Lifeboat (1944)- Hitchcock Movie – விமர்சனம்

நம் காலத்தில் நாம் அதிகம் போர்களை சந்தித்ததில்லை. சதாம் உசேனையும் பிரபாகரனையும் வேட்டையாடுவதற்காக நடந்த இன அழிப்புகளை வேண்டுமானால் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போர் குறித்து எத்தனையோ படங்கள் வந்து விட்டன. அதிலும் குறிப்பாக ஜெர்மனியின் நாசிக்களின் கொடுரமுகத்தை காட்டுவதற்கென்றே ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளன. அந்த காலகட்டத்திலேயே சார்லி சாப்ளின் எடுத்த “தி டெக்டெட்டர்” படத்தினை உதாரணமாக சொல்லலாம். அதே காலகட்டத்தில் திரை இயக்கத்தில் ஜாம்பவனாக இருந்த ஹிட்ச்காக் எடுத்த போர் தொடர்பான படத்தினை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம். இதற்கு முந்தைய படமானது அரசாங்கத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம். அது கணக்கில் வராது.

லைஃப்போட், படத்தின் பெயரே மொத்த கதைக் களத்தையும் சொல்லி விடும். பிரிட்டிஷ்காரர்களும் அமெரிக்கர்களும் வந்து கொண்டிருந்த ஒரு படகு ஜெர்மனியரின் யு-போட்டினால் தாக்கப்படுகிறது. யு-போட் என்றால் அண்டர்வாட்டர்போர், நீர்மூழ்கி கப்பலைத்தான் அப்படி சொல்கிறார்கள்.

ஒரு பத்திரிக்கை எழுத்தாளர் தனது உடைமைகளுடன் அந்த உயிர்படகில் தனித்திருப்பதுடம் படம் துவங்குகிறது. கப்பல் மூழ்கியதில் தப்பித்த சிலர் ஒவ்வொருவராக அப்படகில் ஏறுகிறார்கள். மெரைனில் பணிபுரியும் நண்பர்கள் இருவர், காலில் அடிபட்டவர், ஒரு தொழிலதிபர், ஒரு செவிலியர், ஒரு கருப்பினத்தவர், கடைசியாக ஒரு ஜெர்மானியன். ஆம். இவர்கள் சென்ற கப்பலை தாக்கிய கூட்டத்தை சார்ந்தவன். இவர்கள் இல்லாமல் ஒரு பெண்ணும் அவள் குழந்தையும் ஏற்றப்படுகிறார்கள். பாவம் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது.

இப்போது அவர்களுக்குள்ளே குழப்பம், அந்த ஜெர்மானியனை என்ன செய்யலாம் என்று. அவனை கொன்று கடலில் வீசி விடலாம் என்று சிலரும் கைதியாக வைத்திருந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம் என்று சிலரும் சொல்ல, ஓட்டெடுப்ப நடக்கிறது. அவனை கொல்ல வேண்டாம் என முடிவாகிறது. சரி இந்தப் பிரச்சனை முடிந்தது. அடுத்து படகிலேயே இறுதி வரை இருந்து விட முடியுமா? துடுப்பு போடக்கூடிய சிறிய பாய்மரப் படகு. எந்தப் பக்கம் செல்வது? எதை நோக்கி செல்வது என்ற குழப்பம் ஆரம்பிக்கிறது.

அந்த ஜெர்மானியன் தனக்கு வழி தெரியும் என ஜெர்மன் மொழியில் சொல்கிறான். அங்கு இருப்பவர்களில் அந்த எழுத்தாளருக்கு மட்டும் தான் அம்மொழி தெரிந்திருப்பதாம் மற்ற அனைவருக்கும் அவனுக்கும் இடையே டிரான்ஸ்லேட்டராக செயல்படுகிறாள். அவனை நம்பி அவன் சொல்லும் திசையில் செல்ல வேண்டாம் என்பது ஒருவனின் கருத்து. ஆனால் மனிதாபிமானம் மிக்க மற்றவர்கள் அவனை நம்ப நினைக்கிறார்கள்.

இடையில் காலில் அடிபட்டவனுக்கு ஒரு பிரச்சனை. அவனது காலானது ஒரு வியாதியால் பாதிக்கப்படுகிறது. என்ன வியாதி என்றால் இரத்தம் பாயாமல் ஒரு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு/பச்சையாக மாறி வருவது. அப்படியே விட்டால் மொத்த உடலையும் பாதிக்கும் என்பதால் காலை வெட்டி எடுக்க வேண்டிய நிர்பந்தம். அந்த ஜெர்மானியன் தான் ஒரு மருத்துவன் என்றும் தன்னால் அந்த சிகிச்சையை செய்ய முடியும் என்று மற்றவர்களின் உதவியுடன் அவனது ஒரு காலை வெட்டி அவனை காப்பாற்றுகிறார்.

இதன் காரணமாக அவனை அனைவரும் நம்பத் துவங்குகிறார்கள். ஆனால் அவன் அவர்களை ஏமாற்றி வருகிறான் என்பதே உண்மை. அவனிடம் தனியாக அனைத்து சாதனங்களும் இருக்கின்றன. அதை யாருடனும் பகிராமலும் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதையும் மற்றவர்களிடம் மறைக்கிறான். ஒவ்வொருக் கட்டத்தில் அவனது நடவடிக்கை எழுப்பும் சந்தேகத்தின் காரணமாக அனைவரும் ஒவ்வொரு உண்மையாக கண்டறிகிறார்கள். ஏமாற்றப்பட்டது தெரிந்து மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.

12 ஆங்கிரி மேன் படத்திற்கு பிறகு மிக குறைந்த நடிகர்கள் நடித்த படமாக பார்த்தது இப்படத்தினைத்தான். எந்த முக்கிய சஸ்பென்சையும் உடைக்காமல் தான் மேலே கதை சொல்லி இருக்கிறேன். தாரளமாக பார்க்கலாம்.

படத்தின் துவக்கத்தில் எடுப்பாக உடையணிந்து கொஞ்சம் திமிர் கலந்து பேசும் நபர்கள், போகப் போக தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒருவரை ஒருவர் நெருங்குவது இயல்பாக இருக்கும். 90 நிமிட படத்தில் 30 நிமிடங்களுக்கு பிறகு நாம் அந்த படகிற்குள் சென்று விடுவோம்.

இந்த சூழ்நிலையில் மெதுவாக மலரும் காதல், சின்ன சின்ன ஊடல்கள், எங்கோ இருக்கும் குடும்பத்தின் நினைவு, பசி, தாகம், மரண பயம் இதை அனைத்தையும் மிக இயல்பாக நமக்குள் கடத்தி இருப்பார் இயக்குனர்.

படத்தின் துவக்கத்தில் இது போல் கடலுக்குள் மாட்டிக் கொண்ட அனுபவமுண்டா என்றக் கேள்விக்கு ஒருவன் “ஆமாம் 43 நாட்கள் கழித்துத்தான் மீட்கப்பட்டேன்” என சாதாரணமாக சொல்வான். கதையின்படி எத்தனை நாட்கள் கடலுக்குள் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் அவர்களது தோற்ற மாறுதலின் படி குறைந்தது 10 நாட்களாவது இருப்பார்கள்.

படத்தை பற்றி நிறைய பேசலாம். அதில் வரும் காதல் பற்றி தனியாக பதிவு எழுதலாம். ஆனால் பார்க்கும் அனுபவத்தை கெடுத்து விடும் என்பதால் எழுதவில்லை. பாருங்கள். படத்தின் இணைப்பு