Psycho (1960)- Hitchcock Movie – விமர்சனம்

தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியை ஏன் வில்லனாக நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டதற்கு ஜெயம் ராஜா, பொய் எப்போதும் ஆபத்தானது, அதிலும் அழகான பொய் கொடுரமானது. வில்லன் கொடுரமானவனாக இருக்க வேண்டுமென்றால் அழகனாக இருக்க வேண்டும். வசிகரமானவனாக இருப்பவனால் தான் கொடுரமானவனாகவும் இருக்க முடியும் என்றார். எவ்வளவு நிஜமான வார்த்தைகள். பார்க்கவே பயப்படும்படி பெரிய உருவம், உருண்டை கண்கள், முறுக்கு மீசையுடன் இருப்பவர் கொலை செய்வதையும் குழந்தை முகத்துடன் நேர்த்தியாக உடையணிந்து ஒருவன் மெதுவாக கழுத்தை அறுப்பதையும் ஒப்பிட்டு பாருங்கள் எது கொடுரமானது என்று புரியும். இப்போதே சொல்கிறேன். சினிமாவை விரும்புபவர்கள் இதற்கு மேல் எதையும் படிக்க தேவையில்லை. நேரடியாக சென்று படத்தை பார்த்து விடுங்கள். படத்தின் இணைப்பு 

ஹிட்ச்காக் படங்களும் கமலஹாசம் படங்கள் போலத்தான். நாம் பார்த்து இரசித்துவிட்டு மீண்டும் ஒரு முறை பார்க்கும் பொழுது இதை கவனிக்கவில்லையே என்று யோசிக்கும் வகையில் ஏதேனும் ஒரு சுவாரசியத்தை ஒளித்து வைத்திருப்பார். மிக மிக சின்னதாய் வந்து போகும் காட்சியாக இருக்கும். அதுதான் மொத்த படத்திற்கும் ஆணி வேராய் இருக்கும். இந்த படத்தில் அது போன்று பல படிப்பினைகள் இருக்கின்றன. சினிமாத் துறையில் இருப்பவர்கள் இந்தப் படம் ஒன்றினை தரவாக படித்தே 100 படங்கள் இயக்கலாம். அவ்வளவு சுவாரசியமான சங்கதிகள் உள்ளன. சரி படத்தின் கதையைப் பற்றி பேசுவோம்.

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் போதே போஸ்டரில் முதல் காட்சி துவங்குவதற்கு முன் அரங்கிற்குள் நுழைபவர்களுக்கு மட்டுமே அனுமதி என போட்டிருப்பார்கள். அப்படி என்ன முக்கியமான காட்சி இருக்கும் என பார்த்தால் ஒரு ஆணும் பெண்ணும் கலவி முடித்து எழுந்திருப்பார்கள். அது பெரிய நகரம். மதியம் 2.30 மணி. இதுதான் முக்கியம். இந்த நேரத்தில் ஏன் கூடுகிறார்கள்? அப்போதுதான் அவர்களுக்கு நேரம் கிடைத்துள்ளது. வேலை பார்க்கும் பெண், சொந்த ஊரிலிருந்து வேலை விசயமாக வந்திருக்கும் ஆண், என்னதான் காதல் இருந்தாலும் நேரம் கிடைக்க வேண்டுமே? திருமணம் செய்துக் கொண்டு ஒன்றாக வாழலாம் என்றால் ஆணுக்கு கடன் இருக்கிறது. அதை முடிக்காமல் திருமணம் செய்ய இயலாது. இந்த இடத்தில் வரும் வசனங்களை எல்லாம் தெளிவாக கவனித்துக் கொள்ளுங்கள். அந்தப் பெண்ணின் ஆழமான விருப்பங்களை தெரிந்துக் கொள்ள உதவும்.

இந்த நேரத்தில் அவள் பணிபுரியும் இடத்தில் ஒரு பெருந்தொகை அவளிடம் தரப்பட்டு வங்கியில் செலுத்தச் சொல்லப் படுகிறது. யோசித்துப் பார்க்கிறாள். இந்தப் பணம் போதும், காதலனின் கடனை அடைத்து விட்டு இருவரும் இணைந்து வாழலாம் என்று முடிவு செய்து அனைத்து உடைமைகளையும் எடுத்துக் கொண்டு ஊரை விட்டு கிளம்புகிறாள். அவள் நேரம், ஊர் எல்லையில் அவளை அவள் முதலாளி பார்த்து விடுகிறாள். அதன் பின் அடுத்த நாள் விடியல் வரை அவள் கார் ஓட்டும் போது காட்டப்படும் காட்சிகள், குறிப்பாக அந்தக் காட்சி முடியும் விதம் மிக முக்கியம் கவனித்துக் கொள்ளுங்கள்.  அவளை சந்தேகிக்கும் ஒரு போலிசும் பின் தொடர காரை விற்றுவிட்டு வேறு காரை வாங்கிக் கொண்டு பயணத்தை தொடர்கிறாள். நல்ல மழை. ஒரு விடுதியில் சென்று தங்குகிறாள். இது வரை தெரிந்து கொண்டதே அதிகம், போய் படத்தை பார்த்து விடுங்கள். படத்தை பார்க்காதவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டாம்.

அந்த விடுதியை நடத்தும் இளைஞனைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. பார்க்க மிக எளிமையாக எளிதில் நம்பக்கூடியவனாக இருக்கிறான். அந்தப் பெண்ணிடம் மிக கனிவாக நடந்துக் கொள்கிறான். அவளை இரவு உணவுக்கு தன் வீட்டிற்கு அழைக்கிறான். அவன் வீடு விடுதியை ஒட்டி இருந்தாலும் சற்று உயரமாக படியேறி செல்லும் படி இருக்கிறது. அவள் அறையில் இருந்து அவன் தன் தாயுடன் பேசுவதைக் கேட்கிறாள். அவளை வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது என அவன் தாய் கத்துவது தெளிவாக கேட்கிறது. இருப்பினும் அவன் உணவை எடுத்துக் கொண்டு வந்து அலுவலகத்திலேயே அமர்ந்து சாப்பிடலாம் என்று அழைக்கிறான்.

சாப்பிட்டுக் கொண்டே இருவரும் பேசும் காட்சி மிக முக்கியமானது. அக்காட்சியின் வசனங்கள் தான் மொத்தப் படத்தின் கருவையும் நமக்கு சொல்லுமிடம். அவன் தாய் மன நலம் பாதிக்கப் பட்டிருந்தாலும் அவளை தான் உடன் வைத்திருக்கப் போவதாகவும் எந்தக் காப்பகத்திலும் சேர்க்கப் போவதில்லை என்றும் சொல்வான். சாதாரணமாக வாஞ்சையுடன் பேசிக் கொண்டிருப்பவன் தாய் பற்றிய பேச்சு துவங்கும் பொழுது பார்வையை மாற்றுவதும் அவளை காப்பகத்தில் சேர்ப்பது பற்றி பேசுகையில் ரௌத்திரத்தை பார்வையில் காட்டிக் கொண்டே பக்குவமாக பேசுவதும்,ப்பா என்னா நடிப்புடா சாமி. அவனுடன் பேசி முடிக்கும் பொழுது இந்த யுவதி ஒரு முடிவுக்கு வருகிறாள். விடிந்ததும் திரும்ப ஊருக்கு சென்று திருடிய பணத்தை திருப்பி தந்து விடுவது என்று. குளித்து விட்டு உறங்கலாம் என்று ஷவரில் குளிப்பவள் கொலை செய்யப் படுகிறாள். இந்தக் காட்சிதான் இன்று வரை ஒரு டிரெண்ட் செட்டாக பார்க்கப் படுகிறது. அதுவரை திருட்டைக் குற்றமாக கொண்டு நகரும் படம் கொலையை மையமாக கொண்டு நகர துவங்கும். அதுவும் யாரும் எதிர்பார்க்காத கொலை. எதற்கு கொலையானாள் என்ற காரணமே நமக்கு புரியாது.

சற்று நேரத்தில் அங்கு வரும் விடுதி உரிமையாளன் அக்கொலை நடந்த தடயத்தையும் உடலையும் காரில் போட்டு புதைகுழியில் தள்ளி மறைத்து விடுவான். ஒரு வாரத்திற்குள் அவளைத் தேடி மூன்று பேர் கிளம்புவார்கள். ஒன்று அவளின் சகோதரி, இன்னொருவன் அவளின் காதலன், மூன்றாவதாக அவள் திருடி வந்த பணத்தின் உரிமையாளர்களால் பணியமர்த்தப்பட்ட தனியார் துப்பறிவாளன்.

இதில் துப்பறிவாளன் பல முயற்சிகளுக்கு பிறகு அந்த விடுதிக்கு வந்து அவள் அங்கு ஒரிரவு தங்கி இருந்ததை கண்டு பிடிக்கிறன். மேற்கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ள அந்த விடுதி உரிமையாளனின் தாயுடன் பேச முயற்சிக்கையில் அவனும் கொலையாகிறான்.

இந்த படத்தின் கதை என்னதான் 1959ல் வெளியான நாவலில் இருந்து வெளியாகி இருந்தாலும் ஹிட்ச்காக் டச்சென ஒன்று இருக்கிறதே, உதாரணத்திற்கு துப்பரிவாளனும் இறந்தப் பிறகு அப்பெண்ணின் காதலன் அவனைத் தேடி அந்த விடுதிக்கு வரும் போது, தனியாக அந்த புதைகுழியருகே நிற்கும் அவ்விடுதி உரிமையாளனை காட்டும் ஷாட் இருக்கிறதே, அப்பா, பார்க்கும் நம்மை அடுத்த கொலை நடக்காதா என்று ஆர்வத்தை தூண்டும் காட்சி அது.

முதலில் கொலையான பெண்ணின் சகோதரியும் காதலனும் சேர்ந்து என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள அந்த ஊரின் ஷெரிப்பை சென்று பார்ப்பார்கள். அவரிடம் அந்த விடுதி உரிமையாளனின் தாயைப் பற்றி பேசும் பொழுதுதான் தெரிய வரும் அவள் இறந்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்று. அப்படி என்றால் தான் ஜன்னலில் பார்த்த வயதான பெண்மணி யார் என்று அக்காதலன் கேட்கையில் அவன் தாய் வீட்டில் என்றால் புதைக்கப்பட்ட சவப்பெட்டியில் இருப்பது யார் என்ற கேள்வி வரும். வேறு வழியில்லாமல் கணவன் மனைவி அடையாளத்தில் அந்த விடுதிக்கே சென்று இருவரும் உண்மையை கண்டுபிடிப்பார்கள். அது என்ன உண்மை என்பதை படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

நார்த் பை நார்த்வெஸ்ட் படத்தினை ஹிட்ச்காக் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி விட்டு, அடுத்து சிக்கனமாக குறைந்த நடிகர்களை வைத்து கருப்பு வெள்ளையில் எடுத்து வெளியிட்ட படம். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஹிட்ச்காக்கின் அடையாளாமாகவே இந்தப் படம் மாறிப்போனது. பல சைக்கோ கொலைகாரன் சம்பந்தமான படங்களை பார்த்திருப்போம், ஆனால் அதற்கான காரணத்தை நுணுக்கமாக விவரித்ததுடன் நம் அனைவருக்குள்ளும் சைக்கோத்தனம் இருப்பதை முதல் பாதியில் சொல்லி இருப்பார். அதை எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை.

ஒரு திருட்டுத்தனம் செய்தவருக்கே மண்டைக்குள் அத்தனை குரல் கேட்கும் என்றால் கொலை செய்தவருக்கு எத்தனை குரல் கேட்கும்? அந்தப் பெண் வண்டியில் பலரின் குரல்களை கேட்டு முடித்த பின் ஒரு சிரிப்பு சிரிப்பாள், அதே சிரிப்பை படத்தின் இறுதியில் கொலைகாரனின் முகத்தில் பார்க்கலாம். அப்படியே பொருந்தும். இந்தப் படத்தை பார்த்து விட்டு, இப்படத்தினை அலசி வந்த பல வீடியோக்கள் யூடியுப்பில் இருக்கின்றன. அதையும் பாருங்கள். மிக மிக மிக முக்கியமான படம். கட்டாயம் பார்த்து விடுங்கள்.