Spellbound (1945 film)- Hitchcock Movie – விமர்சனம்

தொடர்ந்து ஹிட்ச்காக் படங்களை பார்த்து வருகையில் சில படங்களை தவிர்த்து மற்ற படங்களில் குறிப்பாக காதல் வரும் இடங்களில் பொதுப்படையாக ஒரு நூல் தெரிகிறது. இரமணிச்சந்திரனை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழில் பெண்களால் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் முதலிடம். ஆனால் ஒரே கதையைத்தான் பேரையும் சம்பவங்களையும் மாற்றி எழுதுவார். ஏழை அப்பாவி நாயகி, அழகான பனக்கார நாயகன், மோதல், காதல். இதேதான் எல்லா புத்தகங்களிலும் இருக்கும். ஹிட்ச்காக் படங்களில் எனக்கு பொதுவாக தெரிவது நாயகனைத் தாங்கும் நாயகிகள். செல்வா படத்தில் வருவது போலவே இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்சனையில் மன அழுத்தத்தில் சிக்கி இருக்கும் நாயகனை அதில் இருந்து வெளிவர மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பாள் நாயகி. ஆனால் இதை உங்களால் உணர முடியாத அளவு மிகமிக வேறுபட்ட கதைக்களத்தை தேடி பிடிப்பார் ஹிட்ச்காக். ஆனாலும் தினம் ஒன்றாக பார்த்ததினாலோ என்னவோ எனக்கு தெரிந்து விட்டது. சரி இந்த படத்திற்கு வருவோம்.

ஒரு மனநல மருத்துவமனை. எடுத்ததும் ஒரு பெண்ணை காட்டுவார்கள். அவள் பார்க்கும் ஆண்களிடமெல்லாம் கண்டதும் காதல் வயப்பட்டவள் போல பேசுவாள், பார்ப்பதற்கும் அழகாக இருக்கவும் அவள் தான் நாயகி என நினைப்போம். இல்லை அவள் மன நோயாளி. அவளுக்கு சிகிச்சைத் தரும் மருத்துவர் தான் நாயகி. டாக்டர் கான்ஸ்டன்ஸ். இளமையான அழகான மிகவும் பொறுமையான மன நல மருத்துவர். நோயாளியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவர்கள் மன அழுத்தத்தை வெளிக்கொணர்வதில் வல்லவர். அந்த மருத்துவமனையின் டைரக்டர் வயதானதால் ஒய்வு பெற்று வெளியேறி செல்லும் நிலையில் புதிதாக பொறுப்புக்கு வரும் டாக்டரை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள். காரணம் அவர் மிகவும் இளைஞராக தெரிகிறார்.

ஓரளவு படித்தவர்களுக்கே கண்டதும் காதல் வராது. அப்படி வந்தாலும் இது வெறும் பிடித்தல் தான், ஆளைப் பற்றி எதுவும் தெரியாமல் எப்படி காதலிக்க முடியும் என யோசிப்பார்கள். மன நல மருத்துவம் படித்த நம் நாயகிக்கு புதிதாய் வந்துள்ள டாக்டர் மீது வரும் ஈர்ப்பு ஆச்சர்யமாக இருக்கும். அதே போல் அந்த டைரக்டரும் வந்த முதல் நாளே அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவளை கட்டாயப்படுத்தி வெளியே அழைத்துச் செல்வான். அவ்வளவு ஈர்ப்பு. காரணம் இருவருக்குமே புரியாது. அன்று இரவு இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் போது இருவருக்குமே காதலிக்க துவங்கி விட்டது புரியும். அது அபத்தம் என்றாலும் அது நடந்து விட்டது என்பதை புரிந்துக் கொள்வார்கள்.

அங்கு அவர்கள் இருவரும் முதல் முறையாக முத்தமிட்டுக் கொள்ளும் போது ஒரு ஷாட் வைத்திருப்பார்கள். பாரதிராஜா படங்களில் பார்த்திருப்பீர்கள், நிறைய பக்திப் படங்களிலும் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு கதவாய் திறந்துக் கொண்டே போகும். இதை ஹாலிவுட்டில் இருந்து திருடி விட்டதாக சொல்ல முடியாது. ஏனென்றால் நம் நாட்டில் பல கோவில்களில் பூஜை முடிந்து இப்படித்தான் ஒவ்வொரு திரையாக விலக்கிக் காட்டுவார்கள்.

ஆனால் அன்றுதான் ஒரு உண்மை தெரியவரும். வந்திருப்பவன் உண்மையான டாக்டர் அல்ல. அவரது கையெழுத்து வேறாக இருக்கிறது. விசாரித்தால் அவனுக்கே அவன் யாரென்று தெரியவில்லை. ஏன் அங்கு வந்தான் என்றும் தெரியவில்லை. அவன் யாராக இருந்தாலும் அவனை காதலிப்பதில் இருந்து பின்வாங்க போவதில்லை என நாயகி சொல்ல, தான் ஒரு கொலைகாரனாக கூட இருக்கக் கூடும் தன்னுடன் இருப்பது உனக்கு ஆபத்து என கடிதம் எழுதி வைத்து விட்டு நாயகன் அங்கிருந்து யாரும் அறியாமல் கிளம்பி விடுகிறான். அடுத்த நாள் அவனைத் தேடி போலிஸ் வருகிறது. உண்மையான டைரக்டரை அவன் கொலை செய்திருக்கக் கூடும் என சந்தேகித்து அவனை தேட உத்தரவுகள் பறக்கிறது.

பார்த்த முதல் நாளே காதலித்து, அதை சொன்ன அடுத்த நிமிடமே இந்த உண்மைகள் வெளிவந்து, அடுத்த நாளே பிரிந்தாலும் நாயகிக்கு அவன் மீது நம்பிக்கையும் காதலும் குறையவில்லை. அவனைத் தேடி புறப்படுகிறாள். நான் இது வரை சொன்னது படத்தின் முதல் 20 நிமிடம் தான். நாயகி எப்படி அவனைத் தேடி கண்டு பிடிக்கிறாள் என்பதிலிருந்து உண்மையனா டைரக்டருக்கு என்னவானது என்பதையும் நாயகன் யார் என்ற நினைவுகளையும் எப்படி நாயகி கண்டறிகிறாள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நாடெங்கிலும் தேடப்படும் குற்றவாளியை போலிசுக்கு முன்பே கண்டுபிடிக்க வேண்டும், அதன் பின்னரும் போலிஸ் கண்ணில் படக் கூடாடு, எங்கே செல்வதென்று தெரியாது, நாயகனின் அம்னீஷியாவை எப்படி குணப்படுத்துவது தெரியாது. தான் கொலைகாரனாக இருக்கக்கூடும் என நாயகனே நம்பும் பட்சத்தில் இல்லை நீ நல்லவன் என சொல்லி மேற்சொன்ன அத்தனை பிரச்சனைகளையும் வெற்றிக் கொள்வது சாதாரணா விசயமா என்ன?

நூல் பிடித்தாற் போல நாயகனுக்குத் தோன்றும் சிறுசிறு விஷயங்களை பிடித்துக் கொண்டே அவனை குணப்படுத்த விடாமல் முயற்சி செய்வாள். அதிலும் நாயகனுக்கு வரும் கனவு ஒன்றினை வைத்து மொத்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு பிடிப்பதுதான் படத்தின் மாஸ்டர் பீஸ்.

ஹிட்ச்காக் படத்தை எல்லாம் போனை ஆஃப் செய்து விட்டு, டீவியில் போட்டு பார்த்தால் ஒன்னரை மணி நேரம் நம்மை கதைக்குள் சிறைப்படுத்தி விடும். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தின் இணைப்பு