To Catch a Thief (1955)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் எம்ஜியார் போல நடிக்க வரும் நாயகிகளிடம் தொடர்ந்து இரண்டு படங்களுக்கு மொத்தமாக கால்சிட் வாங்கி வைத்துக் கொள்வார் போல் தெரிகிறது. ஏன் சொல்கிறேன் என்றால் அவர் வரிசையாக எடுக்கும் படங்களில் கவனிக்கையில் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஒரே கதா நாயகியை பயன்படுத்தும் பழக்கம் இருப்பது தெரியவருகிறது. கதா நாயகனைப் பற்றி கேட்டீர்களேயானால் மன்னிக்கவும் அதெல்லாம் என் கண்களில் படாது. சரி படத்திற்கு வருவோம்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லரின் நாசி படைகளாம் பிரான்சு கைப்பற்றப்பட்ட போது, அங்கு ஆளும் இராணுவத்திற்கு எதிராக பல இரகசிய அமைப்புகள் இயங்கி வந்தன. திறமையான திருடன் ஒருவனும் திருட்டிற்காக கைதாகி சிறைக்கு சென்று அங்குள்ள போராளிகளுடன் பழகி தனது திறமையை போராட்டத்திற்கு பயன்படுத்துகிறான். திருந்தி திராட்சைத் தோட்டம் போட்டு அமைதியாக வாழ்ந்து வருகிறான். அவன் திருந்தி 15 வருடங்களுக்கு பிறகு ஊரில் பல நகைகள் கொள்ளைப் போகின்றன. அத்தனைத் திருட்டும் திருந்தி வாழும் திருடனின் முறைகளுடன் ஒத்துப் போகிறது.

பூனையைப் போல் வீட்டிற்கு மேலே ஏறி சத்தம் வராமல் பதுங்கி பதுங்கி இருட்டினை சரியாக பயன்படுத்தி திருடுவதான் இத்திருடனுக்கும் “கேட்” என்று பெயருண்டு. திருடு போவது தொடரவும் போலிஸ் திருந்தி வாழ்பவனை கைது செய்ய வருகிறது. அவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிக்கும் நாயகன் தன் சகாக்காளை சந்தித்து அவர்களுக்கு தெரிந்ததை விசாரித்து ஒரு முடிவுக்கு வருகிறான். தன் அடையாளத்துடன் திருடுபவனை பிடித்து கொடுத்தால் மட்டுமே தான் தப்பிக்க முடியும் என அதற்கான வேலைகளில் இறங்குகிறான்.

இன்னொரு பக்கம் அமெரிக்காவில் இருந்து நாடு நாடாக சுற்றி வரும் அம்மாவும் மகளும் பல கோடி மதிப்பிலான நகைகளுடன் தங்கி இருப்பதை அறிந்து, புது திருடன் நிச்சயம் அவர்கள் நகைகளை திருட வருவான் என அவர்களை நெருங்க போலி அடையாளத்துடன் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்கிறான்.

எப்போதும் தனது சொத்திற்காக தன் பின்னே அலையும் ஆண்களை மட்டுமே பார்த்திருந்த அந்தப் பெண்ணிற்கு நாயகனின் குணம் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் அவன் சொல்லிக் கொள்வது போலி அடையாளம் என்பதும் அவன் ஒரு பிரபலமான திருடன் என்பதும் அவளுக்கு தெரிந்திருக்கிறது. அதை சொல்லிக் கொள்ளாமலே அவனுடன் நெருங்கி பழகுகிறாள். அம்மாவிற்காக வேண்டா வெறுப்பாக அவனுடன் செல்வது போல் சென்று விட்டு, நச்சென்று கிஸ்ஸடிப்பதாகட்டும், அடுத்த முறை தன்னை ஏன் தொடுவதில்லை என்று கேட்டதற்கு நேற்று கொடுத்த முத்தம் என சொல்லும் நாயகனிடம் அது நான் கொடுத்தது என மல்லுக்கட்டும் இடமாகட்டும் 60 வருடங்கள் கடந்தும் ரசிக்க வைக்கிறது.

 ஒருபக்கம் தன்னை சந்தேகப்பட்டு துரத்தும் போலிஸ், மறுபுறம் தன் பெயரைச் சொல்லி திருடும் புது திருடன், இடையில் தான் திருடன் என தெரிந்தும் தன்னை காதலித்து தொல்லை செய்யும் பனக்கார யுவதி.இவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு எந்த நேரத்திலும் எதற்கும் தயாராக இருக்கும் நாயகன். ஒவ்வொரு இடத்திலும் இவன் எடுக்கும் சமயோசித முடிவுகள் வியக்கக் கூடியவை.

இன்னொன்றை சொல்ல மறந்து விட்டேன். நாயகனை அதாவது அசல் திருடனை ஒருதலையாக காதலிக்க முயலும் இன்னொரு பெண் பாத்திரமும் இந்தப் படத்தில் உண்டு. என்ன மிகச்சிறிய பெண். இரண்டு பெண்களுக்கும் இடையே போட்டி வேறு நடக்கும். காதல் காட்சிகளை கலந்திருந்தாலும் படம் எங்கும் போரடிப்பதில்லை. எங்கும் தேங்காமல் செல்வதால் எந்த அலுப்பும் ஏற்படுவதில்லை.

தமிழில் எடுத்திருந்தால் ஜெய்சங்கரை வைத்து எடுத்திருக்கலாம். தற்போது யாரும் இவ்வளவு மெச்சூர்டாக இருக்க மாட்டார்கள். மாதவன் ஒத்து வரலாம். அதைப் பற்றி நமக்கென்ன? படத்தில் அதிகம் காதல் தொடர்பான காட்சிகள் வந்து விடுவதால் வழக்கமான படபடப்பு இல்லாமல் போகிறது. அதை மட்டும் எதிர்பார்க்காமல் பார்த்தால் சிறப்பான படம்தான். மீண்டும் சொல்கிறேன். வழக்கமான ஹிட்ச்காக் படங்களில் இருக்கும் வேகம் இந்தப் படத்தில் குறைவுதான். அதற்காக போரடிக்காது. அழகான காதல் காட்சிகள் இருக்கும். பார்க்க வேண்டிய படம். படத்தின் இணைப்பு