The Man Who Knew Too Much (1956)- Hitchcock Movie – விமர்சனம்

தமிழில் ஏற்கனவே வந்த படத்தை ரீமேக் செய்து வெற்றிப்பெற்ற முதல் படம் பில்லாதான். ஆனால் அதற்கு முன்பு கருப்பு வெள்ளை காலத்திலேயே உத்தம்புத்திரன் படத்தை ரீமேக் செய்து சிவாஜி நடிப்பில் வெற்றி பெற்றது என்பதுதான் வரலாறு. பில்லாவிற்கு பிறகு நிறைய ரீமேக் படங்கள் எடுக்கப்பட்டன. எடுத்து ஒரிஜினல் படங்களை கொலையாய் கொன்றார்கள் என்பதுதான் உண்மை. மாப்பிள்ளையை கூட மன்னிக்கலாம், தில்லுமுல்லுவை என்னவென்று திட்டுவது? சரி அதை விடுவோம். நான் அவன் இல்லை படம் ரீமேக் செய்து வெளியிட்டு வெற்றி பெறவும் கமலஹாசன் பாலச்சந்தரிடம் அவர்கள் படத்தை ரீமேக் செய்யலாம் என்றாராம். ஏனென்றால் அது நல்ல கதையம்சமுள்ள படம், ஆனால் சரியாக போகவில்லை. இப்போது எடுக்கலாம் என்று விரும்புகிறார். இது நற்சிந்தனை. நல்ல கதையுள்ள ஓடாத படத்தை மீண்டுமொருமுறை எடுத்து ஓட வைக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளலாம். நன்றாக ஓடி அனைவருக்கும் பிடித்திருக்கும் கிளாசிக் படங்களை கெடுப்பவர்களை என்னவென்று சொல்வது?

ஏதற்கு இத்தனை முறை ரீமேக் பற்றி பேசுகிறேன் என்றால் ஹிட்ச்காக் இயக்க வந்த புதிதில் 1934ல் ஒரு படம் எடுக்கிறார். அனுபவம் இல்லாததாலோ என்னவோ அவரால் அதை வெற்றிப் படமாக்க முடியவில்லை. 21 வருடங்களுக்கு பிறகு திரைத்துறையில் ஜாம்பாவனாக கோலோச்சிய பிறகு மீண்டும் அந்தப் படத்தை ரீமேக் செய்கிறார். படம் நல்ல வெற்றியை பெறுகிறது. அந்தப் படத்தைப் பற்றிதான் இங்கு பார்க்க போகிறோம். அந்த ரீமேக் பற்றி ஹிட்ச்காக் சொன்னது “Let’s say the first version is the work of a talented amateur and the second was made by a professional.” எனக்கு ஒரு விருப்பம் என்னவென்றால் புதுப்பேட்டை படத்தை மீண்டும் செல்வராகவன் இயக்க வேண்டும். தனுசின் தற்போதைய மெருகேறிய நடிப்பில் அந்த படத்தை பார்க்க விரும்புகிறேன். ரீமேக் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். சரி இந்தப் படத்திற்கு வருவோம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவர். அவரது மனைவி, அவள் ஒரு முன்னாள் பிரபல பாடகி, அவர்களின் மகன் மூவரும் மொராக்கோ நாட்டிற்கு சுற்றுலா செல்கிறார்கள். வழியில் பிரான்ஸ் நாட்டுக்காரனை சந்திக்கிறார்கள். நன்றாக பேசுகிறான். மருத்துவருக்கு அவனிடம் நெருக்கமாக பேசுவது மகிழ்ச்சிதான். ஆனால் அவர் மனைவிக்கு அவன் மீது சந்தேகம். “இவனென்ன நம்மைப்பற்றி அதிகம் கேள்வி கேட்டு தெரிந்து கொள்கிறானே தவிர அவனைப் பற்றி அதிகம் சொல்ல மறுக்கிறான்” என்று குழப்பம். அவர்கள் தங்கும் விடுதிக்கும் வருகிறான். அவர்களுடன் டின்னர் சாப்பிட வருவதாக சொன்னவன் வேலை இருப்பதாக கிளம்பி விடுகிறான். ஆனால் இவர்கள் சாப்பிட துவங்கிய பின் வருகிறான். இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கவும் இந்தக் குடும்பத்திற்கு கோபம் வருகிறது.

அங்கு இன்னொரு வயதான தம்பதிகள் அறிமுகமாகிறார்கள். அவர்கள் நன்றாக பழகுகிறார்கள். அடுத்த நாள் ஊர் சுற்றும் பொழுது ஒருவன் கொலை செய்யப்படுவதை பார்க்கிறார்கள். அவன் இறப்பதற்கு முன் மருத்துவரை நெருங்கி காதில் சில இரகசியங்களை சொல்லி விட்டு சாகிறான். அவன் யாரென்று பார்த்தால் அவன் தான் முந்தின தினம் பழகியவன். அந்தக் கொலை சம்பந்தமாக போலிஸ் மருத்துவரையும் அவர் மனைவியையும் விசாரிக்க அழைத்துச் செல்ல, மகனை உடன் வந்த மற்றொரு தம்பதியினரிடம் விட்டு விட்டு செல்கிறார்கள். காவல் நிலையத்தில் இருக்கையில் மருத்துவருக்கு ஒரு போன் வருகிறது. இறந்தவன் சொன்னதை போலிசிடம் சொன்னால் மகனைக் கொன்று விடுவோம் என்று. எதுவும் சொல்லாமல் விடுதிக்கு திரும்பி வந்து பார்த்தால் மகனை ஒப்படைத்த தம்பதியினர் காலி செய்து விட்டு சென்று விட்டதாக தெரியவரவும் தாங்கள் பெரிய அரசியல் சதியில் சிக்கிக் கொண்டுள்ளதை மருத்துவர் உணர்கிறார்.

இருவரும் இங்கிலாந்துக்கு செல்கிறார்கள். ஏனென்றால் அங்குதான் ஒரு சதிச்செயல் நடக்க இருக்கிறது. அங்கு இருந்துக் கொண்டு மகனைத் தேட துவங்குகிறார்கள். மீதம் என்ன என்பதை படத்தில் பார்ப்பது சுவாரசியத்தைத் தரும். ஹிட்ச்காக்கின் தரமான படங்களில் இதுவும் ஒன்று. திரில்லர் படங்களில் சுவாரசியமான விசயமாக ஒன்று இருக்கும். படத்தின் முதல் பாதியில் கதைக்கு சம்பந்தமில்லாதது போல் வரும் விசயங்களை இரண்டாம் பாதியில் கதைக்கு பயன்படுத்துவதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். அது போல் இந்தப் படத்திலும் சில விசயங்கள் உள்ளன. குறிப்பாக படத்தில் டைட்டில் கார்டு போடும் போது காட்டும் விசயம் தான் படத்தின் ஆணி வேரே. அது எப்படி என்று தெரிய வரும் போதுதான் இயக்குனரின் சாமர்த்தியம் புரியும்.

படத்தின் நாயகியை ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஹிட்ச்காக் படங்களின் நாயகிகள் குறித்து மட்டும் தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். இந்த படம் வந்த காலத்தில் பெரிய ட்விஸ்ட்டுகளாக கருதப்பட்டவைகள் நமக்கு சாதாரணமாக தெரியும். அது படத்தின் பிரச்சனை இல்லை. அது போன்ற எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்த்தால் கட்டாயம் இரசிப்பீர்கள்.