Rope (1948)- Hitchcock Movie – விமர்சனம்

பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியர் பற்றி சொல்லும் போது இப்படி குறிப்பிடுவார் “அவரது நாடகத்தின் துவக்கத்திலேயே அத்தனை பேருடைய வாயையும் அடைக்கும் காட்சி இருக்கும். ஏதேனும் ஒரு பெரிய விபத்து, கொடுரமான கொலை இப்படி ஏதாவது ஒன்று. பார்வையாளர்கள் அத்தனை பேரும் இது யார்? எதனால் இப்படி நடக்கிறது? என்று மனதிற்குள் யோசிக்க துவங்கிய பின் நாடகத்தில் கதை துவங்கும்”. இதுவரை நான் ஷேக்ஸ்பியரை வாசித்ததுமில்லை, அவர் கதைகளை கொண்ட படங்களை பார்த்ததுமில்லை. ஆனால் மேற்சொன்ன முறையில் துவங்கிய படமாக நான் பார்த்தது இந்த படத்தைத்தான்.

இதுவரை நாம் பார்த்த படங்களெல்லாம் பிளாக் & ஒயிட். இந்த படம் ஈஸ்ட்மென் கலர். அதிலேயே ஒரு உற்சாகம் கிடைக்கிறது. ஒரு சாலை,  டாப் ஆங்கிளில் தெரிகிறது. அதில் பலர் நடக்கிறார்கள், வாகனங்கள் செல்கிறது. அதனுடன் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்களும் ஓடி முடிக்கிறது. முடிந்ததும் கேமரா அப்படியே திரும்பி ஒரு அப்பார்ட்மெண்டை காட்டுகிறது. அங்கு இரண்டு பேர் ஒரு கயிற்றினால் ஒருவன் கழுத்தை நெறித்து கொல்கிறார்கள்.

தற்செயலாக கோபப்பட்டு நடப்பது போல் இல்லை. திட்டமிட்டு செய்வது நமக்கு புரிகிறது. அவனை கொன்ற பின் இருவரும் அங்கு இருந்த பெரிய மர பீரோவில் அவனை படுக்க வைத்து மூடுகிறார்கள். 8 மணி நேரத்திற்கு பிறகு ஏரியில் போட்டு விடலாம் என முடிவெடுக்கிறார்கள். கொலை செய்த இருவரில் ஒருவன் மிக இயல்பாக இருக்கிறான். கொஞ்சம் கூட பயமோ குற்ற உணர்ச்சியோ இல்லை. இன்னொருவனுக்கு பதட்டமாக இருக்கிறது. நிறைய பயப்படுகிறான். செய்த கொலையை பற்றி அல்ல, அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்யவிருக்கும் காரியங்களை நினைத்து பதட்டமடைகிறான். அடுத்து அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? ஒன்றுமில்லை. ஒரு பார்ட்டி நடத்த போகிறார்கள்.

கொலை செய்து விட்டு பார்ட்டியா என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு இன்னும் அதிர்ச்சி இருக்கிறது. ஒவ்வொன்றாக சொல்கிறேன். முதலில் கொல்லப் பட்டவன் இவர்களுடன் ஒன்றாக பள்ளியில் இருந்து படித்தவன். நெருக்கமான நண்பன். அவனைத்தான் கொன்றிருக்கிறார்கள். அந்த பார்ட்டிக்கு இறந்தவனின் பெற்றோர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவனை திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண் வர இருக்கிறாள். அந்த பெண்ணின் முன்னாள் காதலனும் இறந்தவனுக்கும் கொன்றவர்களுக்கும் நண்பனான ஒருவன் வர இருக்கிறான். இறுதியாக அவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியர் ஒருவரும் வர இருக்கிறார்.

ஹார்வார்டு பல்கலைகழகத்தில் படித்து முடித்து கிளம்புவதற்கு ஒரு ஃபேர்வெல் பார்ட்டி போல் நடத்த திட்டம். இறந்தவனின் உடல் இருக்கும் பெட்டியின் மீது அலங்கரித்து உணவுகளை பரப்புகிறார்கள். யோசித்து பாருங்கள். தன் மகன், தனது காதலனின் பிணத்தின் மீது இருக்கும் உணவை எடுத்து சாப்பிட போகிறார்கள்.

சரி எதற்கு இந்த கொலை என்று கேட்கலாம். காரணம் எதுவுமில்லை என்பதுதான் பதில். உண்மையில் தங்களது மேட்டிமைத்தனத்தினை பரிசோதிக்க, மாட்டிக் கொள்ளாமல் ஒரு கொலை செய்து, அதை ஒரு கலை போல் தத்ரூபமாக செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் அவர்களது எண்ணம். அதற்காக ஒருவனை, அவர்களது நண்பனை தேர்ந்தெடுத்துக் கொல்கிறார்கள். ஒன்று கவனித்தீர்களா? இருவரும் படிக்காத மூடர்கள் அல்ல, ஹார்வார்டில் படித்தவர்கள். அவர்களுக்குள்ளும் மிருகத்தனம் இருக்கிறது.

மேலே கூறப்பட்டவர்கள் இல்லாமல் அந்த வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி. இவ்வளவுதான் மொத்தமாக படத்தில் நடித்தவர்கள். இது வெற்றகரமாக வெளியாகி இருந்த ஒரு மேடை நாடகத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். பெரும் அளவில் வெற்றி பெறவில்லை எனினும் நஷ்டம் இல்லை. ஆனால் நம்மால் ஒரு நொடி கூட படத்தை தவற விட முடியாது.

நான் படத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. சொல்ல மாட்டேன். இது முழுக்க நீங்களாக பார்த்து அனுபவிக்க வேண்டிய படம். யாரை கொன்றோமோ அவர்களுக்கு வேண்டப் பட்டவர்கள் சுற்றி இருக்க, நடுவில் கொன்ற பிணத்தை வைத்துக் கொண்டு ஒரு பார்ட்டி நடத்தினால் எப்படி இருக்கும் என்று யூகித்து பாருங்கள்.

படமும் மிக சிறியதுதான். 80 நிமிடம் முடியும் வரை நம்மால் வேறு எதையும் சிந்திக்க இயலாது. கட்டாயம் பார்க்க வேண்டிய படம். குறும்பட இயக்குனர்கள் இந்த படத்தில் இருந்து மிக சிக்கனமாக எடுக்கக் கூடிய படத்தின் கதையை எழுத முடியும்.படத்தின் இணைப்பு