரணமாக வந்துப் போகும் கதாபாத்திரமாகத்தான் நாயகன் காட்டப்படுவார். பெயர் மார்க். சமீபத்தில் மனைவியை இழந்தவர். அவரிடம் இந்த திருட்டு சம்பவம் சொல்லப்படும்.

அதே நேரத்தில் திருடிய பணத்தை பதுக்கி விட்டு, மார்னி தன் தாயைப் பார்க்கச் செல்வாள். ஆனால் அவள் தாயிடம் அவள் எதிர்பார்க்கும் அரவனைப்பு கிடைக்காது. ஏனோ அவள் தாய் அவளை விலக்கியே வைத்திருப்பாள். வேறு ஊருக்கு வந்து வேலைத் தேடும் மார்னி சந்தர்ப்பவசமாக மார்க்கின் நிறுவனத்திற்கு வருவாள். அவளை அடையாளம் கண்டு கொண்ட மார்க் ஒரு சுவாரசியத்திற்காக அவளை வேலைக்கு எடுத்துக் கொள்ள சொல்வான்.

இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். பழகத் துவங்குவார்கள். ஒருவரை ஒருவர் விரும்புவார்கள். ஆனால் மார்னி இடி,மின்னலைக் கண்டாலும் சிவப்பு நிறத்தைக் கண்டாலும் பெரிதாய் பயம் ஏற்படும், தன்னிலை மறந்து அலறத் துவங்கி விடுவாள். அப்படி ஒரு தருணத்தில் இருவரும் முத்தமிட்டுக் கொள்வார்கள். இப்படி இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டாலும் மார்னி வந்த வேலையை மறக்காமல் லாக்கரில் இருந்து ஒரு பெருந்தொகையை திருடிக் கொண்டு ஊரை விட்டு ஓட்டம் எடுப்பாள்.

ஆனால் மார்க் அவளைத் தேடி கண்டு பிடித்து வந்து விடுவான். இது போல் தனக்கு எல்லாம் தெரியும் என்றும், அவள் திருடிய பணத்திற்கு பதிலாக சொந்தப் பணத்தை வைத்து விட்டு வந்துள்ளதாகக் கூறி, ஒரு மாதிரி அவளை மிரட்டி திருமணம் செய்துக் கொள்வான். தன்னை எந்த ஒரு ஆணும் தொடுவதை அனுமதிக்க மாட்டேன் என முரண்டு பிடிக்கும் மார்னிக்கு மனதளவில் ஏதோ பெரும் பிரச்சனை இருக்கிறது என புரிந்துக் கொள்ளும் மார்க் மன நல மருத்துவரைப் பார்க்கலாம் என்று அழைத்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டாள். அவளுக்காக அது சம்பந்தமான புத்தகங்களைக் கூட அவனே படிக்க ஆரம்பிப்பான்.

என்னதான் மனைவியின் விருப்பமில்லாமல் அவளை தொடக் கூடாது என்று கட்டுப்பாடுடன் இருந்தாலும் மார்க்கால் ஒரிரவு அவனை மீறி வல்லுறவில் ஈடுபடும் சூழல் ஏற்படும். அது மார்னியை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டும்.

இன்னொரு பக்கம் மார்க்கின் முன்னாள் மனைவியின் தங்கை, அவர்கள் வீட்டில் தான் இருப்பாள். மார்க்கை ஒருதலையாக காதலிப்பவளுக்கு மார்னியின் மீது சந்தேகம் வரும். அவளது நடவடிக்கையை பின் தொடர்ந்து ஓரளவு கண்டு பிடித்து விடுவாள். மார்னியை சிக்க வைக்க அவளது பழைய வாழ்க்கையில் தொடர்புள்ள மனிதர்களை வரவழைப்பாள்.

இத்தனை குழப்பங்களையும் தாண்டி மார்க் தனது காதலை மார்னிக்கு புரிய வைத்தானா? அவள் ஏன் திருடுகிறாள்? ஏன் ஆண்களை வெறுக்கிறாள்? அவள் தாய் அவளை விலக்கி வைத்திருக்க காரணமென்ன? அனைத்தியும் படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

என்னடா இது, விஜய் டீவி சீரியல் கதை போல இருக்கிறது என்று யோசிக்க வேண்டாம். ஹிட்ச்காக் கையில் கிடைத்தால் சரவணன் பிணத்தை  மீனாட்சியை தேட வைத்து விடுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டாம் பாதி உண்மையில் வேகமாக போகும். நான் மொத்த கதையையும் சொல்லவில்லை. மேம்போக்காக சொல்லியிருக்கிறேன். படமாக பார்க்கையில் புதிய விசயங்கள் சுவாரசியத்தைத் தரும். தவறாமல் பாருங்கள்.