Dial M for Murder (1952)- Hitchcock Movie – விமர்சனம்

கிரைம் நாவல் மன்னன் ராஜேஸ்குமாருடைய ஒரு நாவலில் இப்படி எழுதி இருப்பார். தினம் தினம் செய்தி தாள்களில் வரும் குற்றங்களை கொண்டே எனது கதைகளை உருவாக்குகிறேன். என்னைப் போலவே செய்தித் தாள்களில் வரும் குற்றங்களை ஆராய்ந்து மாட்டிக் கொள்ளாமல் குற்றச்செயல்களில் ஈடுபட பலர் முயற்சித்து சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு புரிவதில்லை, எந்த குற்றச்செயலையும் நாம் திட்டமிட்ட படி முடிக்கவே முடியாது. எங்கேனும் ஏதேனும் ஒரு தவறிழைப்போம் என்று. அந்த நாவலில் ஆள் மாறாட்டம் செய்து ஒருவனின் சொத்துக்களை அடைய ஒருவனை கொலை செய்து விட்டு அவன் இடத்திற்கு இன்னொருத்தன் வருவான். வந்த பின்னர்தான் அந்த பனக்காரனுக்கு ஊரைச் சுற்றிக் கடன் இருப்பதும், ஒரு கால் இல்லாமல் கட்டைக்கால் வைத்திருந்ததும், பல பெண்களை ஏமாற்றி சிக்கலில் முழித்துக் கொண்டிருப்பதும் தெரியவரும். இந்த நாவலைப் போலவே திட்டமிட்டு குற்றமிழைக்கு ஈடுபடும் ஒருவனுடைய கதைதான் இந்தப் படம்.

ஒருவன் டென்னிஸ் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவன், அப்படி இருக்கும் பொழுது ஒரு வசதியான பெண்ணின் சினேகம் கிடைக்கிறது. காதலிக்கிறார்கள், திருமணமும் செய்துக் கொள்கிறார்கள். நாள்பட நாள்பட எப்போதும் டென்னிஸ் விளையாட்டில் மூழ்கி கிடப்பவனால் மனைவிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. அவளும் சொல்லிப் பார்த்துவிட்டு, ஒரு கிரைம் நாவல் எழுதுபவனுடன் பழக துவங்குகிறாள். இருவருக்குமிடையே தொடர்பு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் இது தவறு என தெரிந்து இருவரும் பிரிகிறார்கள். கள்ளக்காதலன் பிரிந்த அன்றே கணவன் தன் விளையாட்டினை மூட்டைக் கட்டி விட்டு வேலைக்கு செல்லவிருப்பதாகவும், இனி அதிக நேரம் மனைவியுடன் செலவிடப்போவதாகவும் சொல்கிறான்.

ஒருவருடம் அப்படி நன்றாகவே போகிறது. அவ்வபோது அந்த எழுத்தாளரிடம் இருந்து கடிதம் வரும். அதை படித்து விட்டு எரித்து விடுவாள். ஒரு கடிதத்தை மட்டும் அந்தரங்கமாக பாதுகாத்து வருகிறாள். ஒருமுறை கைப்பையுடன் சேர்த்து அது திருடு போகிறது. திரும்ப அந்த கைப்பை கிடைத்தாலும் கடிதம் கிடைக்கவில்லை. அந்த கடிதம் வேண்டுமென்றால் இவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்று மிரட்டல் கடிதம் வருகிறது. சொன்ன முறையில் பணம் அனுப்பியும் கடிதம் திரும்ப கிடைக்கவில்லை. இதையெல்லாம் ஒரு வருடத்திற்கு பிறகு தன்னைக் காண வரும் எழுத்தாளனிடம் அந்தப் பெண்மணி சொல்கிறாள். இதுதான் படத்தின் துவக்கம்.

அந்த சமயத்தில் வீட்டிற்கு வரும் கணவன் முன்பு இருவரும் நண்பர்களாக நடிக்க, அவர்கள் வெளியேறிய பின் அக்கணவன் தனது கல்லுரியில் படித்த ஒருவனை அழைக்கிறான். அவன் வீட்டிற்கு வந்த பின் மனைவியின் கள்ள உறவை சொல்லி, தான் தான் மனைவியிடம் அந்தரங்க கடிதத்திற்கு பணம் கேட்டு மிரட்டியவன் என்றும், அப்போதாவது மனைவி என்னிடம் வந்து உண்மையை சொல்வாள் என்று எதிர்பார்த்ததாகவும் சொல்கிறான். அவனுக்கு தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்ல வேண்டும். ஆனால் அவளது சொத்தும் வேண்டும். அதனால் அதற்காக அவனது மனைவியை அந்தக் கல்லூரி நண்பன் கொன்றால் பெரும்பணம் தருவதாக சொல்லி, ஒரு திட்டத்தை விவரிக்கிறான். மிகமிக சிறப்பான திட்டம். அதன் படி கொலை நடந்தால் திருட வந்த யாரோ ஒருவன் கொலை செய்து விட்டு தப்பித்ததாகத்தான் போலிஸ் நினைக்கும்.

இப்போது நமக்குள் யோசித்து பார்ப்போம். நாம் ஒரு திட்டமிட்டால் அந்த திட்டப்படி நாம் நடக்கலாம். நாம் கொலை செய்ய வேண்டியவரும் சூழலும் அப்படியே திட்டத்திற்கு ஒத்துழைப்பார்களா என்ன? திடிரென மழை வரலாம், மின்சாரம் போகலாம், எதிர்பாராமல் யாரேனும் விருந்தாளி வரலாம், அவ்வளவு ஏன் நாம் கொலை செய்ய வேண்டியவரே நாம் செல்வதற்கு முன்பாக வழுக்கி விழுந்துக் கூட செத்து கிடக்கலாம். ஆனால் இப்படி ஏதேனும் ஒன்று நடந்து நாம் கொலை செய்ய முடியவில்லை என்றால் கூட பிரச்சனையில்லை. கொலை செய்ய முயற்சித்தோம் என கைதாக மாட்டோம் என என்ன உத்திரவாதம் உள்ளது?

படத்திலும் திட்டமிட்ட படி கொலை நடக்கிறதா? சொல்ல விருப்பமில்லை. இந்தப் படத்தின் மிக முக்கியமான திருப்பம் அது. அது மட்டுமல்ல, இந்தப் படத்தை பார்க்கும் பொழுது ஒரு விசயத்தை உங்களால் கவனிக்க முடிகிறதா என்று கவனியுங்கள். என்னவென்றால் மிக மிக எச்சரிக்கையாக தனது மனைவிக்கு எதிராக காய் நகர்த்தும் அந்தக் கணவன் செய்யும் சிறு பிழையால் இறுதியாக மாட்டிக் கொள்வான். அது என்ன பிழை என்று எடுத்ததும் உங்களாம் கண்டு பிடிக்க முடிந்தால் உண்மையில் நீங்கள் மிகப்பெரிய அறிவாளி. நான் சுத்தமாக கவனிக்கவில்லை.

துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை விறுவிறுப்பு துளி குறைவதில்லை. படம் முழுக்க ஒரே வீட்டினுள்தான் எடுக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன காட்சிகள் மட்டும் தான் வெளியே எடுத்துள்ளார். காரணம் இந்தப் படமும் பெரும் வெற்றிப்பெற்ற ஒரு மேடை நாடகத்தின் மறு உருவாக்கம். ஹிட்ச்காக் தனக்கு ஒத்து வந்தால் அந்தக் கதையை புத்தகத்தில் இருந்தோ நாடகத்தில் இருந்தோ எடுக்க தயங்குவதே இல்லை. இத்தனைக்கும் இந்த நாடகம் தொலைக்காட்சியிலும் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற ஒன்று. எனக்கு இது போன்ற படங்களை பார்க்கும் பொழுது இத்தகைய விறுவிறுப்பான மேடை நாடகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது.

ஹிட்ச்காக் பட வரிசையில் மிக முக்கியமான, தவற விடக்கூடாத படங்களின் ஒன்று இந்தப்படம். கட்டாயம் பாருங்கள். படத்தின் இணைப்பு