Notorious (1946 film)- Hitchcock Movie – விமர்சனம்

தமிழ் சினிமாவின் மீது எனக்குண்டான மிகப்பெரிய வருத்தம் இங்கு நாயகிகளை சரியாக பயன்படுத்தாதுதான். எத்தனை விதமான ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவிம் மொத்தமே இரண்டே விதமான நாயகிகள் தான். ஒன்று குழந்தைத்தனம் என சொல்லிக் கொள்ளும் அரை மெண்டல்கள் இன்னொன்று வில்லனுக்கு மகளாக வரும் திமிர் பிடித்தவள்கள். அதைக் கூட சரியாக காட்ட மாட்டார்கள். அந்த விதத்தில் இறுதியாக கந்தசாமி படத்தில் வரும் ஸ்ரேயா பாத்திரம் கொஞ்சம் சரியாக பொருந்தி இருந்தது. அதற்கு சிகையில் இருந்து குரல் வரை இயக்குனர் மெனக்கெட்டு இருப்பார்.

கொஞ்சம் முன்னால் சென்று பார்ப்போமே, மாயாபஜார் படத்தில் சாவித்திரி செய்தது எத்தகைய புது முயற்சி. பெண் உடலில் ஆண் பாத்திரத்தை அதிலும் ரங்காராவின் உடல்மொழியை கொண்டு வந்திருப்பார். அதனால்தான் அவர் நடிகையர் திலகம். மரகத நாணயம் படத்தில் நிக்கி கல்ராணி இதே முயற்சியை செய்து இருந்தாலும் பெரிதாக பாராட்டப்படாமல் போக காரணம் அவர் மற்ற படங்களில் செய்வதற்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போனதுதான். இதற்கு இவ்வளவு தூரம் நாயகிகள் பற்றி பேசுகிறேன் என்றால் இந்த படத்தின் நாயகிதான் நாம் கடைசியாக பார்த்த படத்தின் நாயகி.

அந்தப் படத்தில் ஒரு மன நல மருத்துவராக, பாந்தமாக, பயத்துடனே இருப்பது போல் நடித்தவர் இந்த Notorious படத்தில் அப்படியே வேறு விதமாக திமிராக நடித்திருப்பார். சரி படத்தை பற்றி பார்ப்போம்.

இரண்டாம் உலகப் போர் முடிந்தாலும் நாசிக்கள் மொத்தமாக அழிக்கப்படவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஊடுருவி தங்களுக்குள்ளாக ஒரு குழு அமைத்துக் கொண்டு அடுத்து என்ன விதமான நாச வேலைகள் செய்யலாம் என திட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். அது போல் அமெரிக்காவில் ஒரு மாகாணாத்தில் நாசிக்களுக்கு உதவியாய் இருந்து கைது செய்யப்பட்டு குற்றவாளியாய் தீர்ப்பு எழுதப்பட்டு தண்டிக்கப் படும் ஒருவனின் மகளாக நாயகி கோர்ட்டில் இருந்து வெளிவருவது போல் படம் துவங்கும்.

எங்கு சென்றாலும் போலிஸ் நாயகியை பின் தொடரும். பாதிக்கு மேற்பட்ட நண்பர்களும் உறவினர்களும் தேசத்துரோகியின் மகளுடன் பழக வேண்டாம் என விலக துவங்கி இருப்பார்கள். குடியும் கும்மாளமுமாக இளமை பொங்க வாழ்ந்து வந்த நாயகிக்கு இந்த மாற்றம் இன்னும் அதிகமாக கொண்டாட வேண்டும், குடிக்க வேண்டும் என்றுதான் தூண்டும். அப்படி ஒரு பார்ட்டியில் ஒருவனை சந்தித்து பிடித்து போய் அவனுடன் வெளியே சுற்றப் போவாள். மிக அமைதியாக அவள் உளறல்களையும் சேட்டைகளையும் சகித்துக் கொண்டு வருவான் நாயகன். ஒரு கட்டத்தில் அவன் ஒரு உளவாளி என்பது தெரியவரும். அவனை வெளியேறச் சொல்லி கத்துவாள். அவன் போக் மாட்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளை நாட்டிற்காக ஒரு வேலை செய்ய சம்மதிக்க வைத்து வேறொரு மாகாணத்திற்கு நாயகன் அழைத்து செல்வான். அங்கு சென்று உயர் அதிகாரிகளை சந்திப்பதற்குள் இருவரும் காதலிக்க துவங்கி விடுவார்கள். அவர்களின் நெருக்கத்தை மிக அழகாக காட்சி படுத்தி இருப்பார். போன் பேச செல்லும் நாயகனின் உதடுகளை பேசும் போது மட்டும் விடுதலை செய்வாள்.

உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் தான் நாயகனுக்கு உண்மை தெரிய வரும். நாயகியின் வேலை அவளது தேசத்துரோகி தந்தைக்கு தெரிந்த ஒருவனை காதலிப்பது போல நடித்து அவனிடம் உளவறிந்து வந்து வதுதான். முதலில் அவளுக்கு இதெல்லாம் ஒத்து வராது என எவ்வளவோ மன்றாடி பார்ப்பான். ஆனால் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாயகி மீது தான் கொண்ட காதலை சொல்லாமல் அவளையும் உசுப்பேற்றி இதற்கு சம்மதிக்க வைத்து அவளுக்கும் அந்த வில்லனுக்குமான சந்திப்பை நாயகனே ஏற்படுத்தித் தருவான்.

எல்லாம் திட்டப்படிதான் நடக்கும். ஒன்றைத் தவிர. வில்லன் பழகிய கொஞ்ச நாட்களிலேயே திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பான். நாயகனும் நாயகியும் மனம் விட்டு பேசாமல் பொடி வைத்து பேசி ஈகோவை தூண்டும்படி நடந்துக் கொள்வதே நாயகி & வில்லனின் திருமணத்திற்கு காரணமாகி விடும். அதோடு முடியாது உளவு வேலை. அதன் பின் தான் ஆரம்பமே.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்பதை போலவே படத்தில் யாரும் குரலைக் கூட உயர்த்தி பேச மாட்டார்கள். ஆனால் யார் யார் எவ்வளவு கொடுரமானவர்கள் என்பது திரைக்கதை வழியாகவே விளக்கப்படும். வில்லனுக்கு மரணப்பயத்தை தரும் கூட்டமும் இருக்கும். அதே நேரம் அவனுக்கே பதறாமல் ஆலோசனைத் தரும் அம்மா பாத்திரமும் உண்டு. விடியற்காலையில் தானொரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன் என வந்து சொல்லும் மகனை ஆழமாக பார்த்து சாய்ந்து படுத்துக் கொண்டே சிகரெட் எடுத்து பற்ற வைக்கும் அந்த மூதாட்டியின் ஸ்டைக் கூட கிளாசிக்தான்.

நாயகி அந்த வீட்டிற்கு சென்றதில் இருந்து ஒவ்வொரு நொடியும் நமக்கு அடுத்து என்ன நடக்குமோ, மாட்டிக் கொள்வாளோ, கொன்று விடுவார்களா, தப்பி விடுவாளா என்ற டென்சன் இருந்துக் கொண்டே இருக்கும். அங்குதான் ஹிட்ச்காக் ஜெயிப்பது.

செல்வா பட நாயகிகளுக்கு அடுத்து ஹிட்ச்காக் பட நாயகிகள் தான் மனதை கொள்ளை கொள்கிறார்கள். தாங்கள் காதலிக்கும் நாயகனுக்காக எப்பேர்பட்ட ரிஸ்க்கையும் தயங்காமல் எடுக்கிறார்கள். இந்தப் படத்தில் பாருங்கள். நாயகனுக்காக வில்லனையே திருமணம் செய்து கொள்கிறாள் நாயகி. ஆனால் இறுதியாக நாயகனுடன் சேர்த்து வைத்து விடுகிறார் என்பதால் ஹிட்ச்காக்கை மன்னிக்கிறேன்.

மிக மிக எளிமையான கதைக்களம். நேரான கதையோட்டம். ஆனால் அடுத்து என்ன நடக்குமோ என்று நம்மை நகம் கடிக்க வைப்பதன் முலம் இயக்குனர் ஜெயித்து விடுகிறார். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தின் இணைப்பு