Rebecca (1940 film)- Hitchcock Movie – விமர்சனம்

ஹிட்ச்காக் கிட்டத்தாட்ட 7 வருடம் முனைந்து எடுத்த படமென்று இதை சொல்வார்கள். “கிளாசிக்” என்ற வார்த்தைக்கு இந்த படத்தை தாராளமாக உதாரணப்படுத்தலாம். இதற்கு முன்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படங்களின் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைமொழியையும் கதைகளத்தையும் கொண்ட படம் இது.

படத்தின் துவக்கத்தில் ஒரு உயரமான இடத்தில் இருந்து ஒருவர் எட்டி பார்த்து சோகமாக தற்கொலைக்கு முயல்வது போல் நிற்க ஒரு இளம்பெண் வந்து சத்தம் போட்டு அவரை தடுக்கு முனைகிறாள்.அப்பெண் வயதில் மிக இளையவள். அவர் கொஞ்சம் மூத்தவர் ஒரு 35 என வைத்துக் கொள்ளலாம். அந்த பெண்ணை கடிந்துக் கொண்டு அனுப்புகிறார். அந்த பெண் யாரென்றால் ஒரு வயதான பெண்ணிற்கு துணையாக வருவதற்கென சம்பளம் வாங்கிக் கொண்டு வந்திருப்பவள். உடன் வந்து ஊர் சுற்றுகையில் புத்தகம் படித்துக் காட்ட, செஸ், சீட்டு விளையாட இது போன்ற வேலைகளை செய்வதற்கென சம்பளத்திற்கு ஆள் வைத்துக் கொள்வது மேலை நாடுகளில் இயல்பான ஒன்று.

அடுத்த முறை இருவரும் சந்திக்கையில் ஒருவரை பற்றி மற்றொருவர் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த நபர் மிகவும் வசதியான பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், தன் காதல் மனைவியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு வருடமாக ஊர் ஊராக அலைகிறார். இந்த கீழ்த்தட்டு பெண்ணிடம் கோபமாக நடந்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் தன்னுடன் உணவுண்ண அழைக்கிறார், அப்படியே இருவரும் பழகுகிறார்கள். இரண்டு வாரங்களில் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை என்பது இருவருக்குமே தெரிகிறது. ஆனால் வயது வித்தியாசம், பணம் அந்தஸ்து என ஏகப்பட்ட குறுக்கீடுகள். பிரிகின்ற நிலை வருகையில் இருவரும் இணைகிறார்கள். அந்த காட்சி உண்மையில் நன்றாக இருக்கும். அந்த பனக்காரர் மிக எளிமையாக அந்த சூழலை கையாள்வார். உடனே திருமணம். முடித்துக் கொண்டு மணமகனது வீட்டிற்கு செல்லும் போதுதான் அந்த இராஜகுமாரனின் அந்தஸ்து நமக்கே விளங்கும். அவர் குடியிருக்கும் வீட்டை ஸ்டாம்பில் வெளியிடும் அளவு இராஜபரம்பரை.

வீட்டின் ஒவ்வொரு அறையுமே 1000 சதுர அடிக்கு குறையாமல் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அது போன்ற ஒரு வீட்டில் வேலைக்கு கூட போகும் தகுதி தமக்கில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலும் பெண்ணிற்கு இந்த சூழல் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். அதிலும் நாயகனின் சொந்தபந்தத்தில் இருந்து அங்கு வேலை பார்க்கும் அனைவரும் ஏற்கனவே இருந்த முதலாளியின் மனைவியுடன் புதிதாக வந்திருப்பவளை ஒப்பிட்டு பார்ப்பார்கள். சொல்ல மறந்து விட்டேன். அந்த இறந்த முதல் மனைவியின் பெயர்தான் ரிபெகா.

புதிதார் வந்தவளுக்கு ஏற்கனவே இருந்தவள் அளவிற்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் இருக்கிறது, அதே சமயத்தில் தான் ஏதாவது செய்தால் அது கணவனின் கடந்த காலத்தை ஞாபகப்படுத்தி காயப்படுத்தக் கூடாது என்ற அச்சமும் இருக்கிறது. இதற்கு இடையில் அங்கு வேலை பார்க்கும் பெண்மணி மிஸ்ஸஸ் டென்வர். அதற்கு பேசாமல் மிஸ்ஸஸ் கோல்ட்(cold) என்று வைத்திருக்கலாம். ஒரு காட்சியில் கூட சிரிப்பதில்லை. ரிபாகாவை மிகவும் நேசித்த அப்பணிப்பெண்ணால் அந்த இடத்தில் இன்னொரு பெண்ணை அதுவும் மிகவும் ஏழ்மையில் இருந்து வந்திருக்கும் பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக நேரடியாக எதிர்க்கவா இயலும்? ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஊசி ஏற்றுகிறாள். இந்த இடத்தில் இருக்கவோ வாழவோ உனக்கு எந்த தகுதியும் இல்லை, ஓடிவிடு அல்லது செத்து விடு என்பதை சொல்லாமல் சொல்கிறாள்.

இறந்த ரிபெகாவை படத்தில் நீங்கள் புகைப்படத்தில் கூட பார்க்க முடியாது, ஆனால் மொத்த படமும் அவளைப் பற்றிதான் பேசும். அவள் அழகை, தைரியத்தை, விளையாட்டு குணத்தை என்று மற்றவர்களின் நினைவுகளின் வாயிலாக கேட்கும் நமக்கு அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல் தூண்டப் படுகிறது. ரிபெகாவின் உறவினன் என்றொருவன் வருகிறான். அவன் நடவடிக்கைகளும் பேச்சும் அவனுக்கும் ரிபெகாவிற்குமான உறவு குறித்து ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே புதைக்கப்பட்ட ரெபெகாவின் உடல் கடலுக்கடியில் கிடைக்கிறது. அப்படி என்றால் புதைக்கப்பட்டது யாருடைய உடல்? ஏன் அந்த உடலை நாயகன் தன் மனைவியுடையது என்று அடையாளம் கூறினான்? ரிபெகா இறந்தது எப்படி? அவளுக்கும் அவனது உறவினனுக்குமான உறவு எத்தகையது? இந்த உண்மைகளெல்லாம் வெளிப்பட்டனவா? இதை தெரிந்து கொண்ட அந்த புது மனைவி என்னவானாள்? இதையெல்லாம் படத்தில் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது அல்லது விக்கியில் கூட படித்துக் கொள்ளலாம்.

முதலில் பார்க்கும் போது தமிழில் இரண்டு படங்களை நினைவு படுத்தியது. ஒன்று சிகப்பு ரோஜாக்கள், அடுத்து நீங்கள் யூகித்திருப்பீர்கள்

“அத்தனையும் நடிப்பா? சொல்லு லதா சொல்லு”

“இல்லை இல்லை இல்லை, ஆமாம் கோபால் முதலில் நடிக்கத்தான் வந்தேன், ஆனால் உங்கள் தூய்மையான அன்பினைக் கண்டு உண்மையாக காதலிக்க துவங்கி விட்டேன்”

“புதிய பார்வை” படமும் இதுவும் ஒரே கதைக் களம் தான். ஆனால் இரண்டிற்கும் துளி கூட பொருந்தாது. பனக்காரனின் இரண்டாவது காதல் என்பதை தவிர ஒற்றுமை என்று ஒரு விஷயம் கூட கிடையாது. அதிலும் கிளைமாக்ஸ் நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். ரிபெகா எப்படி இறந்தாள் என்பதை உங்களால் யூகிக்க முடிந்தாலும் படம் இப்படி முடிக்கப் படும் என்பதை யூகிப்பது சிரமம் தான். இப்படி கூடவா விசுவாசிகள் இருப்பார்கள் என்று வியந்து போக வேண்டி இருக்கும்.

வழக்கமான ஹிட்ச்காக் படம் போல் இல்லாமல் இது கொஞ்சம் நீள. இரண்டு மணி நேரத்திற்கு மேல் அமர வேண்டும். அதிலும் திடிர் திருப்பங்கள் அதிகம் இல்லாததால் பொறுமையாக இருந்தால் மட்டும் தான் கடைசி அரை மணி படத்தின் சுவாரசியத்தை அனுபவிக்க இயலும். அந்த கால கட்டத்தின் படங்களின் வரிசையில் தரமான கிளாசிக் படம் இது. படத்தின் இணைப்பு