Rear Window (1954)- Hitchcock Movie – விமர்சனம்

Peeping Tom என்று ஒரு சொலவடை உண்டு. கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பவரை இப்படி சொல்வது வழக்கம். உண்மையில் இதன் பின்னனியில் கொஞ்சம் விவகாரமான சமாச்சாரம் உண்டு. அதைப் பற்றி கூகுளில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஹிட்ச்காக் இந்த கதைக்களத்தில் எடுத்த ஒரு படத்தைப் பற்றித்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சொல்லப் போனால் இதே மாதிரி பல படங்கள் பல மொழிகளில் வந்து விட்டன. தமிழில் கூட நிழல்கள் ரவி தன் மனைவியை கொலை செய்வதை எதிர்வீட்டில் ஒரு பெண் கேமராவில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்வதாக ஒரு படம் வந்திருக்கும். அதே களம் தான். ஆனால் கொஞ்சம் ஜனரஞ்சகமான படம் இது. விரிவாக பார்ப்போம்.

ஜெஃப் ஒரு தொழில்முறை போட்டோகிராஃபர். திருமண வயதை கடந்தும் நாடு நாடாக சுற்றிக் கொண்டிருப்பதால் தனக்கு துணையே வேண்டாம் என்று இருக்கிறார். ஒரு விபத்தில் ஒரு கால் முறிந்து ஒரு அபார்ட்மெண்டில் தங்கி இருக்கிறார். அவரைக் காண தினசரி இருவர் வருவார்கள். ஒருவர் காப்பீடு நிறுவனத்தால் அனுப்பப்படும் நர்ஸ், காலையில் வந்து உடல் நலத்தை பரிசோதித்து விட்டு, மசாஜ் செய்து விட்டு செல்வார். ( நம் நாட்டில் இது போல் நர்ஸை வைத்து கவனிப்பார்கள் என்றால் மெடிக்கல் இன்சூரன்ஸ் பலர் எடுப்பார்கள் என நம்புகிறேன்). இன்னொருவர் ஜெஃபின் காதலி, ஜெஃப் மறுத்தாலும் அவரை திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் நவயுக மங்கை. தினசரி இரவு வருவார். திருமணம் குறித்து பேசி சண்டைப் போட்டுக் கொண்டு செல்வார்.

ஜெஃப்க்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு எதிர்குடித்தனங்களை வேடிக்கை பார்ப்பதுதான். கடுமையான கோடைப்புயல் காரணமாக அனைவரது வீட்டின் ஜன்னலும் திறந்திருப்பது ஜெஃப்க்கு வசதியான ஒன்றாகி விடுகிறது. எதிரே இருக்கும் ஒவ்வொருவருக்கும் தானாக ஒரு பெயர் சூட்டி அவர்களது நடவடிக்கையை கவனித்து வருகிறார் ஜெஃப். ஒரு நடன மங்கை, ஒரு பியனோ இசைக் கலைஞர், அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்ளும் தம்பதியினர், புதிதாய் திருமணமான இளம் ஜோடி என அனைவரது நடவடிக்கைகள் மட்டுமே ஜெஃபின் ஒரே பொழுது போக்கு.

ஒரு நாள் இரவு பலத்த மழையில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது. யாருடையது என்று தெரியவில்லை. சண்டைப் போட்டுக் கொள்ளும் தம்பதியினரில் அந்தக் கணவன் மூன்று முறை மழை என்றும் பாராமல் கையில் பெட்டியுடன் எங்கோ சென்று வருகிறான். அடுத்த நாள் பார்க்கையில் அவன் மனைவி வீட்டில் இல்லை. இன்னொரு பெரிய பெட்டியும் வீட்டிலிருந்து வெளியேறுகிறது. ஜெஃப்க்கு அவன் தன் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் கொண்டு போயிருப்பான் என சந்தேகம்.

தனது போலிஸ் நண்பனை அழைத்து விவரங்களை சொல்கிறான். முதலில் நம்ப மறுத்தாலும் ஜெஃப்க்காக சில விசாரனைகளைச் செய்ததில் அவன் மனைவி விடியற்காலை ஊருக்கு சென்று விட்டதாக ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆனாலும் ஜெஃப்க்கு மனம் கேட்கவில்லை. தொடர்ந்து அவனைக் கண்காணிக்கிறான். இதற்கு தினசரி அவனை சந்திக்க வரும் இரண்டு பெண்களும் உதவுகிறார்கள். இருக்கும் இடத்தை விட்டு சக்கர நாற்காலியின் உதவியுடன் மட்டுமே நகர முடிகிற ஜெஃப் கொலை நடந்திருக்கும் என தீவிரமாக நம்புவதுடன் அதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறான்.

கொலை நடந்திருக்குமா? ஜெஃப் கண்டு பிடித்தாரா? என்பதை படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்வது நல்லது. கொலை நடந்ததாக சந்தேகிக்கப் படும் வீட்டில் மட்டுமல்ல, மற்ற வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளும் கதையை நகர்த்திச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு இவர்கள் கொலையை கண்டுபிடிக்க முயலும் போது, கீழ்வீட்டில் தனிமையின் காரணமாக ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துக் கொண்டிருப்பாள். ஒரே நேரத்தில் இரண்டு விசயத்தையும் கவனிக்க வேண்டி இருக்கும்.

ஹிட்ச்காக் என்னதான் திரில்லர் கதைகளை படமெடுப்பவராக இருந்தாலும் அவருக்கும் பாலச்சந்தருக்கும் நிறைய ஒற்றுமைகளை பார்க்க முடிகிறது. இருவரும் சிறந்த கதைகளை எடுத்தாலும் நாடகப்பாணியை விட்டு முழுவதுமாக அவர்களால் வெளியேற முடிவதில்லை. அதுதான் சிக்கனம் என்றாலும் நாடகத்திற்கும் சினிமாவிற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் சினிமாவை நாடகத்தில் இருந்து பிரித்துக் கொண்டுவர இருவரும் தங்களால் இயன்ற வரை முயன்றிருக்கிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது.

அதிலும் இந்தப்படம் 1942ல் வந்த ஒரு சிறுகதை. வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு இதை படமாக ஹிட்ச்காக் எடுத்திருக்கிறார். தமிழில் சிறுகதையை படமாக எடுத்தது என்றால் எனக்கு தெரிந்து “பூ”  படம் ஒன்றுதான். இங்கு நாவல்களையே எடுக்க யாரும் முன்வருவதில்லை. எங்கிருந்து சிறுகதையை எடுக்கப் போகிறார்கள்? இந்தப் படத்தை எடுக்க காரணமான அந்த 13 பக்க சிறுகதையை படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். http://www.miettecast.com/woolrich.pdf

Paramound pictures படம் இது. அதன் வண்ணத்திற்காகவே படத்தை பார்க்கச் சொல்வேன். அதிலும் அந்த நடனமங்கையின் நடன அசைவுகளை படமெங்கும் அள்ளித் தெளித்திருக்கிறார் ஹிட்ச்காக். இதற்கு முன்பு புத்தகத்தில் இருந்து படங்களை ஹிட்ச்காக் எடுத்திருந்தாலும் அங்கங்கு இலக்கியத்தை தனியாக தெரியும்படி டச் செய்திருப்பது இந்தப் படத்தில் தான். நடனமங்கை வீட்டிற்கு வந்த மூவரில் யார் அவளின் காதலனாக இருக்கக்கூடும் என்ற விவாதத்தை இதற்கு சரியான உதாரணமாக சொல்லலாம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.