Strangers on a train (1951)- Hitchcock Movie – விமர்சனம்

இந்த படத்தின் தலைப்பை பலர் கேள்விப் பட்டு இருப்பீர்கள். ஏனெனில் இந்தப் படத்தினை தமிழில் சேரன், பிரசன்னா நடிக்க “முரண்” என்ற பெயரில் வெளியிட்டு பலர் பார்த்தும் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த ஆங்கிலப் படத்தில் இருந்து வெறும் பத்து சதவீதம் மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை சொந்தமாக உருவாக்கிய படம் தான் முரண். எனவே இந்தப் படத்தை பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்தது போல் இருப்பது மிக மிக குறைவு.

படத்தின் ஆரம்பம் ஒரு இரயில்வே ஸ்டேசனில். இரண்டு கால்கள் தனித்தனியாக காட்டப்படுகின்றன. அவை இரண்டும் இரயிலில் எதிர் எதிரே அமர்ந்து தவறுதலாக மோதிக் கொண்ட பின் தான் அக்கால்களுக்கு சொந்தக்காரர்களை காண்கிறோம். ஒருவர் புகழ் பெற்ற வளரும் டென்னிஸ் விளையாட்டு வீரர். இன்னொருவர் பெரிய பணக்காரரின் மகன். டென்னிஸ் வீரர் தான் நாயகன். அவரது அந்தரங்க வாழ்க்கைக் குறித்து பத்திரிக்கைகளில் படித்த மற்றொரு சகப்பயணி ப்ருனோ அதைப் பற்றி கேட்டும் பேசிக் கொண்டும் வருகிறார். இறுதியாக ஒரு யோசனை சொல்கிறார்.

அதாவது நாயகனுக்கு மனைவியுடன் வாழப் பிடிக்கவில்லை. எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட துடிக்கிறார். காரணம் இந்தப் பக்கம் ஒரு நல்ல அழகிய பெண்மனியுடன் காதல், அவளின் தந்தை பெரிய அரசியல்வாதி, நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனால் மனைவி விவாகரத்து தரமறுக்கிறார். அதே போல் ப்ரூனோவிற்கு அவரது கண்டிப்பான தந்தையை பிடிக்கவில்லை. யோசனை என்னவென்றால் ஒருவரது வாழ்க்கைக்கு தடையாய் இருப்பவரை மற்றவர் கொலை செய்வது, அப்படி செய்வதன் மூலம் போலிசும் பிடிக்காது, அப்படி பிடித்தாலும் முன்பின் தெரியாத ஒருவரை கொலை செய்ததற்கு எந்த காரணத்தையும் நிருபிக்க இயலாது. எனவே என் தந்தையை நீ கொலை செய், உன் மனைவியை நான் கொலை செய்கிறேன் என்று ப்ருனோ கேட்க, ஜோக்கடிக்கிறான் என நினைத்து சிரித்துக் கொண்டே சூப்பர் ஐடியா என்று சொல்லி விட்டு கிளம்பி விடுகிறான் நாயகன். அவனது லைட்டர் ப்ருனோவிடம் இருப்பதை மறந்து விடுகிறான்.

ஊருக்கு சென்று கேட்டால் மனைவி விவாகரத்து தர மறுப்பதுடன் யார் மூலமாகவோ கருத்தரித்து விட்டு அதற்கு நாயகனை காரணமாக்க முயல்கிறாள். நொந்து போய் நாயகன் ஊர் திரும்புகிறான். அவனுக்கு அப்போது தெரியாது, தான் சொன்னதை சீரியசாக எடுத்துக் கொண்டு ப்ருனோ தன் மனைவியை கொலை செய்ய வந்து கொண்டிருக்கும் விஷயம். ஒரு அம்யூஸ்மெண்ட் பார்க்கில் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகனின் மனைவியை ப்ருனோ கொலை செய்கிறான். எப்படி என்பதை படத்தில் பாருங்கள். கொன்று விட்டு அவளது சோடப்புட்டி கண்ணாடியையும் எடுத்து வருகிறான்.

நகரத்திற்கு வந்து நாயகனை சந்தித்து அந்தக் கண்ணாடியை கொடுத்து இது போல் அவன் மனைவியை தான் கொன்று விட்டதாகவும் தன் தந்தையை நாயகன் கொல்ல வேண்டுமென்றும் கூறுகிறான். போலிசிடம் போவதாக சொல்லும் நாயகனை நீதான் கொல்ல சொன்னதாய் சொல்வேன் என்று மிரட்டுகிறான். இன்னொரு புறம் போலிஸ் நாயகனை நம்பவில்லை. கொலை நடந்த சமயத்தின் போது நாயகனுடன் பயணம் செய்த ஒரே ஒரு பயணியும் குடிபோதையில் தனக்கு எதுவும் நினைவில்லை என்று சொல்லி விடுவதால் போலிசின் சந்தேக வளையம் நாயகனைச் சுற்றி விழுகிறது. அவனை 24 மணி நேரமும் போலிஸ் பின் தொடர்கிறது.

தமிழில் எடுக்கையில் அதிக கதாபாத்திரங்களை பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். இப்படத்தில் நாயகனின் காதலிக்கு ஒரு தங்கை உண்டு. அவளும் கொலை செய்யப்பட்ட நாயகனின் மனைவி போல சோடாப்புட்டி அணிந்திருப்பாள். தமிழில் வில்லனுக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாதது போல காட்டி இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வில்லனுக்கு இந்த தங்கையை பார்க்கும் போதெல்லாம் தான் செய்த கொலை நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்.

தமிழில் பிரசன்னா பேச்சை கேட்டு கொலை செய்ய செல்லும் சேரன் பிரசன்னாவின் அப்பா நல்லவர் என தெரிந்து கொலை முயற்சியை கைவிடுவார். இப்படத்தில் நாயகன் கொலை செய்ய முயற்சிப்பதே இல்லை. தான் நினைத்த படி நாயகன் தன் தந்தையை கொலை செய்ய போவதில்லை என தெரிந்ததும் வில்லன் தான் செய்த கொலையில் நாயகனை சிக்க வைக்க திட்டமிடுகிறான். எப்படி சிக்க வைக்க இயலும்? அதில் இருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையில் முரண் படத்தை பார்த்து விட்டுத்தான் நான் ஹிட்ச்காக்கை குறைத்து மதிப்பிட்டது. என்ன பெரிய த்ரில்லர் என்று. ஆனால் ஹிட்ச்காக்கின் படங்களை பார்க்கையில் தான் புரிகிறது, எவ்வளவு தூரம் ரசிகர்களை சீட்டின் நுனுக்கு கொண்டு வர இயலுமோ அத்தனைத்துரம் இழுத்து வருவதை தன் கடமையாக செய்திருக்கிறார் என்பதை.

படத்தின் பாதியைக் கூட நான் சொல்லவில்லை. போலிஸ் எப்போதும் தன்னைச் சுற்றிக் கொண்டிருக்க, ஏற்கனவே ஒப்பந்தமாயிருந்த டென்னிஸ் மேட்ச்களிலும் விளையாடிக் கொண்டே, வில்லனின் சூழ்ச்சிகளில் இருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி. ஹிட்ச்காக் வரிசையில் மிக முக்கியமான படம். படத்தின் இணைப்பு