Vertigo (1958)- Hitchcock Movie – விமர்சனம்

ஜான் ஸ்காட்டி, ஒரு போலிஸ் அதிகாரி. ஒரு குற்றவாளியை துரத்தும் பொழுது ஒரு கட்டிடத்தின் மீதிருந்து சக காவலாளி தவறி விழுந்து உயிர் விட தான் காரணமானதால் உயரம் என்றால் பயம் ஏற்படும் அக்ரோஃபோபியா மற்றும் உயரத்திலிருந்து கீழே பார்க்கையில் அனைத்தும் சுழலும் தோற்றப்பிழை உண்டாகும் வெர்டிகோ என்னும் நோய்க்கு ஆளாகிறார். சரி இப்படிப்பட்ட பிரச்சனைகளை வைத்துக் கொண்டு இனி என்ன காவல்துறையில் செய்வது என்று முன் கூட்டியே ஜானை வேலையிலிருந்து விடுவித்து விடுகிறார்கள். இவருடைய வழக்கு பத்திரிக்கைகளின் மூலம் பரபரப்பாக பேசப்படுகிறது. இது போன்ற ஃபோபியாக்கள் பற்றிய வழக்குகள் சுவாரசியமானவை என்பது ஒரு காரணம்.

எப்படியாவது இந்த ஃபோபியாவில் இருந்து வெளி வந்து விட வேண்டும் என ஜான் விரும்புகிறான். ஆனால் மீண்டும் அது போன்ற ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தால்தான் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் ஜானின் பழைய கல்லூரி நண்பன் ஒருவன் அழைத்து பேசுகிறான். தனது மனைவியின் நடவடிக்கைகள் வினோதமாக இருப்பதாகவும் அவளை பின் தொடர ஜானின் உதவி வேண்டும் என்றும் கேட்கிறான். இதற்கு சம்மதிக்காத ஜானை பேசிப்பேசி அரைமனதாக சம்மதிக்க வைக்கிறான்.

அந்த நண்பனின் மனைவிக்கு என்ன பிரச்சனை என்றால் சில் சமயங்களில் அவள் என்ன செய்கிறாள் என்பது அவளுக்கே தெரியாது. அப்படி என்ன செய்வாள் என்றால் கிளம்பி சென்று கடந்த நூற்றாண்டில் இறந்த பெண்ணின் கல்லறையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள். ஒரு மியுசியத்திற்கு சென்று ஒரு பெண்ணின் ஓவியத்தை மணிக்கணக்காக எதிரே அமர்ந்து பார்த்துக் கொண்டு இருப்பாள். அந்த ஓவியத்தில் இருப்பது போல பூச்செண்டு வாங்கி வைத்துக் கொள்வாள். அந்த ஓவியப்பெண்ணைப் போலவே சிகையலங்காரம் செய்துக் கொள்வாள். அந்த ஒவியப் பெண்ணின் பெயரில் விடுதியில் ஒரு அறை எடுத்து, வாரம் இருமுறை சென்று சற்று நேரம் அமர்ந்து விட்டு வருவாள். இந்த செய்கைகள் எதையும் அவள் சுய நினைவில் செய்வதில்லை.

ஜான் அந்த ஓவியத்தைப் பற்றி விசாரித்து தனது நண்பனிடம் சென்று தெரிவிக்கிறான். அப்போதுதான் அந்த ஓவியப் பெண்மணி அந்தப் பெண்ணின் பாட்டி என்பது தெரிய வருகிறது. கணவனால் கைவிடப்பட்டு பைத்தியமாகி இறந்த அந்த அழகியின் வம்சத்தில் பிறக்கும் பெண்கள் இப்படி மன நலம் பாதிக்கப்பட்டு இறப்பது வழக்கமாக இருப்பது தெரிய வருகிறது. அந்தப் பெண்ணிற்கு தனக்கு இப்படி ஒரு பாட்டி இருந்த விசயமே தெரியாது. ஜான் தொடர்ந்து அந்தப் பெண்ணை பின் தொடர்கிறான். ஒருமுறை அவள் ஆற்றில் குதித்து விடவும் காப்பாற்றி நட்பாக பழக முயற்சிக்கிறான்.

தனது நண்பனின் மனைவி என்று தெரிந்தும் ஜானால் அவளை காதலிக்காமல் இருக்க முடியவில்லை. தனது காதலை வெளிப்படுத்தும் போது அவளும் தன்னை காதலிப்பதை புரிந்துக் கொள்கிறான். எப்படியாவது அவளது இந்தப் பிரச்சனையை குணப்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறான். படத்தின் 40 நிமிட கதையை சொல்லி விட்டேன். இனிமேல்தான் சுவாரசியங்களும் திருப்பங்களும் இருக்கும். அதை படத்தில் பார்ப்பதுதான் நன்றாக இருக்கும்.

கடந்த நூற்றாண்டின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள படங்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் சரியாக செல்லவில்லை என்றாலும் நாள்பட நல்ல வசூலைத் தந்தது என்பதை விட காலப்போக்கில் கிளாசிக் படங்கள் வரிசையில் இடம் பிடித்தது. ஹிட்ச்காக் படங்களில் அது எவ்வளவு ஆபத்தான கதைக்களமாக இருந்தாலும் அதில் நாயகிக்கான இடத்தையும் காதல் காட்சிகளையும் உறுதியாக அமைக்கிறார். அதிலும் இந்தப் படங்களில் வரும் லிப்லாக்குகள் பற்றி என்னவென சொல்ல? உதடுகள் உரச உரசத்தான் யோசிக்கிறார்கள். நான் இந்தப் படம் பார்க்கையில் மாமனார் வந்திருந்தார். முத்தக் காட்சிகள் வந்தால் முடிவனா என்கிறது. ஏற்கனவே எனக்கு ரொம்ப நல்லப் பெயர். இதில் ஹிட்ச்காக் வேறு எலுமிச்சம்பழம் பிழிந்து சூனியம் வைத்து விட்டார்.

இந்தப் படத்தைப் பற்றி இன்னொரு சுவாரசியமான விசயம் என்னவென்றால் இந்தப் படத்தை 1965ல் தமிழில் எடுத்து வெளியிட்டார்கள். எம்ஜியார், சரோஜா தேவி, நம்பியார் நடிப்பில் வந்த “கலங்கரை விளக்கம்” வெர்டிகோவின் மறுபதிப்புத்தான். ஆனால் எம்ஜியாருக்காக கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஹிட்ச்காக் படத்தில் வில்லனெக்கெல்லாம் வேலையே கிடையாது. எம்ஜியார் படத்தில் அப்படி இருக்க முடியுமா? சரி அதைப் பற்றி நமக்கு எதற்கு? இந்தப் படத்தைப் பற்றி நீங்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றாலும் இதில் ஒரு பாடல் மிகப் பிரபலம். பாரதிதாசனின் “சங்கே முழுங்கு” கவிதையை அற்புதமாக பாடலாக்கி இருப்பார்கள்.

ஹிட்ச்காக்கின் படங்கள் ஏகப்பட்டது இருந்தாலும் தவறவிடாமல் கட்டாயம் பார்க்கவேண்டும் என வடிகட்டினால் கட்டாயம் இந்தப் படம் இருக்கும். இதுவும் புத்தகமாக வெளிவந்து வெற்றிப் பெற்ற கதைதான். சொல்லப் போனால் ஹிட்ச்காக் படமெடுப்பதற்காகவே எழுதப்பட்ட கதை என்று சொல்வார்க்ள். கட்டாயம் பாருங்கள். படத்தின் இணைப்பு