North by Northwest (1959)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக்கை பலர் பயமுறுத்தும் விதமான படங்களை எடுப்பவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் விறுவிறுப்பான படங்களை எடுப்பவர். இப்போது போல சத்தமாக இசையமைத்தோ, கேமராவை ஆட்டியோ பயமுறுத்துவது போல் கிடையாது. விறுவிறுப்பு வேண்டுமென்றால் நல்ல கதை வேண்டும், அதை விட முக்கியம் நல்ல திரைக்கதை வேண்டும். புத்தகமாகவோ, நாடகமாகவோ வெளிவந்து வெற்றி பெற்றிருப்பினும் சரி பிடித்திருந்தால் எங்கிருந்தாலும் கதையை எடுத்துக் கொள்வார். அதே போல் தன்னை விட திரைக்கதை எழுத தெரிந்தவர்கள் கிடைக்கும் பொழுது தேவையில்லாமல் அதில் மூக்கை நுழைக்காமல் வல்லுனர்களை வைத்து திரைக்கதை எழுதிக் கொள்வார். தனது மொத்த திறமையையும் இயக்கத்தில் காட்டுவார். அதனால்தான் 50 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிப் படங்களை அவரால் தர முடிந்தது. நாமும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவர் படங்களை பேசிக் கொண்டிருக்கிறோம்.

நியுயார்க் எப்படிப்பட்ட நகரம் என்று அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் மும்பை போன்ற வியாபார நகரம். அங்கு விளம்பர நிறுவனத்தில் நல்ல பணியில் இருப்பவன் ரோஜர். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆகி இருந்தாலும் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருந்து இரண்டு பேரால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்படுகிறான். எப்படியும் தன்னைப் போன்ற முக்கியமில்லாத ஒருவனைப் பற்றி தெரிந்துக் கொண்டதும் தவறாக கடத்தி வந்ததை உணர்ந்து விட்டு விடுவார்கள் என்று நம்பி தைரியமாக இருக்கிறான். அவனை ஒரு பெரிய தனி மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கு சிலர் ரோஜரை விசாரிக்கிறார்கள். ஆனால் என்ன அவனை ஜார்ஜ் கெப்ளான் என்று அழைக்கிறார்கள். தன் பெயர் அதுவல்ல என்று சொல்லி தனது அடையாளத்தை ஆதாரத்துடன் நிருபிக்க முயன்றாலும் அமெரிக்க உளவாளிக்கு இது போல எத்தனை அடையாளங்கள் வேண்டுமானாலும் இருக்கும் என நம்ப மறுக்கிறார்கள். பல கேள்விகள் கேட்கப்படுகிறது. பதில் தெரிந்தால் தானே சொல்ல முடியும்? கெப்ளாம் உயிரோடு இருந்தால் தங்கள் திட்டம் ஈடேறாது என்று சொல்லி அவனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அந்தக் கொலை முயற்சியும் தத்ரூபமாக இருக்கும்.

நன்றாக ஒரு பாட்டில் சரக்கை குடிக்க வைத்து, ஒரு வளைவில் காரில் அமரவைத்து குடிபோதையில் பள்ளத்தில் விழ வைக்க முயற்சிப்பார்கள். அதிலிருந்து தப்பித்து செல்லும் ரோஜரை போலிஸ் கைது செய்கிறது. குடித்து விட்டு மின்ன்ல் வேகத்தில் வண்டி ஓட்டினால் வேறென்ன செய்வார்கள்? சரி உயிர் பிழைத்தால் போதும் என சரணடைந்து போலிசிடமும் கோர்ட்டிலும் நடந்ததைக் கூற, அவர் சொல்வது உண்மையா என விசாரித்து பார்க்க முயற்சிக்கையில் ஒரு கூட்டமே அவருக்கு எதிராக சாட்சி சொல்கிறது. அதன்படி குடித்து விட்டு பொய் சொல்லி தப்பிக்க நினைக்கிறார் என ரோஜரின் தாய் உட்பட அனைவரும் சந்தேகிக்கிறார்கள்.

நடந்த சம்பவங்களில் தெரிந்துக் கொண்டதை வைத்து யார் அந்த கெப்ளான் என விசாரித்து அவன் தங்கி இருக்கும் அறையை தேடி செல்லும் ரோஜரை அனைவரும் கெப்ளான் என்று நினைத்து பேசுகிறார்கள். ஒருவேளை தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ளவனாக இருப்பானோ என்று அவன் உடைகளை முயற்சித்துப் பார்த்தால் சற்று உயரம் குறைந்தவனாக தெரிய வரவும் குழப்பம் மேலும் அதிகரிக்கும்.

ஒரு பக்கம் ரோஜரை கடத்திய கும்பல் கொலை செய்ய துரத்தும், இன்னொரு பக்கம் யார் கெப்ளான் என விசாரிக்கப் போக ஒரு கொலைப் பழியில் சிக்கும் ரோஜரை நாடு முழுக்க போலிஸ் துரத்தும். இவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும் ரோஜருக்கு ஒரு அழகி உதவி செய்வாள். 39 ஸ்டெப்ஸ் படத்திலேயே பேசி இருப்போம். தமிழ் சினிமாவில்தான் இப்படி ஆபத்தில் ஓடும் கதா நாயகனுக்கு உதவும் அழகிகள் கிடைப்பார்கள், ஹாலிவுட்டில் மாட்டி விடத்தான் பார்ப்பார்கள் என்று. ஆனால் அந்தப் படம் வந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு கதா நாயகனுக்கு எப்படி சம்பந்தமில்லாமல் ஒரு அழகி உதவுகிறாள் என்று பார்த்தால் அவளும் அந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவள்.

இப்படி தன்னுடனே பயணிக்கும் அழகியின் சதியில் இருந்து தப்பித்து, தேடும் போலிசிடம் இருந்து தப்பித்து, துரத்தும் கொள்ளாய்க் கூட்டத்திடம் இருந்து தப்பித்து அந்த உண்மையான கெப்ளானை ரோஜர் கண்டுபிடித்தாக வேண்டும். ஹிட்ச்காக் படங்களிலேயே அதிக விறுவிறுப்பான சேசிங்க் காட்சிகள் நிறைந்த படமென்று இதைச் சொல்லலாம். அதுவும் ஜேம்ஸ்பாண்ட் கதைகள் வெளிவரத் துவங்கிய நேரம். அதை ஓரங்கட்டி வெற்றி பெறுவதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம்? முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் 1963ல் தான் வெளி வந்தாலும், கதைகள் வெளியாகி வெற்றி பெற்றுருந்தன. கொஞ்சம் அசந்தால் ஹிட்ச்காக் ஜேம்ஸ்பாண்ட் கதைகளை உருப்போட்டு படமெடுக்கிறார் என்று சொல்லி விடுவார்கள். அந்தப் பழியிலிருந்து தப்பித்ததுடன் உளவாளி படங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு மைல்கல்லை நிறுவியதில் ஹிட்ச்காக்கிற்கு பெரும்பங்கு உண்டு.

அப்படிப்பட்ட ஹிட்ச்காக்கிற்கு ஜேம்ஸ்பாண்ட் படத்தினை இயக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால தான் சிண்ட்ரெல்லா கதையை படமாக எடுத்தால் கூட எங்காவது ஒரு பிணத்தை ஒளித்து வைத்திருப்பேன் என இரசிகர்கள் தேடத்துவங்கும் அளவிற்கு என தனக்கென ஒரு பாணியை உருவாக்கி விட்டதால் தன்னால் இயக்க இயலாது என அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக சொல்வார்கள்.

ஹிட்ச்காக் படங்களில் தவிர்க்க கூடாத படம் என்பதை விடவும், ஜேம்ஸ்பாண்ட் இரசிகர்களும் தவற விடக்கூடாத படம் இது.