The Birds (1963)- Hitchcock Movie – விமர்சனம்

சினிமா பார்க்கிறேன் என்று அமர்ந்த பின் படம் முடியும் வரை லாஜிக் பற்றிய சந்தேகங்கள் வரக்கூடாது. படம் முடிந்த பின் வரலாம். இடையில் வந்தால் அவ்வளவுதான், டிக்கெட்டிற்கு கொடுத்த பணம் காலி. சிறந்த உதாரணம் என்றால் சின்னத்தம்பி தான். குஷ்பூ பிறப்பது ஏதோ கொரியரில் வருவதைப் போலத்தான் காட்டியிருப்பார்கள். பிரசவித்த அம்மா இறந்து விட்டதாகவும் சொல்ல மாட்டார்கள், குறைந்த பட்சம் அதற்கு 10 மாதம் முன்பு வரை உயிருடன் இருந்திருக்க வேண்டிய அவர்களது தந்தை பற்றியும் பேச மாட்டார்கள். அவர்கள்தான் பேசவில்லை. படம் பார்த்த எத்தனை பேருக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்? அதுதான் சினிமா. சில இடங்களில் கேள்வி கேட்பதை தவிர்த்தால் சுவாரசியமான அனுபவம் கிடைக்கும். எதற்கு இவ்வளவு தூரம் பேசுகிறேன் என்றால் இந்தப் படத்தில் முக்கியமாக அனைவருக்கும் தோன்றும் கேள்விக்கு பதில் சொல்லப்பட்டு இருக்காது அதனால்தான்.

மெலனி ஒரு வசதியான, நாளிதழ் உரிமையாளரின் மகள். அனைத்துமே விளையாட்டுதான். வாரத்தில் ஒரு நாள் ஏர்போர்ட்டிற்கு சென்று வழி கேட்பவர்களுக்கு தவறான வழி காட்டுவதை வழக்கமாக வைத்திருப்பவள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவளின் இது போன்ற குறும்புகளுக்காக அவள் கொஞ்சம் பிரபலம். ஒருமுறை பறவைகள் விற்பனை நிலையத்திற்கு செல்கிறாள். அன்று வானத்தில் ஏகப்பட்ட பறவைகள் ஒன்று கூடி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. கடலின் நடுவில் புயல் உருவானால் இப்படி நடப்பது வழக்கம் தான் என சொல்லப்படுவதால் அனைவரும் அதை எளிதாக கடந்து விடுகிறார்கள்.

அங்கு லவ் பேர்ட்ஸ் வாங்க வரும் மிட்ச் என்பவனிடம் கடையில் வேலை பார்ப்பவள் போல் நடிக்க, அவன் இவள் யார் என்று தெரிந்துக் கொண்டு விளையாடுகிறான். அவன் சென்ற பின் அவன் மீது உண்டான ஈர்ப்பினால் அவனுக்கு கிடைக்காத ஒரு லவ் பேர்ட்ஸ் ஜோடியை வாங்கிக் கொண்டு அவன் முகவரி கண்டறிந்து செல்கிறாள். வார இறுதி என்றால் 60 மைல் தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சென்று விடுவான் என தெரிய வருகிறது. கடற்கரை அருகே இருக்கும் சிறிய ஊர் அது. மெலனியும் விடாமல் சென்று அவன் வீடு எங்கே என கண்டறிந்து இரகசியமாக உள்ளே சென்று பரிசாக அந்தப் பறவைகளை வைத்து விட்டு வருகிறாள். மிட்ச் அவள் செய்கையை கண்டறிந்து உற்சாகமாக அவளை சந்திக்க செல்கிறான். அப்போது ஒரு பறவை வேகமாக வந்து மெலனியை தலையில் காயப்படுத்துகிறது. இப்படி பறவை தாக்குவது வினோதமானதாக பார்க்கப் படுகிறது.

அந்த ஊரிலேயே தங்கும் மெலனிக்கு பறவைகளின் நடவடிக்கைகள் விசித்திரமாக படுகிறது. அடுத்த நாள் பிறந்த நாள் விழாவில் விளையாண்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளை பறவைகளின் கூட்டம் மொத்தமாக தாக்குகிறது. வழக்கமாக சத்தம் கேட்டாலோ, மனிதர்களை கேட்டாலோ பயந்து ஓடும் பறவைகள் திருப்பி தாக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் ஒரு தற்கொலைப்படையை போல் தாக்குகின்றன. இதை வெளியே சொன்னால் குழந்தைகள் பறவைகளை தொந்தரவு செய்திருப்பார்கள் அதனால் பயமுறுத்தி இருக்கும் என சொல்கிறார்களே ஒழிய யாரும் நம்ப மறுக்கிறார்கள். அன்று இரவு மிட்ச் வீட்டினுள் புகைப் போக்கியின் வழியே ஆயிரக்கணக்கான பறவைகள் நுழைந்து தாக்குகின்றன. அதை சமாளித்து விட்டு விடிந்ததும் போலிசில் சொன்னால் அவர்களும் நம்ப மறுக்கிறார்கள்.

இப்படி அந்த ஊரில் தொடர்ந்து பறவைகளின் படையெடுப்பு நடக்கிறது. ஏராளமானோர் பலியாகிறார்கள். பலரும் ஊரை காலி செய்கிறார்கள். இறுதியாக மிட்ச் குடும்பமும் மெலனியுடன் ஊரை விட்டு போவதுடன் படம் முடிகிறது. கதை என்று பெரிதாக ஏதுமில்லை. திரைக்கதையும் இயக்கமும் தான் நம்மை இறுதிவரை கட்டிப் போடுகின்றன.

இங்கு வெறும் வார்த்தைகளின் பறவைகள் தாக்குகின்றன என்பதை படித்தால் உங்களுக்கு என்ன பெரிதாக தோன்றிவிடும்? திடிரென தலையில் விழுந்த பறவையின் எச்சம் தரும் பதட்டம் கூட ஏற்பட்டிருக்காது. இதே படத்தை பாருங்கள். பறவைகள் தாக்கும் போது ஏற்படும் உணர்வை விட அவைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்கையில் வரும் பயம் இருக்கிறதே,ப்பா. மெலனி பள்ளியிலுள்ள மிட்ச்சின் தங்கையை அழைத்து வர செல்கையில் வெளியே மைதானத்தில் நின்று சிகரெட் பிடிக்க துவங்குவாள். அவளுக்கு பின்னால் ஒரு காகம் வந்து அமரும். அது அவளுக்கு தெரியாது. பார்க்கும் நமக்குத் தெரியும். அடுத்து இன்னும் 2 காகங்கள் வரும். இன்னும் 2, இன்னும் 2. அவள் சிகரெட்டை முடித்து கீழே போட்டு விட்டு திரும்பி பார்த்தால் ஆயிரக்கணக்கில் காகங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும்.

அந்த நொடி உங்களுக்கு ஏற்படும் பதட்டம் தான் படத்தின் வெற்றிக்கு காரணம். சாதாரணமாக நாம் பறவைகளை பார்க்கும் போதும், அவற்றின் சத்தங்களைக் கேட்கும் போதும் ரசிப்போம் அல்லது கண்டு கொள்ள மட்டோம். அதே அவைகள் கொலை செய்யும் அளவு கொடுரமானவை என்று மனதில் பதிந்து விட்டால் அவற்றை பார்க்கும் போதோ, சத்தங்களை கேட்கும் போதோ எப்படி உணர்வோம்? ஒரு உதாரணம் சொல்கிறேன். அனைத்து நாய்களும் கடிக்கப் போவதில்லை. ஆனால் இரவு சினிமா பார்த்து விட்டு வரும் போது ஓரமாக படுத்திருக்கும் தெரு நாயை கடப்பதற்குள் எப்படி வியர்த்து வடியும்? அந்த நேரம் பயப்படும் அளவுக்கா அடுத்த நாள் பகலில் பயப்படுவோம்?

உண்மையில் படம் முடிந்து இதை டைப் செய்யும் போது வீட்டின் வெளியே கத்திய காகம் மீண்டுமொரு முறை என்னை படத்தினுள் தள்ளுகிறது. படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. எதற்காக பறவைகள் தாக்குகின்றன என்று எங்கும் சொல்லப்படவில்லை. அந்தக் காலத்தில் கிராஃபிக்ஸ் ஏதும் இல்லை என்பதால் பறவைகள் தாக்கும் காட்சிகள் செயற்கையாக தெரிகின்றன. ஆனால் உண்மையில் நாம் பதட்டமடைவது பறவைகள் தாக்காமல் இருக்கும் பொழுதுதான் என்பதால் அது பெரிய குறையில்லை.

எதெச்சையாக ஒரு நாள் வயலில் வேலை செய்பவரை தொடர்ந்து ஒரு பறவை தாக்குவதைப் பார்த்து இன்ஸ்பையர் ஆன எழுத்தாளர் ஒருவர் இந்த பறவைகள் தாக்குதலை இரண்டாம் உலகப் போருடன் இணைத்து எழுதிய நாவல் எழுத, அதில் இருந்து தலைப்பையும் பறவைகள் தாக்கும் கருவையும் மட்டும் எடுத்துக் கொண்டு ஹிட்ச்காக் பொறுமையாக உருவாக்கிய படம் இது. முதலில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக செய்த குற்றத்திற்காக பறவைகள் தாக்குவதைப் போல் கதை எழுதி விட்டு காரணமே தேவையில்லை என்று மாற்றி எழுதி எடுத்தாராம்.

இந்தப் படம் பார்க்கும் போது நினைத்துக் கொண்டேன். ஹிட்ச்காக் மட்டும் இப்போதையதொழில் நுட்பங்களுடன் படம் எடுத்தால் எத்தனை முறை பேண்டை நனைக்க வைப்பாரோ என்று. கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தின் இணைப்பு